மீண்டும் பிரசாந்த்!



மகன் உயர வேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாளை செலவிடுபவர் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். இவரது மகன் பிரசாந்த் இளம் நாயகனாக அறிமுகமாகி சரசரவென உச்சத்துக்கு சென்று ‘டாப் ஸ்டார்’ ஆக உயர்ந்தார். ஓர் இடைவெளிக்குப் பிறகு ‘அந்தகன்’ வழியாக பிரசாந்த் கம் பேக் தருகிறார். இப்படத்தை இயக்கியிருக்கும் தியாகராஜனை சந்தித்தோம்.

இந்தி ‘அந்தாதூன்’ எப்படி ‘அந்தகன்’ ஆக மாறுச்சு?

‘அந்தாதூன்’ இந்தியில் மிகப் பெரிய வெற்றிப் படம். 1000 தியேட்டர்களில் வெளியாகி பெரிய  வசூலாச்சு. மொழி தெரிய லைன்னாலும் சீனாவில் சுமார் 4000 தியேட்டர்களில் வெளியாகி 700 மில்லியன் டாலர் கலெக்‌ஷன் பண்ணுச்சு. 3 தேசிய விருதுகளை தட்டித் தூக்குச்சுஅந்தப் படத்தை பிரசாந்த் ஐதராபாத்தில் பார்த்துவிட்டு புகழ்ந்து பேசினார். நானும் மும்பையில் படம் பார்த்தேன். அது பியாேனா வாசிப்பவரின் கதை. பிரசாந்துக்கு பியானோவை அற்புதமா வாசிக்கத் தெரியும். அதனால் அந்தக் கதை அவருக்கு பொருத்தமாக இருக்கும்னு நினைச்சேன்.

அதுமட்டுமல்ல, லேடி கெட்டப்ல நடிச்ச ‘ஆணழகன்’, ஹாரர் படமான ‘ஷாக்’ என பல டிரெண்ட் செட்டிங் படங்கள் பண்ணியவர். ‘அந்தாதூன்’ படம் பார்த்ததும் பிரசாந்துக்காகவே ஏன் வாங்கிப் பண்ணக்கூடாதுன்னு ரைட்ஸ் வாங்க முயற்சித்தேன்.ஆனால், பெரிய போட்டியே இருந்துச்சு. பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் அந்தப் படத்தோட ரைட்ஸ் ரேஸ்ல இருந்தாங்க. அதிக விலை கொடுத்து நான் வாங்கினேன்.

அது நேர்த்தியான, நிறைய டுவிஸ்டுள்ள படம். ரசிகர்களை என்கேஜ்டாக வெச்சிருக்கும். எங்களிடம் ரைட்ஸ் இருப்பதை கேள்விப்பட்ட பிரபல தமிழ் இயக்குநர்கள், நடிகர்கள் நாங்கள் பண்ணுகிறோம் என்று  கூட அப்ரோச் பண்ணினார்கள்.

தமிழுக்காக என்னென்ன மாற்றங்கள் செய்தீர்கள்?

ரீமேக் படத்தோட வெற்றி என்பது ஒரிஜினல் ஸ்டோரியைக் கெடுக்காம பண்ணுவதில்தான் அடங்கியிருக்கு. பார்வை இல்லாதவராக நடிப்பது சவால். அதுக்காகவே பிரசாந்த் பெரியளவில் பயிற்சி  எடுத்துக்கிட்டார். கதைக்களம், திரைக்கதையை கெடுக்காம எப்படி செய்யலாம் என்று பார்க்கும்போது காஸ்டிங் முக்கியம். அப்படி சின்னச் சின்ன கேரக்டர்களுக்குக் கூட பெரிய நடிகர்களை உள்ளே கொண்டு வந்தோம்.

