முடக்கியது பாஜக... தோண்டுகிறது திமுக!



தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தபின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் குறிப்பிட்ட ஒரு விஷயம் தேசிய அளவில் பேசு பொருளாகி உள்ளது.
“தமிழகம் மட்டுமின்றி பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் காலச்சுவடுகளைத் தேடி கேரள மாநிலத்திலுள்ள முசிறி; ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர், வெங்கி; கர்நாடகத்திலுள்ள ஆந்திர மஸ்கி ஆகிய தொல்லியல் சிறப்புமிக்க இடங்களிலும் இந்த ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்படும். இதற்காக தொல்லியல் துறைக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்...”
இதுதான் இன்று ஹாட் டாபிக்.

அதற்குக் காரணம் முசிறி பட்டண அகழாய்வுதான். ஏனெனில் கேரள வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தால் (KCHR) 2007ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அகழாய்வுப் பணி இது.
ஆனால், 2016ம் ஆண்டு ஒன்றிய அரசை ஆளும் பாஜகவால் இந்த அகழ்வாராய்ச்சிப் பணி முடக்கப்பட்டது!இதுபோல் செய்வது ஒன்றிய அரசுக்கு புதிதல்ல. ஏற்கனவே கீழடி அகழாய்வு இப்படித்தான் மத்திய அரசால் முடக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மீண்டும் கீழடியில் அகழாய்வு செய்து சங்க கால தமிழர்களின் மறைந்த பெருமையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அதுபோல, இப்போது முசிறியிலும் அகழாய்வைத் தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ் ஆர்வலர்களிடையே இப்பணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னே... அடுத்த மாநிலத்தில் நடக்கவிருக்கும் அகழாய்வுப் பணியை தமிழகம் அல்லவா மேற்கொள்ளப் போகிறது?!சரி... முசிறி அகழாய்வு தமிழகத்துக்கு அந்தளவு முக்கியமானதா?

“வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தமிழ்நாடு என்பது பரந்து விரிந்து இன்றுள்ள தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்தியாவின் பெரும்
பகுதியை உள்ளடக்கியதாக இருந்திருக்கும் என்றே கருதுகிறோம். அதில் பட்டணம் நகரம் முக்கியமான துறைமுகமாக இருந்தது...” என்று முசிறி பட்டணத்தில் அகழாய்வு செய்துள்ள தொல்லியல் ஆய்வாளர் செரியன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் பழங்காலத்தை, அதாவது பண்டைய சேர நாட்டின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கான முதன்மை ஆதாரமாக இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியமே திகழ்கிறது. உலகின் செல்வாக்கு மிக்க வணிக வழித்தடங்களில் ஒன்றாகவும், சேர நாட்டின் பிரபல துறைமுகப் பட்டணமாகவும் முசிறி இருந்ததாக சங்க இலக்கிய குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

தென்னிந்தியா, பெர்சியா, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா, கிரேக்கம், சீனா, அரேபியா, ஓமான், ஸ்பெயின், எகிப்து, மத்திய தரைக் கடலில் இருந்த ரோமானியப் பேரரசு... ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மையமாக அக்காலத்தில் முசிறி துறைமுகம் இருந்துள்ளது.

‘பொன்னோடு வந்து கறியோடு பெயரும் வளங்கெழு முசிறி’ என்கிறது சங்கப் பாடல் ஒன்று. வெளிநாட்டினர் முசிறியில் பொன்னைக் கொடுத்துவிட்டு நல்ல மிளகுடன் திரும்புவார்கள் என்பது இதன் பொருள். கிரேக்க, ரோமானிய மக்களைப் பண்டைய தமிழ் நூல்கள் யவனர் எனக் குறிப்பிடுகின்றன. இவர்கள் கலம் என்னும் கப்பலில் பொன்னோடு வந்து மிளகோடு மீளும் வாணிகம் செய்துள்ளனர்.

இரண்டாம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரோமானியப் பேரரசின் வரைபடங்களிலும் முசிறி நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த தகவலுக்கு வலு சேர்க்கிறது. கிரேக்க மொழியில் முசிறியை ‘முஸ்றீஸ்’ என அழைத்திருக்கிறார்கள். ரோமானிய எழுத்தாளர் பிளினி த எல்டர், முசிறி நகரத்தை ‘இந்தியாவின் முதல் சந்தை’ என்று குறிப்பிடுகிறார்.

