தில் ராஜுக்கும் பட டைட்டிலுக்கும் தொடர்பில்லை!



தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர் என்று பேர் வாங்கியவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷ். இவருடைய இயக்கத்தில் நடிக்காத ஹீரோக்கள் இல்லை எனுமளவுக்கு விஜய், சரத்குமார், அர்ஜுன், சிம்பு, பிரஷாந்த், அருண் விஜய் என பலர் நடித்துள்ளார்கள்.
இப்போது ‘தில் ராஜா’ படத்தை இயக்கியுள்ளார். இதன் ஹீரோ விஜய் சத்யா. ரிலீஸ் வேலையில் பிசியாக இருந்த விஜய் பிரகாஷிடம் பேசினோம்.தில் ராஜ் புகழ் பெற்ற தயாரிப்பாளர். விஜய்யின் ‘வாரிசு’ உட்பட பல தெலுங்கு மெகா மாஸ் படங்களை ப்ரொடியூஸ் செய்தவர்.

அவர் பேர்ல டைட்டில் வெச்சிருக்கீங்களே... இது அவருக்கு தெரியுமா?

தில் ராஜ் சாரின் ஆசீர்வாதத்தோடு தொடங்கிய படம் இது. சார் மாஸ் புரொடியூசர். ‘தில் ராஜா’ என்று டைட்டில் வெளியானதும் பெரியளவில் வைரல் ஆச்சு. எதிர்பார்க்காதளவுக்கு ரீச் கிடைச்சது.எந்தவிதத்திலும் தனி நபரின் புகழுக்கு களங்கம் ஏற்படாதபடிக்கு கதை எழுதப்பட்டது. படம் நல்லா வந்திருக்கு. தில் ராஜு சாருக்கு படத்தை போட்டுக்காட்ட அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறோம்.

உங்களுக்கு என்ன கேரக்டர்?

படத்துல ரஜினி சார் ரசிகனா வர்றேன். ரஜினி சார் தாக்கமில்லாமல் சினிமாவுக்கு வர்றவங்க ரொம்ப குறைவு. அப்படி ரஜினி சாரின் ரசிகனான எனக்கு படத்திலும் அப்படியொரு கேரக்டர் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்.  இது 3 நாளில் நடக்கும் கதை. மிடில் கிளாஸ் ஃபேமிலி சந்திக்கும் பிரச்னைகள்தான் படம். சாதாரண குடும்பம் பாதிக்கப்படும்போது பிரச்னைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள அவர்களுடைய ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்பதை ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் ஜானர்ல சொல்லியுள்ளோம்.

ஷெரின் உடன் நடிச்ச அனுபவம் எப்படி?

தனுஷ் சாரின் முதல் படத்திலேயே தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியவர். பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். கதை பிடிச்சு வந்தார். அவர் இந்த படத்தில் கமிட்டானதும் அது படத்துக்கு வலு சேர்த்த மாதிரி இருந்துச்சு. சினிமாவில் நான் பல வருஷங்கள் இருந்தாலும் என்னைவிட அவருக்கான அங்கீகாரம், பாப்புலாரிட்டி அதிகம். ஆனாலும் எந்த இடத்திலும் தன்னை பெரிய நடிகையாக வெளிப்படுத்தியதில்லை. பழகும் விதத்திலும் மிகவும் எளிமை.

வில்லன் யார்?

வில்லனா ஏ.வெங்கடேஷ் சார் வர்றார். மிரட்டலா பண்ணியிருக்கிறார். காமெடிக்கு பாலா, இமான் அண்ணாச்சி இருக்கிறார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், சம்யுக்தா, அம்மு, கராத்தே ராஜா, ஞானசம்பந்தம், மனோகர், மூக்குத்தி முருகன், தணிகைவேல் என ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.

‘சாமிக் குத்து...’ பாடல் பெரியளவில் வைரலாகியுள்ளதே?

ஆமா. அதற்கு மியூசிக் டைரக்டர் அம்ரீஷ் சாருக்குதான் நன்றி சொல்லணும். தனிப்பட்ட விதத்துல யாரையும் புண்படுத்தல. சிச்சுவேஷனுக்கு ஏத்தமாதிரி இருக்கும். ஆண்டனி தாஸ் பாடினார். இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். 

பேக்ரவுண்ட் ஸ்கோர் பண்ணும்போதும் தனி கவனம் செலுத்தி பண்ணினார். இது அம்ரீஷ் சாருக்கு கம் பேக் படம் என்றும் சொல்லலாம். கோல்டன் ஈகிள் ஸ்டுடியோ சார்பில் கோவை பாலா பிரம்மாண்டமா தயாரித்துள்ளார்.

என்ன சொல்கிறார் உங்க இயக்குநர் ஏ.வெங்கடேஷ்?

விஜய் சார், சரத்குமார் சார் என பல ஜாம்பவான் ஹீரோக்களை வெச்சு ஏராளமான ஹிட் கொடுத்தவர். அந்த மாதிரி சக்ஸஸ் கொடுத்த இயக்குநர்களுடன் ஒர்க் பண்ணும்போது நாமும் முன்னணி இடத்தைப் பிடிக்க முடியும் என்ற கான்ஃபிடன்ட் இயல்பாகவே ஏற்படும்.பெரிய இயக்குநர்களின் படத்தில் வளரும் நடிகர்கள் நடிப்பது சினிமா நடைமுறை. இந்த மாதிரி பிராசஸ் நான் மட்டுமல்ல, பல நடிகர்கள் செய்திருக்கிறார்கள். அது ஒர்க் அவுட்டும் ஆகியிருக்கிறது.

ஏ.வெங்கடேஷ் சாருடன் ஒர்க் பண்ணும்போது அவருடைய ஸ்பீட், அனுபவம், பாசிடிவ் அப்ரோச் என எல்லாமே என்னை புதுப்பித்துக்கொள்ளவும், என்னை நானே பட்டை தீட்டிக் கொள்ளவும் யூசாச்சு.ஏ.வெங்கடேஷ் சார் என்னுடைய மென்ட்டர் என்று சொல்வதில் பெருமையடைகிறேன். எங்கள் இருவருடைய காம்பினேஷன் எல்லாவிதத்திலும் பொருந்தியதால் ஏ.வெங்கடேஷ் சாருடன் அடுத்தடுத்து இரண்டு படங்களைப் பண்ணுகிறேன்.

ஏன் நீண்ட இடைவெளி?

சினிமாவில் இடைவெளியை தவிர்க்க முடியாது. நல்ல கதைக்காக சில சமயங்களில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதுதான் என்னுடைய இடைவெளிக்கு காரணம். அந்த காத்திருப்புக்கு பலனாக ஏ.வெங்கடேஷ் சார் படம் கிடைச்சது. அவர் பல வெற்றிகளைப் பார்த்தவர். நான் வெற்றிக்காக காத்திருப்பவன். அதனால் ஏ.வெங்கடேஷ் சாரிடம் முழுமையா
சரணடைந்துவிட்டேன்.

எஸ்.ராஜா