சமுத்திரக்கனி, யோகிபாபு, கார்த்திக் முத்துராமன், மனோபாலா, ஊர்வசி, சிம்ரன், ப்ரியா ஆனந்த், விஜய் ஆனந்த், வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், பூவையார், பெசன்ட் ரவி, ஆதேஷ் பாலா உட்பட பலர் இருக்கிறார்கள்.ஊர்வசி எங்கூட ‘கொம்பேறி மூக்கன்’ல ஹீரோயினாக பண்ணியவர். அவர் பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். 

அவருக்காகவே அவர் கேரக்டரை விரிவாக்கம் பண்ணினேன். யோகிபாபுவும் அப்படித்தான். கே.எஸ்.ரவிக்குமார் கேரக்டர் சர்பிரைஸாக இருக்கும். பிரசாந்த் ஜோடியா சிம்ரன் 7 படங்கள் பண்ணியவர். இது 8வது படம். அவருடைய பெர்ஃபாமன்ஸுக்கு விருது கிடைக்கலாம்.

சந்தோஷ் நாராயணன் மியூசிக்ல என்ன ஸ்பெஷல்?

தனக்கென தனி பாதை அமைச்சுக்கிட்ட பிரமாதமான மியூசிக் டைரக்டர். மியூசிக் முக்கியத்துவம் உள்ள படம் என்பதை புரிஞ்சு பண்ணினார். பியானோ கதை என்பதால் ஒரிஜினல் பியானோ ஸ்கோரிங் தேவைப்பட்டுச்சு. அந்தப் போர்ஷனை லிடியன் நாதஸ்வரம் வாசிச்சார். கார்த்திக் இருப்பதால் இளையராஜா சாரின் 3 பாடல்களை ரைட்ஸ் வாங்கி யூஸ் பண்ணினோம். ‘அமரன்’ படத்துலருந்தும் ஒரு பாடல் யூஸ் பண்ணியிருக்கோம்.

கேமராமேன் ரவி யாதவ் பாலிவுட்ல பிசியானவர். இந்தியில் அவர் ஒர்க் பண்ணாத ஆர்ட்டிஸ்ட் இல்லைன்னு சொல்லுமளவுக்கு எல்லோருடனும் ஒர்க் பண்ணியவர். பிரசாந்த் நடிச்ச ‘செம்பருத்தி’, ‘காதல் கவிதை’ படங்கள் பண்ணியவர். இது கேமராவுக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் ஸ்பெஷல் கேமரா, லென்ஸ் என டெக்னிக்கலாக பல புது அம்சங்களைப் புகுத்தி படத்தை வேற விதத்துல கொண்டு போனார்.

ஆர்ட் டைரக்டர் செந்தில் ராகவன். பிரம்மாண்டமான செட் போட்டார். நானும் ஆர்ட் டைரக்டர் என்பதால் ‌நான் சொல்லியதை ஈஸியா புரிஞ்சு பண்ணினார்.

எடிட்டிங் சதீஷ் சூர்யா. சண்டை ராம்குமார். டான்ஸ் கலா மாஸ்டர். புரொமோ பாடலுக்கு பிரபுதேவா கோரியோ பண்ணினார். அந்தப் பாடலை அனிரூத், விஜய்சேதுபதி பாடியிருக்கிறார்கள். தயாரிப்பு சாந்தி தியாகராஜன்.

இயக்குநர் தியாகராஜனுக்கு நடிகர் பிரசாந்திடம் பிடிச்ச அம்சம் என்ன?

என்னுடைய மகன் என்பதுதான் எப்போதும் மனசுக்குள்ளஓடிட்டே இருக்கும். ஃபயர் ஷாட், சில ரிஸ்க்கான சண்டைக் காட்சி எடுக்கும்போது அப்பாவாக பதட்டப்படுவேன். இதில் கண் தெரியாதவராக நடிக்கும்போது படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவது என நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.

