சிறுகதை - மந்திரம்



இங்க பாரு ராஜி... நான் சொன்னத கேட்காம இப்பத்தான நீ வீடு முழுவதையும் பெருக்கி கூட்டி மாப் போட்டு தொடச்சிட்டு வந்த? அதுக்குள்ள மாடியை கழுவப் போறேன்னு கெளம்புறியே? காய்ச்சல் குணமாகி ரெண்டு நாளைக்குள்ள ஒடம்ப போட்டு இப்படி அலுப்பாக்கிக்கிறது சரியா? மொதல்ல இங்க வந்து உக்காரு. 
இட்லி எடுத்து வச்சிருக்கேன். சாப்டுட்டு, காப்பியையும் குடிச்சிட்டு, ஊட்டுக்கு பொறப்புடு. நாங்க ரெண்டு பேருதான? மீதி வேலைய நான் பார்த்துக்குவேன்...’’ வேலைக்காரப் பெண் ராஜியிடம் வாஞ்சையுடன் பார்வதியம்மாள் கூறுவதைக் கேட்டபடி வந்தாள் ராஜம்.

பக்கத்து வீட்டுத் தோழி. “பார்வதி... ஒனக்கு வரப்போற மருமக ரொம்ப கொடுத்து வச்சவ! பூஜைக்கு பூ வாங்கிட்டு ஒரு முக்கியமான செய்தியை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்...”
சிறு முறுவலுடன் தோழியை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார் பார்வதி. பூத்துக்குலுங்கும் குண்டு மல்லி மற்றும் ரோஜா செடிகளிலிருந்து மலர்களை பறித்து பாதியை ராஜத்திடம் கொடுத்தார்.

‘‘அப்படி என்ன முக்கியமான செய்தி ராஜம்?’’

‘‘எல்லாம் நல்ல செய்திதான் பார்வதி. நம்ம ராஜேசுக்கு நல்ல ஒரு பெண் மனைவியா அமையணும்னு எப்பவும் நீ அங்கலாய்ச்சுகிட்டே இருப்பேல்ல? நல்லா படிச்ச, நல்ல குணமும், அழகும் நிறைந்த, அடக்கமான, எல்லா வகையிலயும் ஒனக்கு ஏத்த மருமக பெண் ஒருத்தியின் விபரம் கிடைச்சது. பேரு கமலி. அவளோட அப்பா ஒரு பெரிய கம்பெனில உயர்ந்த பதவியில் இருக்காராம். அம்மாவும் படிச்சவர்தானாம். ஆனா, வேலைக்கெல்லாம் போகவில்லையாம். ஒரே தம்பிதான். நம்ம ராஜேஷ் மாதிரி இன்ஜினியருக்கு படிச்சிட்டு இப்ப அமெரிக்காவுல மேல் படிப்பு படிக்கிறானாம்.

விசாரிச்ச வரையிலே அவுக குடும்பம் ரொம்பவும் அருமையானதுனு சொல்றாங்க. அவங்களும் நல்ல மாப்பிள்ளை கிடைச்சால் உடனே கல்யாணம் செய்திடுற முடிவுலதான் இருக்காங்களாம்.
நம்ம ராஜேஷ் தம்பிக்கு பொருத்தமான பொண்ணா இருப்பான்னு தோணுது. அவங்களுக்கும் தகவல் சொல்லிட்டு தம்பியையும் கூட்டிட்டு போய் பொண்ணை பார்த்திட்டு வரலாமா? இன்னைக்கி திங்கள். வருகிற புதன்கிழமை நாள் நல்லாயிருக்கு. தம்பிகிட்டயும் கலந்து பேசிட்டு சொல்லு. நானே நாம வருவதை அவங்ககிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிடுறேன்...’’ பட
படத்தாள் ராஜம்.

‘‘நீ சொன்னா எல்லாம் நல்லதாத்தான் இருக்கும். நான் ராஜேசை ஒப்புக்க வச்சிடறேன். நீ ஆக வேண்டியதை பாரு...’’‘‘அப்ப சரி...’’ ராஜம் கிளம்பினாள்.‘இந்த வரன் நல்லபடி அமைய வேண்டும்...’ இறைவனிடம் வேண்டியவாறே உள்ளே வந்தார் பார்வதி.ஆபீஸ் போக ரெடியாகி வந்தான் ராஜேஷ். ‘‘தம்பி... உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்...’’ அவனுக்கு டிபன் வைத்தபடியே தொடர்ந்தார்: ‘‘ஒனக்கு ஒரு அருமையான வரன நம்ம ராஜம் அத்த கொண்டு வந்திருக்காப்பா...’’ ராஜம் சொன்ன விபரங்களை எல்லாம் ராஜேஷிடம் பகிர்ந்தாள். ‘‘வர்ற புதன்கிழமை நாள் நல்லா இருக்காம். அன்னைக்கி நாம போய் பெண் பார்த்துட்டு வரலாமா?’’

