சனிக்கிழமை மட்டும் கோபப்படும் ஹீரோ!



‘‘என்னுடைய ஹீரோ கோபக்காரர். அந்தக் கோபத்தை அடக்குவதற்கு அவருடைய அம்மா வாரத்துல ஒரு நாள் மட்டும் கோபப்படு. மத்த நாளில் அமைதியா இருன்னு சொல்வார்.
அதன்படி சனிக்கிழமை மட்டும் என்னுடைய ஹீரோ கோபப்படுவார். மத்த நாளில் அமைதியா இருப்பார். ஹீரோவுடைய அந்த குணத்தை அர்த்தப்படுத்தும் வகையில் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ என்ற டைட்டில் வைத்தேன்...’’ என்கிறார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா.

தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகும் படம் என்பதால் மொத்த டீமும் சென்னை, ஐதராபாத் என ஆளுக்கு ஒரு பக்கம் பிசியாக இருந்தார்கள். உச்சக்கட்ட பரபரப்பிலும் பொறுமையாகப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா.

படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கே?

ஆமா. ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் உள்ளூர கொஞ்சம் பதட்டத்தையும் கொடுக்கத்தான் செய்யுது. ஏனெனில், நானி சாரின் சமீபத்திய படங்களான ‘தசரா’, ‘ஹாய் நானா’ ஹிட்டடித்தது. இம்முறை ஹாட்ரிக் அடிக்கணும். அது நடக்கும் என்ற நம்பிக்கையிருக்கு. கோடிக்கணக்கான ரசிகர்கள் டிரெய்லரைப் பார்த்துட்டு பாசிடிவ்வா கமெண்ட் கொடுத்திருக்காங்க. ஃபைனல் அவுட்புட்டை பார்த்தபிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்ச திருப்தி கிடைச்சிருக்கு.

இது வித்தியாசமான குணம் கொண்ட இருவரின் கோபத்தைப் பற்றிய படம். அன்பு, பாசம், காதல், பரிதாபம் போன்ற எமோஷன்ஸ் கலந்த ஆக்‌ஷன் படம்.ஆக்‌ஷன் படம் என்றால் பத்து நிமிஷத்துக்கு ஒரு ஃபைட் இருக்கும்ன்னு கற்பனை பண்ண வேண்டிய அவசியமில்லை. 


ஜனரஞ்சகமான படமாக இருந்தாலும் முழுப் படமும் ஆக்‌ஷன் மூட்ல இருக்கும்.மற்றபடி இது புதுக் கதையெல்லாம் கிடையாது. எரிமலையாக வெடித்து, அடங்கி வாழும் இளைஞனை சீண்டிப் பார்த்தால் என்ன நடக்கும் என்ற ஆக்‌ஷன் படத்தோட எவர் க்ரீன் ஒன்லைனுக்கு புதுசா திரைக்கதை எழுதியிருக்கிறேன். அந்த ட்ரீட்மெண்ட் புதுசா இருக்கும்.

ஹீரோவும் கோபக்காரர். வில்லனும் கோபக்காரர். இரண்டு விதமான கோபம் எப்படி வெடிக்கப் போகிறது என்ற ஆர்வம் படம் துவங்கியதிலிருந்தே ஆரம்பித்துவிடும். அந்த டெம்போ படம் முழுசும் பரவி ரசிகர்களை அப்படியே திரையோடு கட்டிப்போடும்.

நானியுடன் மீண்டும் வேலை செய்த அனுபவம் எப்படியிருந்துச்சு?

நானி சாருடன் இது எனக்கு இரண்டாவது படம். நானி சாருடன் எப்போது வேலை செய்தாலும் அது மனசுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். எனக்கு மட்டுமல்ல, அவருடன் எந்த இயக்குநர் படம் பண்ணினாலும் அவர்களுக்கும் அந்த மகிழ்ச்சி கிடைக்கும்.இயக்குநர் கொடுக்கும் கேரக்டரை எவ்வளவு உச்சத்துக்கு கொண்டுபோக முடியுமோ அதைச் செய்ய அதிக பிரயத்தனம் எடுப்பார். காட்சிக்காக மெனக்கெடுவது என்பதை படப்பிடிப்போடு முடித்துக்கொள்ளாமல் டப்பிங் வரை உழைச்சுட்டு இருப்பார்.

என்னைப் பொறுத்தவரை அவர் மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் இயக்குநர்களுக்கு கிடைப்பது கடவுளின் ஆசீர்வாதம். இயக்குநர் எழுதிய காட்சிக்கு டைரக்டரே எதிர்பார்க்காதளவுக்கு அழகு சேர்ப்பவர். நானி என்றாலே சாக்லேட் பாய் லுக்கை தவிர்க்க முடியாது. இதுல இன்சூரன்ஸ் ஏஜென்ட்டா வர்றார். இது அவருடைய கரியரில் கம்ப்ளீட் ஆக்‌ஷன் படமா இடம் பிடிக்கும்.

எஸ்.ஜே.சூர்யாவை தமிழில் நடிப்பு ராட்சசன்னு சொல்வாங்க. அது தெரியுமா?

தமிழ் மாதிரி தெலுங்கிலும் அவர் மோஸ்ட் வான்ட்டட் ஆர்ட்டிஸ்ட். இதுல தயா என்ற கேரக்டர்ல வர்றார். மொத்தப் படத்திலும் தனித்துவமான கேரக்டர் என்றால் அது அவருடையதுதான். 

