Car பெண்!



இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எஸ்யூவி வகை கார்களில் ஒன்று, ‘மஹிந்திரா தார்’. முரட்டுத்தனமான தோற்றம்தான் ‘தார்’ காரின் வசீகரித்துக்கும், விற்பனைக்கும் காரணம் என்கின்றனர் நிபுணர்கள். இந்த முரட்டுத்தனமான டிசைனுக்கு பின்னணியில் இருப்பது ஒரு பெண்! அவரது பெயர், ராம்கிருபா ஆனந்தன்; சுருக்கமாக கிருபா. 
‘தார்’ மட்டுமல்ல, மஹிந்திராவின் ‘டியூவி300’, ‘எக்ஸ்யூவி500’, ‘எக்ஸ்யூவி300’, ‘மாரசோ’, ‘கேயூவி100’, ‘எக்ஸ்யூவி700’ மற்றும் ‘பொலேரோ’ ஆகிய கார்களின் டிசைன்களுக்குப் பின்னணியில் இருப்பதும் கிருபாதான். ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் கார் டிசைனிங் துறையில் ஒரு பெண் சாதித்திருப்பது சமீபத்தில்தான் இணைய வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

யார் இந்த ராம்கிருபா ஆனந்தன்?

சிறு வயதிலிருந்தே கார்களின் மீது பெருங்காதல் கொண்ட கிருபா, 1971ம் வருடம் பிறந்தார். லண்டன், பாரிஸ் போன்ற நகரங்களில் நடக்கும் ஆட்டோ ஷோக்களுக்கு செல்வது கிருபாவுக்குப் பிடித்தமான ஒரு பயணம். ஐரோப்பாவின் பெரு நகரங்களின் சாலைகளின் ஓரத்தில் அமர்ந்துகொண்டு, அந்த சாலையில் பீறிட்டுச் செல்லும் லம்போர்கினி, ஃபெராரி  கார்களைக் காண்பதுதான் அவரது முக்கிய பொழுதுபோக்கு. 
தனக்குப் பிடித்தமான துறையிலேயே படிக்கவும் செய்தார். ஆம்; இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான பிட்ஸ் பிலானியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தார். பிறகு மும்பையிலிருக்கும் ஐஐடியின் ஒரு பகுதியாக இயங்கி வரும் ஐடிசி ஸ்கூல் ஆஃப் டிசைனில் சேர்ந்து, மாஸ்டர் ஆப் டிசைன் பட்டத்தைப் பெற்றார்.

டிசைன் குறித்த வலிமையான கல்விப் பின்புலமும், கார்களின் மீதான காதலும் ராம்கிருபாவை கார் டிசைனராக மாற்றியது. ஆம்; தனது 26வது வயதில், அதாவது 1997ம் வருடம், ‘மஹிந்திரா & மஹிந்திரா’ நிறுவனத்தில் கார் இன்டீரியர் டிசைனராக வேலைக்குச் சேர்ந்தார் கிருபா. ஆரம்பத்தில் ‘பொலேரோ’, ‘ஸ்கார்பியோ’, ‘சைலோ’ ஆகிய மாடல்களுக்கான இன்டீரியர் டிசைனிங் புரொஜக்ட் கிருபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ப்ராஜெக்ட் அவரது டிசைனிங் திறனைச் சோதனை செய்வதைப் போல அமைந்தது.

கார்களின் இன்டீரியரை வசீகரமாகவும், அதே நேரத்தில் வசதியாகவும் டிசைன் செய்தார். ஆனாலும், கிருபாவுக்கு உடைய அங்கீகாரம் எதுவும் கிடைக்கவில்லை.
வருடங்கள் ஓடின. 2005ம் வருடம் கிருபாவின் அசாத்திய டிசைனிங் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது. ஆம்; ‘மஹிந்திரா’ நிறுவனத்தின் தலைமை டிசைனராக நியமிக்கப்பட்டார் கிருபா. இந்தப் பதவி ‘மஹிந்திரா’ கார்களின் அனைத்து பகுதிகளையும் சுதந்திரமாக டிசைன் செய்வதற்கான வாய்ப்பை கிருபாவுக்குக் கொடுத்தது.

