வெள்ளிப் பனிமலையின் மீதுலாவி...
அதீத குளிர் காரணமாக ரோத்தங் பாஸ் பனிப் பிரதேசத்தில் கழிவறை பயன்படுத்த வேண்டிய உந்துதலை எல்லோரின் பிளாடர்களும் ஏற்படுத்த... தேடிப்பார்த்ததில் அங்கே கழிப்பறை என்று எதுவுமே இல்லை என்றார்கள். இது அதி முக்கிய பிரச்னை ஆயிற்றே... என்ன செய்வது என்று புரியவில்லை.தூ...ரத்தில் தற்காலிக கழிப்பறை வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். போய்ப் பார்த்தால் இரண்டே இரண்டு இருந்தன. அதில் ஒன்றில் கதவில்லை. தண்ணீரும் இல்லை. மற்றதை அருகிலேயே நெருங்க இயலாதபடி பல பயணிகள் அசிங்கம் செய்துவைத்திருந்தார்கள். ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துபோகிற இடத்தில் முறையான கழிப்பறை வசதிகளை இமாச்சலப் பிரதேச அரசு ஏன் செய்யவில்லை என்கிற கோபமான கேள்வி எழுந்தது. அது மட்டுமல்ல... அங்கே பனிச் சறுக்கு விளையாட்டுக்களில் ஈடுபடுகிறவர்களுக்கு யாருக்கேனும் அடிபட்டு அல்லது மயக்கம் வந்து மருத்துவ உதவிகள் தேவைப்பட்டாலும் ஒரு ஆம்புலன்சோ, முதலுதவிக்கான வசதிகளோ கிடையாது என்பதும் மற்றும் ஓர் அதிர்ச்சித் தகவல்.
நெடுஞ்சாலைகளில் அவசரக் காலங்களில் மரங்களுக்குப் பின்னால் ஆண்கள் சுலபமாக ஒதுங்க, பெண்கள் அப்போதும் கூச்சப்படுவார்கள். அது போல அங்கே ஆண்கள் பெரிய வாகனங்களுக்குப் பின்புறம் சென்று ஒதுங்கினார்கள். யாராவது வருகிறார்களா என்று பார்த்தபடி சில பெண்களும் அதே வழியைத் தொடரவேண்டியிருந்தது. ரோத்தங் பாஸ் செல்கிற இயற்கை உபாதையை அடக்க இயலாதவர்கள், சர்க்கரை நோயாளிகள் பெரியவர்களுக்கான டயப்பர் அணிந்தும், முதலுதவிக்கான அடிப்படையான சில மருந்துகளும் கையோடு எடுத்துச் செல்வது நல்லது.
அந்தப் பிரதேசம் எங்கும் நிரந்தரமான கட்டட அமைப்புகள் எதுவும் கிடையாது. பொருட்காட்சி ஸ்டால்கள் போல டெண்ட் அடித்து தற்காலிக உணவுக் கடைகள் மட்டுமே. நூடுல்ஸ், பிரட் டோஸ்ட், பிரட் ஆம்லெட் போன்றவைகள் கிடைக்கும். மெரீனாவில் பிளாஸ்ட்டிக் ஸ்டூல்களைப் போட்டு தள்ளு வண்டிக் கடைகளில் பஜ்ஜி போட்டுத் தருவதுபோல இந்தக் கடைகளைச் சுற்றிலும் பல வண்ணங்களிலும் ஸ்டூல்கள் கிடக்கும்.
