ஒரே நிறுவனத்தில் 84 வருடங்கள்!
வால்டர் ஓர்த்மேன் என்பவர் 84 வருடங்களுக்கு மேலாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார். இந்த ஆச்சர்யமான சம்பவத்தைச் செய்த வால்டரின் வயதும் நூறைக் கடந்துவிட்டது! பிரேசிலின் சான்டா கதரினா மாநிலத்தில் அமைந்திருக்கிறது ‘ரீனக்ஸ் வியூ’ எனும் டெக்ஸ்டைல் நிறுவனம். இதன் பழைய பெயர் ‘ரீனக்ஸ் எஸ்.ஏ’. இதுதான் வால்டர் வேலை செய்கின்ற நிறுவனம்.
சான்டா கதரினாவில் ஜெர்மனியர்கள் அதிகம் வாழ்கின்ற ஊரான பிரஸ்க்யூவில் பிறந்தார், வால்டர். சிறு வயதிலிருந்தே புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார்.
காலணி கூட வாங்க வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த வால்டர், வெறுங்காலுடன் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று கல்வி கற்றார். அதிக நினைவாற்றல் கொண்ட புத்திசாலி மாணவராகப் பள்ளியில் புகழப்பட்டார். குடும்பத்தின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்தபோது, படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.
1938ம் வருடம் ‘ரீனக்ஸ்’ நிறுவனத்தில் வேலை கேட்பதற்காக தனது அம்மாவுடன் சென்றார் வால்டர். அவரது உற்சாகத்தைப் பார்த்து வேலை கொடுத்தனர். அப்போது அவரது வயது 15.
ஷிப்பிங் அசிஸ்டென்ட் எனும் கடைநிலை ஊழியராக வேலை செய்தாலும் தனது முழுத்திறமையையும் வெளிக்காட்டினார் வால்டர்.
வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே பதவி உயர்வு பெற்று, சேல்ஸ்மேனாக மாறினார். முதல் வேலையாக சாவோ பாலோவுக்குச் சென்று ஒரே வாரத்தில் நூற்றுக்கும் மேலான ஆர்டர்களைப் பிடித்து வந்தார். மூன்று மாதங்கள் தொடர்ந்து ஓய்வில்லாமல் நிறுவனம் இயங்கினால்தான் வால்டர் பிடித்துவந்த ஆர்டர்களை உற்பத்தி செய்ய முடியும். அதனால் மேலதிகாரிகளின் மத்தியில் வால்டருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
தான் சந்தித்த ஒவ்வொரு வாடிக்கையாளரையும் தனது நண்பராக மாற்றினார். இந்தப் பயணம் வேலை பார்க்கும் உணர்வையே மறக்கடித்து, ஓர் அனுபவமாக மாறியது. வால்டரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக சேல்ஸ் மேனேஜராக பதவி உயர்வு பெற்றார்.
பொதுவாக பிரேசிலில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஓய்வு பெறும் வயது 65. விருப்பமிருந்தால் ஓய்வுக்குப்பின் வேலையைத் தொடரலாம். வால்டருக்கு வேலையின் மீது பெருங்காதலே இருப்பதால் ஓய்வு வயதைக் கடந்த பிறகும் வேலையை உற்சாகமாகத் தொடர்ந்தார்.
கடந்த 2022ம் வருடம் தனது 100வது பிறந்த நாளை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
அந்தப் பிறந்த நாளின்போது, அவர் வேலைக்குச் சேர்ந்து 84 வருடங்கள், 9 நாட்கள் ஆகியிருந்தது. 84 வருடங்களில் நிறுவனம் மட்டுமல்லாமல், அவர் வாழ்ந்த ஊர், நாடு, உலகம் எல்லாமே மாறுவதைக் கண்டிருக்கிறார். இந்த மாற்றங்களின் வழியாக வால்டர் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயம், மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக்கொள்வதும், காலத்துக்கு ஏற்ப நம்மை மேம்படுத்திக் கொள்வதும்தான்.
த.சக்திவேல்
|