3 தலைமுறை... ஒரு கூட்டுக் குடும்பம்... இனிக்கும் கடலை மிட்டாய்!



இன்று ஆயிரக்கணக்கான வகைகளில் விதவிதமான வண்ணங்களில் சாக்லேட்களும், மிட்டாய்களும் பல்வேறு இனிப்பு வகைகளும் கடைகளில் கிடைக்கின்றன. ஆன்லைன் ஷாப்பிங் வந்த பிறகு அமெரிக்காவில் தயாரிக்கப்படும் சாக்லேட்டைக் கூட ஆண்டிப்பட்டியிலிருந்தே வாங்கிக்கொள்ளலாம். அந்தளவுக்கு உலகமும் சுருங்கிவிட்டது; எந்த ஒரு பொருளையும் எங்கிருந்து வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற சூழலும் உருவாகிவிட்டது. இப்படியான சூழலில் கூட கடலை மிட்டாய்க்கு உண்டான மவுசு குறையவில்லை.

முன்பைவிட இப்போதுதான் கடலை மிட்டாயின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துவருகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக மதுரையில் உள்ள ‘கணேச விலாஸ் கடலை மிட்டாய்’ தயாரிக்கும் நிறுவனம் இருந்து வருகிறது என்றால் மிகையாகாது. மதுரையில் மூன்று தலைமுறைகளாக, 71 வருடங்களாக கடலை மிட்டாய் பிசினஸில் ஈடுபட்டு வருகிறது இக்குடும்ப நிறுவனம்.

“அய்யப்பா (தாத்தா) பெயர்தான், கணேசன். அவர்தான் இந்த பிசினஸுக்கு விதை போட்டவர். அய்யப்பாவோட சொந்த ஊர், சிவகாசிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு குக்கிராமம். ஐம்பதுகளில்
பிழைப்புக்காக மதுரைக்கு வந்தார்.  அப்போது குடும்பம் குடும்பமாக குடிசைத்தொழில் மாதிரி கடலை மிட்டாய் பிசினஸை பலரும் செய்துகொண்டிருந்தனர். அதனால் இந்த பிசினஸில் நம்பிக்கையுடன் அய்யப்பாவும் இறங்கினார்.

1953ம் வருடம் ‘கணேச விலாஸை’ ஆரம்பித்தபோது அய்யப்பாவுக்கு வயது 15தான்...” என்று பேச ஆரம்பித்தார் கணேசனின் பேரனும், மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவருமான
அர்ஜுன் ராஜ். இப்போது ‘கணேச விலாஸி’ல் விதவிதமான கடலை மிட்டாய்கள் மட்டுமல்லாமல் எள்ளு மிட்டாய், கொக்கோ மிட்டாய், தேங்காய் பர்ப்பி, நெய் குச்சி, கமர்கட்டு, பொரி உருண்டை என ஏராளமான நமது பாரம்பரிய மிட்டாய்கள் கிடைக்கின்றன.

“தனி ஓர் ஆளாக இந்த பிசினஸை ஆரம்பித்தார் அய்யப்பா. அவரே ஊர் ஊராகத் தேடி, அலைந்து மூட்டை, மூட்டையாக நிலக்கடலையை வாங்கி வருவார். அப்போது ஓட்டுடன்தான் நிலக்கடலை கிடைக்கும். அந்த ஓட்டை நீக்கியபிறகு பெரிய பாத்திரத்தில் போட்டு, மண்ணில் வறுப்பார். வறுத்தபிறகு ஒவ்வொரு பருப்பாக தரையில் தட்டி அதன் தோலை நீக்குவார். தோலை நீக்கிய பருப்பை இரண்டாக உடைத்து கடலை மிட்டாய்க்குப் பயன்படுத்துவார்.

இப்போது இந்த வேலையைச் செய்ய  மிஷின்கள் வந்துவிட்டன. ஒவ்வொரு பருப்பாக உடைக்கும்போது நல்ல பருப்பைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்வார். சிதைந்த பருப்பை பயன்படுத்தமாட்டார். தரத்தில் உறுதியாக இருப்பார். எந்தவித சமரசமும் கிடையாது. இதையேதான் ஒரு மந்திரம் போல இப்போதும் கடைப்பிடித்து வருகிறோம். ஒவ்வொரு கடலையையும் உடைத்து, பருப்பைத் தனியாகப் பிரித்து எடுக்க இரண்டு, மூன்று நாட்களாகும். அதற்குப் பிறகு நயம் வெல்லத்தில் மட்டுமே கடலை மிட்டாயைத் தயார் செய்வார்.

அதனால்தான் அதன் இனிப்புச்சுவை கூடாமலும், குறையாமலும் கடலை மிட்டாய்க்கு உரித்தான இனிப்பில் இருக்கிறது. அய்யப்பாவின் இனிப்புச் சுவையை இன்றும் மாறாமல் கொடுத்து வருகிறோம்...” என்கிற அர்ஜுன், குடும்ப பிசினஸைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஃபுட் டெக்னாலஜியில் பி.டெக் படித்திருக்கிறார். 

