அது என்ன Tax Haven @ வரி புகலிட நாடுகள்?



கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது வைத்த குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, ‘டேக்ஸ் ஹேவன்’ எனப்படும் வரி புகலிட நாடுகளில் நிறுவனங்களை உருவாக்கி அதன்வழியாக பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி முறைகேடாக ஏற்றத்தை உருவாக்கியது என்பதுதான். 
அதானியின் இந்த வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபியும் அவரின் கணவர் தாவல் புச்சும் பங்குகளை வைத்திருந்தனர் என்பது ஹிண்டன்பர்க்கின் சமீபத்திய குற்றச்சாட்டு. ஆனால், இந்தக் கட்டுரை அதைப் பற்றியதல்ல. டேக்ஸ் ஹேவன் எனப்படும் வரி புகலிடம் குறித்தானது.

ஏனெனில், உலகில் பல்வேறு நாடுகள் இந்த டேக்ஸ் ஹேவன் எனப்படும் வரி புகலிடம் மூலம் கொழிக்கின்றன. குறிப்பாக சிறிய தீவு நாடுகளும், ஒரு பெரிய நாட்டின் தீவாக இருக்கும் பகுதிகளும் இதில் வளமாக ஜொலிக்கின்றன.  இதனைத் தேடிச் சென்று பலரும் நிறுவனங்களை ஆரம்பிக்கின்றனர். ஏன், எதற்கு, எந்தெந்த நாடுகள் மற்றும் தீவுகள் இப்படி வரி புகலிடமாகத் திகழ்கின்றன?

டேக்ஸ் ஹேவன்

நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்குக் கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளை வழங்கும் நாடுகளே ‘டேக்ஸ் ஹேவன்’ என அழைக்கப்படுகின்றன.
அதாவது குறைந்த வரியோ அல்லது வரி செலுத்தத் தேவையில்லை என்றோ சலுகைகள் வைத்திருக்கின்றன. இதனாலேயே அவை வரி புகலிட நாடுகள் எனப்படுகின்றன.
இதன்படி முதலீட்டாளர்கள் அந்த நாட்டில் வசிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

போலவே, நிறுவனங்களும் அந்த நாட்டில் வணிகம் செய்ய வேண்டும் என்கிற தேவையும் இல்லை. இதனால் பெரும் நிறுவனங்களும், பணக்கார தனிநபர்களும் தங்கள் சொந்த நாடுகளில் இருக்கும் அதிக வரிகளைத் தவிர்க்கும் பொருட்டும், பணத்தைப் பதுக்கி வைப்பதற்கும் இந்த டேக்ஸ் ஹேவன் நாடுகளை நாடிச் செல்கின்றனர்.  

அதாவது தனிநபர்களும், நிறுவனங்களும் அங்குள்ள வங்கிகளிலோ அல்லது துணை நிறுவனங்கள் அமைத்தோ தங்கள் வருமானம், சொத்து, இலாபங்கள் அனைத்தையும் அந்த நாடுகளுக்கு மாற்றுவதன் மூலம் குறைந்த வரியோ அல்லது பூஜ்ய வரி விகிதங்களையோ அனுபவிக்கின்றனர். இதன்வழியாக தங்கள் செல்வத்தை அந்த நாடுகளில் பாதுகாக்கின்றனர்.

வரலாறு

இந்த டேக்ஸ் ஹேவன் என்ற சொல் 1950களுக்குப் பின்பு இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதன் வரலாறு என்று பார்த்தால் 19ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிடுகிறது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலம் 1880களில் நிதிச் சிக்கலில் இருந்தது. அப்போதைய கவர்னர் லியோன் அபெட், நியூயார்க் வழக்கறிஞர் டில் என்பவருடன் இணைந்து பெருநிறுவனங்களின் கட்டமைப்புகளை நிறுவுவதற்கான தாராளவாத ஆட்சியை கடைப்பிடிக்கும் திட்டத்தை உருவாக்கினார்.