அம்மாவைப் பார்த்தான் ராஜேஷ். ‘‘சரிம்மா... உனக்கு ஏத்த பொண்ணுன்னா எனக்கு ஓகே. புதன் காலைல எனக்கு எம்டியோட ஒரு மீட்டிங் இருக்கு. மதியம் அர நாள் லீவு எடுத்துத்தான் வரணும். பரவாயில்லையா?’’‘‘பரவாயில்லப்பா... அப்படியே பண்ணிக்க...’’புதன் கிழமை விடிந்ததிலிருந்தே பார்வதிக்கு இனம் புரியாத படபடப்பு. 

ராஜத்தின் உதவியுடன் செய்ய வேண்டியதை முடித்தாள்.அலுவலகம் செல்ல வந்த ராஜேஷை மலர்ச்சியுடன் பார்த்தாள். ‘‘மதியம் லீவு சொல்லிட்டு வந்துடுப்பா... மாலை 4 மணிக்கு பொண்ணு வீட்டுல இருக்கணும். ராஜம் அத்தை, அவளோட வீட்டுக்காரர், ஒன்னோட பெரியப்பா, பெரியம்மாலாம் இன்னும் கொஞ்ச நேரத்தில இங்க வந்துருவாங்க. எல்லாருமா சேர்ந்து போகலாம்...’’“சரிம்மா... வந்துர்றேன்...” புன்னகையுடன் ராஜேஷ் அலுவலகம் கிளம்பினான்.

காலையிலேயே வெயிலின் தாக்கம். மின்விசிறிக்கு கீழே பார்வதி அமர்ந்தார்.‘‘அம்மா...’’
குரலை வைத்தே வந்திருப்பது கீரைக்கார அம்மா எனத் தெரிந்தது.விரைந்து சென்று கூடையை அவள் இறக்க பார்வதி உதவினார். குடிக்க சில்லென்று மோர் கொடுத்தார்.
‘‘நன்றி தாயி...’’‘‘அட... சும்மா இரு...’’ என்ற பார்வதி, தேவைக்கும் அதிகமான காய்கறிகளையும் ஒரு கட்டு அரைக்கீரையையும் வாங்கினார்.

‘‘இன்னக்கி நீதான் முதல் போணி தாயி. உன்னோட லட்சுமிகரமான மொவத்த பார்த்துட்டேன். சீக்கிரம் என் கூடை காலியாகிடும்... வர்றேன் தாயி...’’
‘‘வெயில் அதிகமா இருக்கு... பார்த்துப் போங்க...’’கமலியை எல்லோருக்கும் பிடித்திருந்தது. அடுத்தடுத்த பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியவே, திருமணத்துக்கு நாள் பார்த்தார்கள்.
குறித்த முகூர்த்தத்தில் உற்றார் உறவினர் சூழ ராஜேஷ் - கமலி கல்யாணம் நடந்தேறியது.

தன் மகனுக்கு ஏற்ற ஜோடி அமைந்துவிட்டதில் பார்வதிக்கு பரம திருப்தி.மகனையும் மருமகளையும் தேனிலவுக்கு அனுப்பி வைத்தாள்.விடுமுறை முடிந்து ராஜேஷ் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தான்.கமலி அதிகாலையிலேயே எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி மாமியாருக்கு உதவியாக சிறு சிறு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

ஆனால், பார்வதி சமையல் பொறுப்பை முழுமையாக கமலியிடமே ஒப்படைத்தார். தனக்குத் தெரிந்த சமையல் கலை நுணுக்கங்களை தொடர்ந்து அவளுக்கு சொல்லித்தந்தார். கண்டிப்பான ஆசிரியை போல நடந்து கொண்டார்.

இது கமலியை எரிச்சல் படுத்தியது. காலை முதல் இரவு வரை சமையல்கட்டே கதியாகக் கிடப்பது கமலிக்கு பெரும் சடைவாக இருந்தது. சமையல் முழுவதையும் தன் தலையில் கட்டிவிட்டு, தான் சுகமாக இருக்க விரும்பும் மாமியாரின் ஆசை பேராசையாக தெரிந்தது.“பாசமும், நேசமும் நிறைந்தவர் உன் மாமியார். 