ஆனால், அதில் கவனமாக உட்காரவில்லை என்றால் தரையில் பிடிமானம் அதிகம் இல்லாததால் சாய்த்துவிடும். இந்தி தவிர வேறு எந்த மொழியும் இந்தக் கடைக்காரர்களுக்குப் புரியாது. பொருளைக் காட்டி சைகை மொழியில் பேசிதான் வாங்க வேண்டும். “கித்னே பைசே?” என்று மட்டும் கேட்கத் தெரிந்தால் போதும். ஆனால், சொல்லும் தொகை புரியவில்லை என்றால் மொழி மாற்றிச் சொல்லத் தெரிந்தவர்களின் தயவு தேவை. மாலை ஐந்து மணிக்கு மேல் மீண்டும் மணாலிக்கு மற்றொரு மலைப் பாதையில் இறங்கத் துவங்கினோம். வழியெங்கும் சின்னச் சின்ன ஹோட்டல்களில் ‘டாய்லெட் வசதி உண்டு’ என்கிற போர்டுகளை பெரிய எழுத்துக்களில் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இந்த வழித்தடத்தில் நாங்கள் பயணித்த உலகின் மிக நீளமான (9.2 கிலோமீட்டர்!) குகைப் பாதையைப் பற்றிச் சொல்லவேண்டும். கடல் மட்டத்திலிருந்து பத்தாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது அடல் பிஹாரி வாஜ்பாய் டன்னல். 2000ம் வருடம் இந்தக் குகைப் பாதைத் திட்டம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அரசால் அறிவிக்கப்பட்டது. 2010ம் வருடம் சோனியா காந்தி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. திட்டம் முடிவடைந்து 2020ம் ஆண்டு மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ரூ.3,300 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குகைப் பாதை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருந்தாலும் பாதுகாப்பு அமைச்சகத்தால் கட்டப்பட்டது. மணாலிக்கும் லாஹூலுக்கும் நடுவில் அமைந்திருக்கும் இந்த குகைப் பாதையால் ஐந்து மணி நேர மலைப் பாதைப் பயண நேரம் முப்பது நிமிடங்களாகக் குறைந்திருக்கிறது. பத்து மீட்டர் அகலத்தில் இரண்டு வழிப் பாதைகள் கொண்ட இந்தக் குகைப் பாதையைக் கடக்க பதினைந்து நிமிடங்கள் ஆகின்றன.
பாதை முழுவதும் மின் விளக்குகள் பிரகாசமாக வெளிச்சம் பாய்ச்ச, இந்தப் பயணம் முழுக்க சிறுவர்களும், பெரியவர்களும் உற்சாகத்தில் கூச்சலிடுகிறார்கள்.தரம்சலாவில் நாங்கள் சென்ற மற்றொரு முக்கியமான இடம்... தரம்சலாவிற்கு அருகில் அமைந்துள்ள தலாய் லாமா கோயில். திபெத்திய புத்த மதத்தைச் சேர்ந்த 14வது தலாய் லாமாவின் (தலாய் லாமா என்றால் ‘ஞானக் கடல்’!) வழிபாட்டு இடங்களில் ஒன்று இது. மலைச் சிகரத்தின் மீது அமைந்துள்ள இந்த இடத்திற்கு கேபிள் காரில்தான் செல்லமுடியும்.
அங்கே பெரிய புத்தர் சிலை இருக்கிறது. புத்தத் துறவிகள் ஏராளமாய் வசிக்கிறார்கள். துறவு வாழ்க்கை மேற்கொள்ள விரும்பும் எல்லா வயதினரும் அங்கேயே தங்கி பயிற்சிகள் மேற்கொள்கிறார்கள். மணாலியின் மால் ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் கடைத்தெருவில் நீங்கள் நின்றால் போதும். மற்றவர்களால் தள்ளப்பட்டு, தானாகவே நகர்த்திச் செல்லப்படுவீர்கள்.
சென்னையின் ரங்கநாதன் தெருவை அப்படியே நினைவுபடுத்தும் மக்கள் வெள்ளம்! மிகவும் அகலம் குறைவான சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் கடைகள். இரண்டு புறமும் நடமாடும் மக்களுக்கு நடுவில் வாகனப் போக்குவரத்து வேறு.
பெரும்பாலும் கம்பிளி ஆடைகள், ஷால்கள், கம்பிளி விரிப்புகள், மரத்தாலான அலங்காரப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் என்று கிடைக்கின்றன. சில கடைகளில் பேரம் பேசலாம். சில கடைகளில் கறார் விலை. பயணம் துவங்கியபோது கொடுத்த வாக்குறுதியின்படி பேரன் சைதன்யாவுக்கு இந்தக் கடைத்தெருவில்தான் விளையாட்டுப் பொருள்கள் வாங்கித்தர முடிந்தது.