இதில் ஆஃப் த ஷெல்ஃப் நிறுவனங்களும் அடங்கும். ஆனால், அங்கு குடியுரிமை இல்லாதவர்களுக்கு நிறுவனம் தொடங்க அனுமதிக்கப்படவில்லை. பின்னர் 1935ம் ஆண்டு பெர்முடா நாடு முதல் ஆஃப்ஷோர் நிறுவனங்களின் சட்டத்தை உருவாக்கியதன் அடிப்படையில் முதல் வரி புகலிட நாடாக தங்களைப் பறைசாற்றிக் கொண்டது. 

உண்மையில், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இந்த டேக்ஸ் ஹேவன் சிஸ்டம் என்பது உலக நிதி அமைப்பில் முக்கிய பங்காற்றியது. ஆனால், இப்போதோ, அது பெரிய நிறுவனங்கள் மற்றும் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்வதற்கான ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது.

1998ம் ஆண்டே ஃபிரான்ஸைச் சேர்ந்த பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) வரி புகலிட நாடுகளை அடையாளம் காணும் அளவுகோல்களை வெளியிட்டது.
அதில் முதலாவதாக வரி புகலிட நாடுகளில் நிகர வருமானத்திற்கு பெயரளவே வரி விதிக்கப்படுகிறது. அதாவது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அங்கே குறைவான வரிகளே விதிக்கப்படும்.

இரண்டாவதாக, அவை தகவல்களை இரகசியமாக பாதுகாக்கின்றன. அதாவது, தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களை அதிக நம்பகத்தன்மையுடன் பாதுகாக்கின்றன.

இத்தகைய வரி புகலிட நாடுகள் அந்தத் தனிநபரின் அனுமதியின்றி வெளிநாட்டு வரி அதிகாரிகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில்லை.மூன்றாவது, வெளிப்படைத்தன்மை இல்லாது இருக்கும். பொதுவாக ஆஃப் ஷோர் நிதி மையங்கள் தங்கள் செயல்பாட்டை முற்றிலும் ஒளி புகாத வண்ணம் வைத்திருக்கின்றன. அந்த நாட்டின் தேசிய அரசாங்கத்திற்குக் கூட நிதித் தகவல்களை அளிப்பதில்லை. இது வரி ஏய்ப்பிற்கும், பணமோசடிக்கும் வித்திடுகிறது.

நான்காவதாக கணிசமான செயல்பாடுகளும் வரி புகலிட நாடுகளில் இருப்பதில்லை. இவற்றைக் கொண்டு வரி புகலிட நாடுகள் எவை என்பதை அடையாளம் காணலாம் எனக் குறிப்பிட்டது.  

உலகளவில் எந்தெந்த நாடுகள் வரி புகலிடத்தில் முன்னணியில் உள்ளன?

இதில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், கேமன் தீவுகள், பெர்முடா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, லக்சம்பெர்க், மால்டா, மொரீஷியஸ், பார்படாஸ், ஹாங்காங், பஹாமாஸ், சிங்கப்பூர், அயர்லாந்து, சமோவா, வானூட்டு... எனப் பல்வேறு நாடுகள் உள்ளன. 

குறிப்பாக கரீபியன் கடற்பகுதியில் உள்ள பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் முன்னணியில் இருக்கின்றன. இந்தத் தீவுகள் பிரிட்டனுக்குச் சொந்தமானவை. மொத்தம் 50க்கும் மேற்பட்ட சிறிய தீவுகளில் 16ல் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையும் சுமார் 36 ஆயிரம்தான்.

ஆனால், இந்தத் தீவில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன!