அடுத்து, நான் என்ன சொன்னாலும் அப்பா, தன் மகனை விட்டுக்கொடுக்காம பேசறார் பாருங்கன்னு சொல்லுவாங்க. அவர் சிறந்த நடிகர் என்பதை பல படங்களில் நிரூபிச்சிருக்கிறார். ‘ஆணழகன்’ லேடி கெட்டப், ‘தமிழ்’ல ஆக்‌ஷன், ‘ஷாக்’ல ஹாரர், ‘ஜீன்ஸ்’,  ‘பொன்னர் சங்கர்’ல டபுள் ஆக்‌ஷன் என பல ஜானர்ல படங்கள் பன்ணியவர்.

கிராஃபிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட். இந்தப் படத்தோட கிராஃபிக்ஸ் ஒர்க்ல எனக்கு ஹெல்ப்ஃபுல்லா இருந்திருக்கிறார். அவர் திறமை எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். ‘வைகாசி பொறந்தாச்சு’ ஹிட்டுக்குப் பிறகு சிவாஜி சார் ‘அன்னை இல்ல’த்துக்கு வரச் சொன்னார். அப்போது ‘நீங்க பெரிய நடிகராக வருவீங்க. 6 மணிக்கு ஷூட்டிங் என்றால் அரை மணி நேரத்துக்கு முன்னாடி மேக்கப் போட்டு ரெடியா இருக்கணும். டைரக்டர் என்ன சொல்றாரோ அதைக்கேட்டு நடிங்க.

நாலைஞ்சு படங்கள் பண்ணியதும் நமக்கு நிறைய விஷயம் தெரிய வரும். அந்த சமயத்துல இயக்குநர் தப்பா பண்றாரேன்னு நினைக்காம டைரக்டர் என்ன சொல்றாரோ அதைப் பண்ணுங்க. என் மகன் பிரபுவுக்குக் கூட அட்வைஸ் பண்ணலை. உங்களுக்கு பண்றேன்’னு சொன்னார்.அதை பிரசாந்த் எப்பவும் ஃபாலோ பண்றார். அவருடைய பங்க்ச்சுவாலிட்டி சினிமாவுல இருக்கிற எல்லோருக்கும் தெரியும். இயக்குநர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்பவர். சுருக்கமாக, டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்.

சீனியர் என்ற அடிப்படையில் இந்த கேள்வி. இப்போது சினிமா மொழி மாறியிருப்பதாக நினைக்கிறீர்களா?

சினிமா எப்போதும் இருக்கும். நான் சினிமாவுக்கு வந்த காலகட்டத்துல மக்களுக்கான பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. சென்னையில இருக்கிறவர்கள் பீச்சுக்கு போவார்கள். வெளியூர் மக்கள் கோயில், குளம்ன்னு செல்வார்கள். 

இதுதான் மக்கள் நடமாடும் இடங்களாக இருந்தன.இப்போது தீம் பார்க், பிக்னிக் ஸ்பாட் என பல என்டர்டெயின்மென்ட் வந்திருக்கு. அந்த பீரியட்லருந்து இப்போது வரை மக்கள் சினிமாவை ஆதரிக்கிறார்கள்.ஷாப்பிங் மாலில் தியேட்டர் இருக்கும்போது படம் பார்த்துவிட்டு ஷாப்பிங் செய்யும் வசதியும் வந்துவிட்டது. இந்திய மக்களின் வாழ்க்கையில் சினிமாவைத்  தவிர்க்க முடியாது.

சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பிறகு எளிதாகவும் இருக்கிறது. கடினமாகவும் இருக்கிறது. ஃபிலிம் காலத்துல இவ்வளவு ரோல்தான் என்று கன்ட்ரோல் பண்ணுவாங்க. டிஜிட்டலில் ஒரு ஷாட்டை பல முறை எடுக்கலாம். ஆனால், பிராசஸ் எல்லாமே ஃபிலிம் பிராசஸ் மாதிரிதான்.இளைஞர்கள் டெக்னாலஜியைக் கத்துக்கிட்டு, பயிற்சி செய்தபிறகு வரணும் என்பது என்னுடைய கருத்து. மொத்தத்துல சினிமா ஃபார்மேட் மாறலாம். ஆனால், சினிமா அப்படி யேதான்இருக்கும்!

எஸ்.ராஜா