அதே சமயம் முக்கியமான கேரக்டர்.அந்தக் கேரக்டரைப் பார்க்கும்போது பயமும் வரணும், ரசிக்கவும் செய்யணும். அப்படிப்பட்ட கேரக்டருக்கு நூறு சதவீதம் நியாயம் செய்யக்கூடிய ஆர்ட் டிஸ்ட் தேவைப்பட்டார். அதுல எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர வேற யாரையும் பொருத்திப் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன்.

அவரிடம் கதை சொல்லும்போதே இவரைத் தவிர வேற யாரும் பண்ண முடியாது என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். அவருடன் வேலை செய்த அனுபவம் மறக்க முடியாதது. பல வெற்றிப் படங்கள் கொடுத்த இயக்குநர். ஆனால் எந்த இடத்திலும் தன்னை இயக்குநராக வெளிப்படுத்தமாட்டார். ஆக்டராக செட்டுக்கு வருவார்.

தன் வேலையை பிசிறு தட்டாம கரெக்ட்டா பண்ணுவார். அவருடைய டெடிகேஷன் வேற லெவலில் இருக்கும். அதைப்பார்க்கும்போது சினிமாவை எப்படி நேசிக்கிறார் என்பதைப் புரிஞ்சுக்க முடிஞ்சது. டெடிகேஷனோடு எப்படி ஒர்க் பண்ணணும் என்பதை அவரிடமிருந்து கத்துக்கவும் செய்தேன்.

காலையில் 7 மணிக்கு ஷூட் துவங்கி, விடியற்காலையில் முடியும். என்ன ஆச்சர்யம்ன்னா அந்த நேரத்திலும் ஃபுல் எனர்ஜியோடு இருப்பார். அது வழக்கமான நடைமுறை என்று கடந்து போக முடியாது.

போலீஸ் உடையில் ப்ரியங்கா மோகன் லுக் அள்ளுதே?

ப்ரியங்கா அழகு மட்டுமல்ல. அவருடைய கேரக்டரை அழகாகவும் பண்ணியிருக்காங்க. ஆர்வத்தை தூண்டும்படியான கேரக்டர். அதை ரசித்துப் பண்ணினார்.
அதிதி பாலன், ‘விருமாண்டி’ அபிராமி, சாய்குமார் ஆகியோரும் இருக்கிறார்கள். நாலு காட்சிக்கு வந்தோம் என்றில்லாமல், ஒவ்வொருவரும் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.

தமிழ் டெக்னீஷியன்களுடன் வேலை செய்த அனுபவம் எப்படி?‘

முரளி ஜி ஒளிப்பதிவு. ‘காலா’, ‘கபாலி’ போன்ற ஹிட் படங்களில் வேலை பார்த்தவர். கேமரா சென்ஸ் அதிகம் உள்ளவர். கேமரா கோணங்கள், லைட்டிங் மூலம் கதையை வேற தளத்துக்கு கொண்டு போயிருக்கிறார். 

படம் முடிஞ்சு பார்க்கும்போது இது நான் எழுதிய கதையா என்று வியக்குமளவுக்கு பிரமாதப்படுத்தினார். எந்த இடத்திலும் துளியும் சமரசம் செய்யாமல் கதைக்கு எப்படியெல்லாம் பலம் சேர்க்கலாம்ன்னு யோசிச்சு கடினமா உழைச்சார். இந்தப் படத்துக்கு முரளி சார் கிடைச்சதும் கடவுளுடைய ஆசீர்வாதம்.

ஜேக்ஸ் பிஜாய் மியூசிக். கதையோட மூட் கெடுக்காதபடிக்கு கவனமா பண்ணினார். படம் வந்தபிறகு பாடல்களும், பேக்ரவுண்ட் ஸ்கோரும் அதிகமாக பேசப்படும். அந்தவகையில் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் படத்தோட முதுகெலும்பு.தயாரிப்பாளர் தனய்யா. தெலுங்கு சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளர்.

 ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தைத் தயாரித்தவர். தெலுங்கு முன்னணி ஹீரோக்கள் எல்லோரையும் வைத்து படம் செய்தவர். இயக்குநருக்கான முழுச் சுதந்திரம் கொடுத்தார். இரண்டாவது கருத்துக்கு இடமில்லாத வகையில் நான் கேட்ட அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தார்.

இவ்வளவு அழகா தமிழ் பேசறீங்க?

நான் பிறந்தது ஆந்திரா என்றாலும் படிச்சது நம்ம தஞ்சவூர்ல. படிப்பு, வேலை என சென்னையில் 10 வருஷம் இருந்தேன். காலேஜ் படிக்கும்போது குறும்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அப்படி குறும்படங்கள் எடுத்துதான் சினிமா கத்துக்கிட்டேன். சொல்லப்போனால் எனக்கு சினிமாவைக் கத்துக் கொடுத்ததே கோலிவுட்தான்.

சர்வதேச சாப்ட்வேர் கம்பெனியில் வேலை. ஒரு வருஷம் வேலைக்கு பிரேக் கொடுத்துட்டு சினிமா ட்ரை பண்ணலாம்னு சினிமா பக்கம் வந்தேன். அது ஒர்க்அவுட்டானதால வேலையை விட்டுட்டு சினிமாவுக்கு வந்துட்டேன். சினிமாவுல இருப்பதால் சென்னையோடு கனெக்ட்ல இருக்கிறேன். சென்னை என்னுடைய இரண்டாவது வீடு!

எஸ்.ராஜா