இந்நிறுவனங்கள் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை வைத்திருக்கின்றன. அப்படியென்றால் இந்தத் தீவு, வரி புகலிடமாக எந்தளவுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இதேபோல இதே பகுதியில் உள்ள மற்றொரு தீவுக்கூட்டம் கேமன் தீவுகள். இதுவும் பிரிட்டனுக்குச் சொந்தமானது. இதுவும் அதன் மக்கள் தொகையைவிட அதிக நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்தத் தீவுக்கூட்டம் ஜீரோ கார்ப்பரேட் வரி விகிதமும், ஜீரோ நேரடி வரி விகிதமும் கொண்டிருப்பதால் ஆயிரக்கணக்கான பெரும் மற்றும் சிறு நிறுவனங்கள் தங்கள் துணை நிறுவனங்களை இங்கே நிறுவியுள்ளன.

இதுதவிர பெர்முடா தீவினை ஆக்ஸ்ஃபாம் அமைப்பு உலகின் மோசமான கார்ப்பரேட் வரி புகலிடம் என 2016ம் ஆண்டு அறிவித்தது. ஏனெனில் இங்கே ஜீரோ வரி விகிதமும், தனிநபர் வருமான வரி இல்லாததுமே காரணம். அடுத்து இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மொரீஷியஸ், வரி புகலிடத்தில் முன்னணியில் உள்ள ஒரு மிகச்சிறிய தீவு. இங்கே ஆஃப் ஷோர் நிறுவனங்கள் நிறைய உள்ளன.

இதற்குக் காரணம் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான வருமான வரி விகிதம் அங்கே 15 சதவீதமாக உள்ளதுதான். தவிர, தனிநபர்கள் எந்த மூலதன ஆதாய வரியையும் (Capital gains tax) செலுத்த வேண்டியதில்லை. வரும் பங்குத் தொகை லாபத்திற்கு குறைந்தபட்சம் 3% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இதனால், மொரீஷியஸை பலரும் நம்பி துணை நிறுவனங்களை அமைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட நாடுகளே இந்தியாவிற்கான சிறந்த வரி புகலிட நாடுகளாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில உதாரணங்கள்...

முதலாவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம். இந்நிறுவனம் அயர்லாந்தை ஒரு வரி புகலிடமாக பயன்படுத்துகிறது. அதன் ஆஃப் ஷோர் தொகை மட்டும் 214.9 பில்லியன் டாலர். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.18 லட்சம் கோடி.  ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் இந்த வரி புகலிடத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் அது அமெரிக்க அரசாங்கத்திற்கு 65.4 பில்லியன் டாலர், அதாவது சுமார் ரூ.5 லட்சம் கோடி வரை வரி செலுத்த வேண்டியிருக்கும்.

இதனைத் தவிர்க்கும்பொருட்டு அயர்லாந்தை வரி புகலிடமாகப் பயன்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. இதேபோல நைக் நிறுவனம் பெர்முடாவை வரி புகலிடமாகப் பயன்படுத்துகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த கோல்ட்மேன் சாக்ஸ் குழுமம் பெர்முடா, கேமன் தீவுகளை வரி புகலிடமாகப் பயன்படுத்துகிறது. இது சில ஆண்டுகளுக்கு முன் பிரச்னையானது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் ஒரு சோற்றுப் பதமே.

இதனால், வரி புகலிட நாடுகளுக்கு என்ன பயன்?

வரி புகலிட நாடுகள் மற்ற நாடுகளைவிட குறைவான வரி விகிதத்தைக் கொண்டுள்ளன. இதனால் ஏற்படும் வருமான இழப்புகளை ஈடுகட்ட அவை அதிக சுங்க வரி அல்லது இறக்குமதி வரிகளை வசூலிக்கின்றன. இதன்மூலம் அந்த நாடுகளுக்கு வருமானம் கிடைக்கிறது.இதுதவிர, வரி புகலிட நாடுகள் பெரும்பாலும் நிறுவனங்களின் புதிய பதிவுக்குக் கட்டணம் வசூலிக்கின்றன. மேலும் தனிநபர்கள் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்தல் கட்டணங்களைச் செலுத்த வேண்டும். இதன் வழியாகவும் அந்த நாடுகள் அதிக வருமானத்தை ஈட்டுகின்றன.