உன்னை அவர் பூப்போல பார்த்துக்கொள்வார்...’’ என பார்த்தவர்கள் எல்லாம் சொன்னது பொய்யானது.ராஜேஷிடமும் சொல்ல முடியவில்லை. மனதுக்குள் புழுங்கினாள்.வேலைக்காரப் பெண்ணான ராஜிக்கும் இது புதுசாகத் தெரிந்தது. ‘நம்ம பார்வதியம்மாவா இப்படி மாறிட்டாங்க...’இதேநிலைதான் பக்கத்து வீட்டு ராஜத்துக்கும்.

 ‘மருமகளை மகளா பார்த்துப்பானு நினைச்சுதானே கமலியைக் கொண்டு வந்தோம்... இப்படி சமையல்காரியாவே மாத்திட்டாளே பார்வதி...’ ஆற்றாமை தாங்காமல் நேரடியாகவே பார்வதியிடம் கேட்டுவிட்டாள். ‘‘ஒங்கிட்ட இதை எதிர்பார்க்கல... இதுநாள்வரைக்கும் எல்லாருக்கும் பிரியத்தையும், பாசத்தையும் காட்டி வந்த நீ, மருமக வந்ததும் இப்படி மாறிட்டியே... ஒம் புள்ளக்கி மனைவியா இருக்கணும்னு அவளை நினைக்காம, ஒனக்கு வக்கணையா சோறு பொங்கிப்போடும் சமையக்காரியாவே ஆக்கிட்டியே...’’ ராஜம் வெடித்தாள்.

பார்வதி சிரித்தார். “அட மக்கு... இத்தன வருஷமா என்னோட பழகியும், நீ என்ைனய புரிஞ்சுகிட்டது இவ்வளவுதானா? அப்படி கல் நெஞ்சுக்காரியா நானு? ஒனக்கு  தெரியாத ஒரு செய்திய இப்போ சொல்றேன். கேட்டுக்க. என்னோட வீட்டுக்காரரு, என் மாமியாருக்கு ஒரே புள்ள. எங்களுக்கு, நம்ம ராஜேஷு போல. என்னோட வீட்டுக்காரரும் சின்னதிலிருந்தே அவரோட அம்மாவோட சமையலையே சாப்பிட்டு வந்ததால என் மாமியார் சமையல் மட்டும்தான் அவருக்கு பிடிக்கும்.

என் மாமியாரும் இதனை புரிஞ்சிக்கிட்டாங்க. எங்கே ஒருவேள மருமகளோட சமையல் நல்லா இருந்து அந்த நாக்கு ருசில தன் மகன் மருமக பக்கம் மொத்தமா சாஞ்சு தன்னைய சுத்தமா ஒதுக்கிடுவானோனு பயந்தாங்க.அதனால அவுங்க இருந்த வரைல என்ைனய சமையல் செய்யவோ, அவருக்கு பரிமாறவோ விடலை. 

இதனால நான் அடைஞ்ச கவலை கொஞ்ச நஞ்சம் இல்ல. இப்ப பாரு... ராஜேஷும் என் சமையலையே சாப்பிட்டு வளர்ந்துட்டான். சாப்பாட்டுல என்னோட கைப் பக்குவம் யாருக்கும் அமையாததுனால ‘காலம் முழுக்க உன் கையாலேயே சாப்பிடணும்மா’னு சொல்லிக்கிட்டே இருக்கான்.

இந்த சமையல் மந்திரத்த வச்சி என் மாமியார் என்னை பாடுபடுத்தினது போதும். அதையே என் மருமகளுக்கு நான் செய்ய விரும்பலை. அதனாலதான் ஆரம்பத்துல இருந்தே என் கைப் பக்குவத்தை கமலிக்கு சொல்லித் தர ஆரம்பிச்சுட்டேன்.இதனால ராஜேஷுக்கும் கமலிக்கும் நெருக்கம் அதிகமாகுது. தலையணை மந்திரம் மாதிரிதானே சமையல் மந்திரமும்.’’
கேட்ட பார்வதியைக் கட்டி அணைத்தாள் ராஜம்.  தற்செயலாக இந்த உரையாடலைக் கேட்ட கமலிக்கு தன் மாமியாரைப் பிடிக்காமல் போகுமா என்ன?!

- தார்சி எஸ்.பெர்னாண்டோ