MUST WATCH



மிஸ்டர் பச்சன்

‘நெட்பிளிக்ஸி’ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் தெலுங்குப்படம், ‘மிஸ்டர் பச்சன்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. மிஸ்டர் பச்சன் என்கிற ஆனந்த் நேர்மையான வருமான வரித்துறை அதிகாரி. சட்டத்துக்குப் புறம்பாக ஆயிரக்கணக்கான கோடி கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களைத் தைரியமாக வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். அதனால் பச்சனுக்கு நாலாப்பக்கமும் எதிரிகள் அதிகம்.

முதல் பார்வையிலேயே ஒரு பெண் மீது காதல் கொள்கிறார் பச்சன். இன்னொரு பக்கம் பச்சனால் அவமதிப்புக்கு உள்ளாகிறார் ஜக்கையா. பச்சனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று திட்டத்தில் இருக்கிறார் ஜக்கையா. 

அதனால் பல வழிகளில் பச்சனை வேட்டையாட ஆட்களை அனுப்புகிறார். இந்நிலையில் ஜக்கையாவைத் திருப்பி அடிக்க, அவர் வீட்டை வருமான வரி சோதனையிட தனது குழுவை பச்சன் அனுப்புகிறார். சூடுபிடிக்கிறது திரைக்கதை. சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘ரெய்டு’ எனும் இந்திப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்தப் படம். தெலுங்கு மசாலா படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது. இதன் இயக்குநர் ஹரீத் சங்கர்.

விசேஷம்

‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘விசேஷம்’. எங்கு பார்த்தாலும் கருத்தரிப்பு மருத்துவமனைகளுக்கான விளம்பரங்கள் நிறைந்து கிடக்கும் கொச்சினில் படத்தின் கதை நிகழ்கிறது. திருமணத்துக்காக பெண் தேடிக் கொண்டிருக்கிறான் சைஜு. ஆனால், அவனுக்கு உகந்த பெண் கிடைக்கவில்லை. இந்நிலையில் காவல்துறையில் வேலை செய்யும் சஜிதாவைச் சந்திக்கிறான் சைஜு. சஜிதாவுக்கு முன்பே திருமணமாகிவிட்டது. அந்த திருமணம் தோல்வியில் முடிந்ததால் அவளும் தனக்குரியவரைத் தேடிக்கொண்டிருக்கிறாள்.

சைஜுக்கு சஜிதாவைப் பிடித்துப்போக, திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு இருவரின் வாழ்க்கையும் சில நாட்கள் மட்டுமே மகிழ்ச்சியாக செல்கின்றது. எப்போது குழந்தை பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள்? ஏதாவது விசேஷம்... என்று வீட்டிலுள்ளவர்களும், சுற்றியிருப்பவர்களும் சைஜுவையும், சஜிதாவையும் தொந்தரவு செய்துகொண்டே இருக்கின்றனர்.

குழந்தைப்பேறுக்காக பல மருத்துவமனைகளை ஏறி, இறங்குகின்றனர். புதுமணத்தம்பதிகளின் அமைதியும், மகிழ்ச்சியும் சீர்குலைகிறது. சைஜு-சஜிதாவின் வாழ்க்கையில் மீண்டும் அமைதி திரும்பியதா என்பதே கிளைமேக்ஸ்.இன்று புதிதாக திருமணம் செய்பவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிர்சனையை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் சூரஜ் டாம்.

இன்சைட் அவுட் 2

உலக அளவில் இந்த வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம், ‘இன்சைட் அவுட் 2’. மட்டுமல்லப்; எல்லா காலங்களிலும் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்த அனிமேஷன் படம். ‘ஹாட் ஸ்டாரி’ல் ஆங்கிலத்தில் காணக்கிடைக்கிறது. இதற்கு முந்தைய பாகமான ‘இன்சைட் அவுட்’டும் வசூலில் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது.

பதிமூன்று வயதான ரைலி, உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைகிறாள். நெருங்கிய நண்பர்களான ப்ரீ, கிரேஸுடன் ஐஸ் ஹாக்கி கேம்பிற்கு செல்கிறாள். பள்ளியின் ஐஸ் ஹாக்கி அணியில் ஓர் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள் ரைலி. மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, கோபம், சலிப்பு போன்ற உணர்வுகள் ரைலியை ஆக்கிரமித்து  இருந்தன. 

13 வயதை அவள் அடைந்துவிட்டதால் அவள் வாழ்க்கைக்குள் புதிதாக கவலை என்ற உணர்வு ஆக்கிரமிக்க, ரைலிக்கு பள்ளியின் ஐஸ் ஹாக்கி அணியில் இடம் கிடைத்ததா என்பதே மீதிக்கதை.கதையைத் தாண்டி, காட்சிகளால் வசீகரிக்கும் படம் இது. இதன் இயக்குநர் கெல்சேமான்.

செக்டார் 36

சமீபத்தில் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி, பார்வையாளர்களை மிரள வைத்துக்கொண்டிருக்கும் இந்திப்படம், ‘செக்டார் 36’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.தொழிலதிபர் பாஸியின் வீட்டில் வேலை செய்து வருகிறான் பிரேம். குடிசைப்பகுதியில் வசிக்கும் சிறுமிகளைக் கடத்தி வந்து கொடூரமான முறையில் கொலை செய்கிறான் பிரேம். 

குழந்தைகள் காணாமல் போகும் நிகழ்வு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது காவல்துறைக்கு பெருத்த நெருக்கடியைத் தருகிறது. குழந்தைகளைக் கொலை செய்வது மட்டுமல்லாமல், அவர்களுடைய உடல் உறுப்புகளை விற்பனை செய்கிறான் பிரேம்.

காவல்துறை அதிகாரி ராம் ஊழலில் திளைத்திருப்பதால் கொலையாளியைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியையும் அவர் செய்வதில்லை. மட்டுமல்ல; குழந்தைகள் காணவில்லை என்று புகார் அளிக்க வருபவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்கிறார். 

அவர்களைச் சமாளித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஹாயாக இருக்கிறார் ராம். இந்நிலையில் ராமின் குழந்தைக்கே ஆபத்து வர, அவர் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை. சில வருடங்களுக்கு முன்பு நொய்டாவில் நடந்த கொடூர சம்பவத்தை அடிப்படையாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார், ஆதித்ய நிம்பல்கர்.

தொகுப்பு: த.சக்திவேல்