உதாரணத்திற்கு, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கடந்த 2022ல் ஒரு சர்வதேச வணிக நிறுவனத்திற்கு பதிவுக் கட்டணமாக சுமார் ஏழு லட்சம் ரூபாய் என வைத்திருந்தது. அதுவே அங்கே குடியுரிமை உள்ள நிறுவனங்கள் சுமார் 14 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதுதவிர, ஆண்டுதோறும் புதுப்பிக்கும் கட்டணம் உள்ளது. மொத்தமாக அந்தத் தீவில் 4 லட்சம் நிறுவனங்கள் இருப்பதாக முன்பே குறிப்பிட்டோம். அப்படியென்றால் எவ்வளவு வருமானத்தை அந்நாடு ஆண்டுக்கு ஈட்டும் எனக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.  

அதுமட்டுமல்ல. நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கட்டணமும் விதிக்கப்படுகிறது. இந்தக் கூடுதல் கட்டணம் மூலம் வருமானம் பார்க்கின்றன வரி புகலிட நாடுகள். இதனுடன் வணிக நடவடிக்கைகளில் பெருநிறுவனங்கள் முதலீடுகள் செய்யும்போது அந்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன. இதன்மூலமும் வரி புகலிட நாடுகள் பயனடைகின்றன.  
இதுதவிர பயணத்திற்கும், சுற்றுலாவிற்கும் புறப்பாடு வரி வைத்திருக்கின்றன. இதன்வழியாக கணிசமான தொகை கிடைக்கும்.

அதாவது ஒரு நபர் அந்த நாட்டைவிட்டு வெளியேறும்போது செலுத்தப்படும் வரி. இதனை ஏர்போர்ட் வரி என்கின்றனர். ஆண்டுக்கு பத்துலட்சம் பேர் வருகிறார்கள் என்றால் அதன்மூலம் ஒரு லாபம் பார்க்கின்றனர்.

பொதுவாக என்ன தீமைகள்?

முதலாவதாக தனிநபர்களும், பெரு நிறுவனங்களும் தங்கள் சொந்த நாட்டிற்கு வரி செலுத்தாமல் வரி புகலிட நாடுகளை நாடுவதால் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். இது ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிக்கும். உதாரணத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆன் டேக்சேஷன் அண்ட் எகனாமிக் பாலிசி அமைப்பு ஓர் அறிக்கை வெளியிட்டது.

அதில் அமெரிக்காவில் உள்ள 500 பெரும் நிறுவனங்களில் 366 நிறுவனங்கள் வரி புகலிட நாடுகளில் குறைந்தபட்சம் 9,755 துணை நிறுவனங்களை பராமரிக்கின்றன என்றும், இதன்மூலம் அமெரிக்க அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் நூறு பில்லியன் டாலர் அளவுக்கான வருமான வரியைத் தவிர்க்கின்றன என்றும் குறிப்பிட்டது.  இரண்டாவதாக இது பணமோசடி, வரி ஏய்ப்பு, ஊழல் போன்ற குற்றச் செயல்களை ஊக்குவிக்கும்.

பனாமா பேப்பர்ஸ்

வரி புகலிடம் குறித்து கடந்த 2016ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் எனப்படும் ஆவணங்கள் வெளியாகின. அதாவது பனாமாவைச் சேர்ந்த மொசாக் ஃபொன்சேகா என்ற ஆஃப் ஷோர் சட்ட நிறுவனத்திலிருந்து சுமார் ஒரு கோடியே பத்து லட்சம் ரகசிய ஆவணங்கள் கசிந்தன.

இந்த ஆவணங்கள் வரி புகலிட நாடுகளில் உள்ள 2 லட்சத்து 14 ஆயிரம் ஷெல் நிறுவனங்களை அம்பலப்படுத்தின.. அவைமட்டுமில்லாமல் இவை இந்தியா உட்பட பல உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு பிரபலங்களின் வெளிநாட்டு நிதி முதலீடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டின..

பேராச்சி கண்ணன்