மணாலியிலிருந்து மீண்டும் சண்டிகார் வந்து அங்கே ஒரு நாள் தங்கி நகரத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு மறுநாள் சென்னைக்கு விமானம் ஏறுவதாக பயணத் திட்டம் போட்டிருந்தோம்.
சண்டிகார் நகரத்தை எங்களில் சிலர் ஏற்கெனவே சுற்றிப் பார்த்திருந்தோம். அதனால் மணாலியிலிருந்து அமிர்தசரஸ் என்கிற அம்ரிஸ்டர் நகரம் சென்றுவிட்டால் அங்கே ஒரு நாள் முழுக்க சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான பொற்கோயில், ஜாலியன் வாலா பாக் நினைவிடம், வாஹா எல்லைப் பகுதி இவற்றைப் பார்த்துவிட்டு இரவுக்குள் சண்டிகார் திரும்பிவிடலாமே என்று நான் ஆலோசனை சொன்னேன்.
கூகுள் மேப் துணையுடன் தூரம், பயண நேரம் இதெல்லாம் பார்த்து, ஓட்டுனர்களிடம் ஆலோசித்தபோது அவர்களுக்கு இந்தப் புதிய திட்டம் மிகவும் பிடித்துப் போனதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று... அவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் தொகை. மற்றொன்று... இருவருக்குமே சொந்த ஊர் அம்ரிஸ்டர். சண்டிகாரில் தங்கி டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் அவர்கள் சொந்த ஊரான அம்ரிஸ்டருக்கு அவ்வப்போதுதான் போய்வருவார்கள்.
புதிய திட்டத்தின்படி ஒரு நாள் தங்க அம்ரிஸ்டரில் ஹோட்டல் அறைகள், பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாஹா பார்டரில் தினமும் நிகழும் தேசியக் கொடி இறக்கும் இராணுவ பேரடுடன் கூடிய நிகழ்வில் கலந்துகொள்ள விஐபி பாஸ்கள் இவற்றுக்கான ஏற்பாடுகளை எங்கள் ஓட்டுனர்களே உற்சாகத்துடன் செய்தார்கள்.
வாஹா எல்லை இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட கட்டணம் எதுவும் கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் நிகழ்வு துவங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே பொது வழியைத் திறப்பார்கள். அங்கே கூட்டம் அலைமோதும் என்பதால் விஐபி பாஸ் என்கிற ஒரு நடைமுறை இருப்பதாகச் சொன்னார்கள். மணாலியில் ஹோட்டல் அறைகளைக் காலி செய்துவிட்டு ஹடிம்பா தேவி கோயிலுக்குச் சென்றோம். சில படிகள் இறங்கி குகை போல இருக்கும் ஓரிடத்தில் அமைந்திருக்கும் தேவியை தரிசிக்க வேண்டும். ஊரில் கூடுதலாக மழை பெய்து தேவியின் பாதம் நனைந்தால் மணாலி நகரமே அழிந்துவிடும் என்பது மக்களின் ஒரு நம்பிக்கையாம். பெரிய மழை பெய்யும்போதெல்லாம் தேவியின் பாதம் வரை நீர் வந்துவிடக் கூடாதே என்று பதற்றத்துடன் வணங்குவார்களாம்.
(இதுவரை அப்படி நடந்ததே இல்லை!)கோயிலுக்கு வெளியே வந்தபோது, நெற்றியில் ஆரஞ்சு ரிப்பன் கட்டிய சுமார் இருபது இளைஞர்கள் திடீரென்று ‘மோடிஜி ஜிந்தாபாத்’ என்று உற்சாகமாகக் கத்தினார்கள். அன்றைய தினம்தான் நமது பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவித்த தினம்! பதற்றமான ஒரு நாளில் சாலைப் பயணம் செய்வது சரிதானா என்கிற ஒரு பயம் எங்களுக்குள் எட்டிப் பார்த்தது.
(...தொடரும்)
- பட்டுக்கோட்டை பிரபாகர்
|