இதுபோக ஒரு பேக்கரி கோர்ஸையும் முடித்திருக்கிறார். “கடலை மிட்டாயைத் தயாரிப்பது மட்டுமல்லாமல், அய்யப்பாவே சைக்கிளில் கடலை மிட்டாயை எடுத்துக்கொண்டு போய், கடைகளுக்கு விநியோகம் செய்வார். சுமார் 50 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் இருக்கிற எல்லா இடங்களுக்கும் சைக்கிளிலேயே போய் வருவார்.

இப்படித்தான் கடலை மிட்டாய் பிசினஸை அய்யப்பா வளர்த்தெடுத்தார். அவருக்குத் திருமணமான பிறகு அய்யம்மாவும் பிசினஸில் இணைந்து கொண்டார். அய்யம்மா கடலை மிட்டாயைத் தயார் செய்ய, அய்யப்பா விற்பனையைப் பார்த்துக்கொள்வார். மட்டுமல்ல; எழுபதுகளில் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நிலக்கடலையை வறுப்பதற்காக ரோஸ்ட்டிங் மிஷினைக் கொண்டுவந்தது அய்யப்பாதான். 

உண்மையில் அந்த மிஷின் பொரி கடலை வறுப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. பொரி கடலையை வறுக்குதுன்னா, கடலையை வறுக்காதா என்று அய்யப்பா சோதனை செய்து பார்த்தார். அது வெற்றியடைந்தது...” என்கிற அர்ஜுன், படிப்பை முடித்ததும் அனுபவத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேலாக பல்வேறு உணவு நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார்.

“அய்யப்பா தனியாக கடையே வைக்கவில்லை. நேரடியாகக் கொண்டு போய் விற்கும் பிசினஸ் மட்டுமே செய்து வந்தார். எல்லா வடிவங்களிலும் கடலை மிட்டாயை செய்தார். அதுதான் எங்களுக்கு ரோல் மாடல். 25 பைசாவிலிருந்து 20 ரூபாய் வரை பல வகைகளில் கடலை மிட்டாயை வியாபாரம் செய்தார். 

அவர் தயாரித்த கடலை மிட்டாயின் தரத்தையும், சுவையையும்தான் இப்போதும் கொடுக்கிறோம்...” என்கிற அர்ஜுனின் தந்தை மணிமுத்து ராஜா வழக்கறிஞருக்குப் படித்திருந்தாலும் குடும்ப பிசினஸில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.  

ஒரு சித்தப்பா நவநீத கண்ணன் பி காம் முடித்துவிட்டும், இன்னொரு சித்தப்பா ரமேஷ் பாபு சிவில் எஞ்சினியரிங் வேலை செய்துகொண்டும் குடும்ப பிசினஸில் ஈடுபட்டு வருகின்றனர்.

“தொண்ணூறுகளில் பி.எல் படிக்கும்போதே அய்யப்பாவுடன் இணைந்து பிசினஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார் அப்பா. அவருடன் சித்தப்பாக்களும் சேர்ந்துதான் மதுரையில் இருக்கும் கடையை ஆரம்பித்தனர். 

அப்பாவும், சித்தப்பாக்களும் கடலை மிட்டாயை ஆட்டோ மற்றும் குட்டி யானை வண்டியில் கொண்டு போய் டெலிவரி செய்தனர். மட்டுமல்ல;  திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, அலங்காநல்லூர், பாலமேடுன்னு 150 கி.மீ சுற்றுவட்டாரத்துக்கு பிசினஸை விரிவுபடுத்தினார்கள். எள்ளு மிட்டாய், பொரி கடலை மிட்டாய், கமர்கட்டு, தேங்காய் பர்ப்பின்னு 35 வகைகளில் மிட்டாய்களைத் தயாரித்தனர்.

இந்த 35 வகை மிட்டாய்களிலும் தொண்ணூறுக்கும் மேலான துணை வகைகளை உருவாக்கினார்கள். தவிர, கடலையிலேயே புதுப்புது வகையான, வெவ்வேறு அளவிலான மிட்டாய்களைக் கொண்டு வந்தனர்...” என்கிற அர்ஜுன், குடும்ப பிசினஸுக்குள் நுழைந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. “இப்போது கேமரா மூலமாக நல்ல பருப்பை, சிதைந்த பருப்பை பிரிக்கிற மிஷின் வந்துவிட்டது. மிஷினைப் பயன்படுத்தி கடலை மிட்டாய் செய்தாலும், சில முக்கியமான வேலைகளை கைகளில்தான் செய்கிறோம்.

இன்று சிங்கப்பூர், மாலத்தீவுகள், அமெரிக்கா, இங்கிலாந்துக்கு மாதம் ஒருமுறை ஏற்றுமதி செய்கிறோம். ஆன்லைனிலும் விற்பனை செய்கிறோம். எதிர்காலத்தில் ஆப் உருவாக்க வேண்டும். நேரடியாக சில்லறை விற்பனையில் இறங்கி, முக்கிய இடங்களில் எல்லாம் கடைகளைத் திறக்க வேண்டும். இப்பவும் நாங்கள் கூட்டுக்குடும்பமாக இணைந்துதான் பிசினஸை நடத்துகிறோம்...” புன்னகைக்கிறார் அர்ஜுன்.

த.சக்திவேல்