முசிறி துறைமுகத்தில் கடலோடு கலக்கும் ஆறு சுள்ளியம் பேரியாறு. இதுதான் இப்போது பெரியாறு என சொல்லப்படுகிறது. இந்த ஆற்றின் வழியாக உள்நாட்டுக்குக் கூட கலம் செல்லுமாம். பாண்டிய அரசன் அடுபோர்ச் செழியன் இந்த முசிறியை முற்றுகையிட்டு அங்கு வந்த அழகிய படிமப் பொருட்களைக் கைப்பற்றிச் சென்றான் என்பது புலவர் எருக்காட்டூர் காயங்கண்ணனார் தரும் செய்தி.

சங்க இலக்கியச் சான்றுகள் படி, கொச்சிக்கு வடக்கே 25 கிமீ தொலைவில் இருக்கும் கொடுங்கல்லூர் எனும் ஊரே பண்டைய முசிறி எனும் யூகம் வரலாற்று ஆய்வாளர்களிடையே இருந்து வந்தது. கொடுங்கல்லூருக்கு அருகே உள்ள பட்டணம் எனும் சிறு கிராமத்தில் மணலுக்கடியில் பழங்கால பானை ஓடுகள், வெளிநாட்டு நாணயங்கள், சிறு சிறு மிளிரும் கற்கள் போன்றவற்றை அப்பகுதி மக்கள் அவ்வப்போது கண்டெடுத்து வந்தனர். 

இதனையடுத்து, கேரள வரலாற்று ஆய்வு நிறுவனம் 2007ம் ஆண்டு பட்டணத்தில் அகழாய்வைத் தொடங்கியது.இந்த அகழாய்வில் பட்டணத்தில் ஒரு கடல்சார் வணிக நகரம் இருந்ததற்கான தரவுகள் கிடைக்கத் தொடங்கின. தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சேர மன்னர்கள் கால
நாணயங்கள் வரை பல கலைப்பொருட்கள் கிடைத்தன.

அக்காலத்தில் இந்த துறைமுகத்தில் இருந்துதான் வாசனைத் திரவியங்கள், ரத்தினங்கள், யானைத் தந்தம், பட்டு போன்றவை வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.இது தொடர்பாக இந்த அகழாய்வை மேற்கொண்ட செரியன், “பட்டணம் நகரம் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நுழைவாயிலாக இருந்தது என்று நம்புகிறோம். 

எங்களுக்கு கிடைத்த எலும்புத் துண்டுகளை டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தியபோது, அவை மேற்கு மற்றும் தெற்கு ஆசியப் பகுதி, மற்றும் ஐரோப்பியப் பகுதியில் இருந்து வந்தவர்களின் எலும்புகள் என்பதைக் கண்டறிந்தோம்.

இரும்புக் காலம் முடிந்து, வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், இந்தியாவின் மேற்கில் உள்ள அரேபிய நாடுகள் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்கள், பட்டணம் நகரத்தில் வாணிபம் செய்ததற்கு அடையாளமாக பல வெளிநாட்டு ரத்தினக் கற்களும் முசிறி அகழாய்வில் கிடைத்தன. இப்படியாக இதுவரை 146 நாணயங்களைக் கண்டறிந்தோம். விதவிதமான குடுவைகளும் கிடைத்தன. 

அந்த குடுவைகளைக் கூர்ந்து நோக்கியபோது, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொண்டுவந்த குடுவைகள் அவை என்று தெரிந்தது. அதற்கு சாட்சியாக மேல்பகுதியில் ஒவ்வொரு நாட்டின் பிரத்தியேக அலங்கார வேலைப்பாடுகள் தெரிந்தன. அதேபோல படகுகளைக் கட்டி வைப்பதற்கான இரும்புக் கம்பிகள் கிடைத்தன...” என்கிறார்.

மட்டுமல்ல. ரோமப் பேரரசு காலத்தைச் சேர்ந்த முத்திரை மோதிரமும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோமானியப் பேரரசர் ஆவதற்கு முன்பு அகஸ்டஸ் சீசரிடம் இதுபோன்ற மோதிரம் ஒன்று இருந்துள்ளது.