தலைமை டிசைனராக கிருபா பதவியேற்ற காலத்தில் பிரீமியம் எஸ்யூவி கார்களைத் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கியது, ‘மஹிந்திரா’ நிறுவனம்.  என்ன மாதிரியான எஸ்வியூ மாடலை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1,500 பேரிடம் ஆய்வு செய்தது ‘மஹிந்திரா’. கிருபாவும் தனது ‘பஜாஜ் அவெஞ்சர்’ பைக்கை எடுத்துக்கொண்டு மணாலி முதல் ஸ்ரீநகர் வரை பயணம் செய்து, தனிப்பட்ட முறையில் கார் வாடிக்கையாளர்களைச் சந்தித்து அவர்களது விருப்பங்களைத் தெரிந்துகொண்டார்.

2007ம் வருடம் இருபது பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து புது வகையான எஸ்யூவி காரை டிசைன் செய்ய ஆரம்பித்தார். அப்போது உலகிலேயே புதிதாக ஒரு மாடல் காரை டிசைன் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒரே பெண் டிசைனர் கிருபாதான். 

சிறுத்தையை மாடலாக வைத்து எஸ்யூவி காரை டிசைன் செய்ய ஆரம்பித்தார். கிருபா மற்றும் அவரது குழுவினரின் நான்கு வருட கடின உழைப்புக்குப் பிறகு நிறைவான வடிவத்தை அடைந்தது அந்த கார். அதன் மாடலின் பெயர், ‘எக்ஸ்யூவி500’. 2011ல் ‘எக்ஸ்யூவி 500’ வெளியாகி, விற்பனையில் சக்கைப்போடு போட்டது.

கிருபாவின் டிசைனிங் சாதனைகளில் ஒன்றாகவும், இந்திய எஸ்யூவி வகை கார்களுக்கான பெஞ்ச்மார்க் டிசைனாகவும் ‘எக்ஸ்யூவி500’ கருதப்படுகிறது. தவிர, இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யூவி பிரிவில் பெரிய கேம்சேஞ்சராக ‘எக்ஸ்யூவி500’ மாறியதற்கு கிருபாவின் டிசைன்தான் முதற்காரணம் என்கின்றனர். மட்டுமல்ல, இதுவரை தயாரிக்கப்பட்ட இந்தியன் எஸ்யூவி வகை கார்களில் சிறந்த ஒன்றாக ‘எக்ஸ்யூவி500’ மாடல் இருப்பதற்கு காரணமும் கிருபாவின் டிசைன்தான்.

நாளுக்கு நாள் கார் டிசைனிங்கில் கிருபாவின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டே சென்றது. 2019ம் வருடத்தில் ‘மஹிந்திரா’ நிறுவனத்தின் முதன்மை டிசைனராக நியமிக்கப்பட்டார் கிருபா. ஆனாலும் சமீப நாட்களில்தான் ‘தார்’ காரை டிசைன் செய்தது ஒரு பெண் என்று ராம்கிருபாவின் பெயர் சமூக வலைத்தளங்களில் பரவலாகியது. 

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ‘மஹிந்திரா’ நிறுவனத்திலிருந்து வெளியேறிய கிருபா, ‘கிரக்ஸ் ஸ்டூடியோ’ எனும் டிசைனிங் நிறுவனத்தை சொந்தமாகவே ஆரம்பித்துவிட்டார். அத்துடன் ‘ஓலா எலெக்ட்ரிக்’ வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை டிசைனராகவும் பணிபுரிந்து வருகிறார்.

‘ஓலா எலெக்ட்ரிக்’கின் இரண்டு சக்கர வாகனங்களின் டிசைனிலும், எதிர்காலத்தில் வரப்போகும் நான்கு சக்கர வாகனங்களின் டிசைனிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களிலும் ஒரு முத்திரையைக் கிருபா பதிக்கப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

த.சக்திவேல்