“ரோமானியர்கள் மிளகைத் தேடி இங்கு வந்தனர். அக்காலத்தில், மேற்குலகிற்கு தங்கத்தைப் போல மதிப்புமிக்கதாக மிளகு இருந்தது. அதனால் மிளகு, ‘கருப்புத் தங்கம்’ என்றும் அழைக்கப்பட்டது...” என்கிறார் கேரளாவின் வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் பி.கே. மைக்கேல் தர்கன்.முசிறி பட்டண அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் முக்கியமானது, அக்காலத்திலேயே கழிவறைகள் கட்டி பயன்படுத்தியுள்ளனர் என்பதுதான்.

‘‘ஆறு பானைகள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்த கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளைக் கண்டறிந்தோம்...” என்கிறார் ஆய்வாளர் செரியன்.இப்படி புகழ்பெற்றிருந்த முசிறி, 14ம் நூற்றாண்டில் திடீரென காணாமல் போனது. அதன் பிறகு துறைமுக வணிகத்தின் முக்கிய மையமாக கொச்சி உருவெடுத்துள்ளது.

ரோமானிய நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த துறைமுக நகரமும் அவர்களின் வரைபடத்தில் இருந்து மறைந்துவிட்டது என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சில வரலாற்றாசிரியர்கள், 1341ல் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்நகரம் அழிந்துவிட்டது என்கிறார்கள்.

இதனிடையே ஒவ்வொரு ஆண்டும் அகழாய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டபோது மலையாள ஊடகங்கள் அதிக முக்கியத்துவத்துடன் அவற்றை விவாதித்து வந்தன. மலையாள அறிவுலகினர் மத்தியில் சங்க இலக்கியப் பாடல்கள் அதிக கவனம்பெறத் தொடங்கின. தமிழகத்தில் கீழடி, அழகன்குளம் போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களுக்கும், பட்டணத்தில் எடுக்கப்பட்ட பொருட்களுக்கும் ஒற்றுமை இருந்ததும் இதற்குக் காரணம்.

பட்டணம் அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு பள்ளி மாணவர்களுக்காக அருங்காட்சியகம் ஒன்றை கேரள வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தியிருக்கிறது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்கு வழிகாட்டி ஒருவரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, கீழடி போலவே முசிறி பட்டண அகழாய்வு முடிவுகளும் சிலருக்கு எரிச்சலைத் தந்தது. குறிப்பாக கேரளத்தின் வரலாற்று மூலத்தை சங்க இலக்கியத்தில் தேடுவது என்பதை, ‘பரசுராமன் கோடாலியை எறிந்து கேரளத்தை உருவாக்கியதாக’ தொன்ம கதை கூறுபவர்கள் விரும்பவில்லை.

முசிறியில் ‘அமணன்’ என்று பழந் தமிழில் எழுதப்பட்ட பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது புத்த மதத்தை தொடர்புபடுத்துவதாக ஆய்வாளர்கள் விளக்கம் தந்தனர். இப்படி கேரளத்தில் புத்த மத தடயங்களை ஆராய்வதும் இந்துத்துவ சார்பு வரலாற்றாளர்களுக்கு உவப்பானதாக இல்லை. இதனால், பட்டணத்தில்தான் முசிறி இருந்தது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், இது ஒரு மோசடியான ஆய்வு என்றும் எழுதி வந்தனர்.

‘இந்த அகழ்வாராய்ச்சிகளின் ஒரே நோக்கம் கேரளாவில் பிராமண பாரம்பரியம் இல்லை என்பதை நிறுவுவதுதான்... (Only motive of these excavations is to es tablish that  there was no Brahmanical Heritage of Kerala)’ என்கிறார் ‘பாரதிய விசார கேந்திர’த்தின் இயக்குனராக இருந்த கே.என்.மதுசூதன் பிள்ளை. இதற்கேற்ப 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, அதுவரை முசிறியில் நடந்த பணிகள் குறித்து விசாரணையைத் தொடங்கியது. செப்டம்பர் 2015ல் இந்திய தொல்லியல் துறை பட்டணத்தில் அகழ்வாராய்ச்சி செய்வதற்கான KCHRன் உரிமத்தை ரத்து செய்தது.

KCHR, முசிறி ஆய்வை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுடனும் தொல்லியல் கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்திருந்த தருணத்தில்தான் முசிறி அகழாய்வு முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்படி ஒன்றிய பாஜக அரசு முடக்கியதைத்தான் மீண்டும் தோண்டத் தொடங்கியுள்ளது திமுக தலைமையிலான தமிழக அரசு!

என்.ஆனந்தி