100 நாள் வேலை, குழாயடிச் சண்டை எல்லாம் கூட செய்தேன்!



பூரிக்கும் நந்தனின் செல்வி

தூக்கிக் கட்டிய புடவை, அடாவடியான பேச்சு, வரிந்து கட்டிக் கொண்டு சண்டை, அடி உதை, மிதி... ஒரு கட்டத்தில் ‘மாமா’ என உற்சாகமாக சசிகுமாரையே தூக்கி நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் சுருதி பெரியசாமி. நாயகியாக முதல் படம். ஆனால், எந்தக் காட்சியிலும் அறிமுக நடிகை எனச் சொல்லிவிட முடியாத அளவுக்கு நடிப்பில் எதார்த்தம். ஆச்சர்யம் அடங்குவதற்குள் ஆளைப் பிடித்து பேசினோம்.

ப்பா... யாருப்பா இந்தப் பொண்ணு?

ரொம்ப நொம்ப நன்றி. எல்லா கிரெடிட்டும் டைரக்டர் இரா.சரவணன் சாருக்குத்தான் போய்ச் சேரும். அவர் எனக்குக் கொடுத்த டிரெய்னிங், ஸ்பெஷல் ரிஹர்சல் எல்லாமேதான் இன்னைக்கு ‘நந்தன்’க்கு செல்வியா மாத்தியிருக்கு. 

எனக்கு சொந்த ஊரு சேலம். பி.டெக் இண்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி படிச்சிருக்கேன். ஒரு தனியார் கம்பெனியில்வேலையிலும் இருந்தேன். அப்பா அரசாங்க வேலை. ஆனால், எனக்கு 10 வயதிருக்கும் போதே இறந்திட்டார். அம்மா டெய்லர்.நானும் அம்மாவும் மட்டும்தான். அம்மா ஒருத்தியா நின்னு என்னை வளர்த்தாங்க.

சினிமா அறிமுகம்...?

வேலையிலே இருந்த வேளைதான் ஒரு விபத்து மாதிரி மாடலிங்கில் வாய்ப்புகிடைச்சது. தொடர்ந்து ‘ஃபெமினா மிஸ் இந்தியா’ 2019இல் தமிழ்நாடு சார்பாக கலந்துகிட்டேன். டாப் 10 ஃபைனலிஸ்ட்ஸ்ல வந்தேன். அடுத்து ‘மிஸ் திவா 2020’ போட்டியிலும் தென்னிந்தியாவிலிருந்து கலந்துகிட்ட ஒரே போட்டியாளர் நான்தான். 
தொடர்ந்து நிறைய மாடலிங் வாய்ப்புகள், ஒண்ணு ரெண்டு படங்களில் சின்னச் சின்ன ரோல்கள் நடிச்சேன். அப்பறம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ என்னை யார்ன்னு தெரிய வெச்சது. இடையிலே ‘த ரவிக்கை ஸ்டோர்’ என்கிற பொட்டிக் பிஸினஸும் செய்யறேன். அம்மா டெய்லர் என்கிறதால் டிசைனிங்கிலும் ஆர்வம்.

நான் நிகழ்ச்சிகள்ல பயன்படுத்துகிற உடைகள் எல்லாமே நானே டிசைன் செய்ததுதான். இப்படியான சமயம்தான் என்னுடைய சோசியல் மீடியா போட்டோக்கள் பார்த்துட்டு ‘நந்தன்’ டீம் கூப்பிட்டாங்க. அப்படிதான் நான் இந்தப் படத்திற்குள் வந்தேன்.

முதல் படத்திலேயே இவ்வளவு வலிமையான கேரக்டர்... மற்றும் சசிகுமாருக்கு ஜோடியானது பற்றி சொல்லுங்க..?

திரும்பவும் நான் இயக்குநர் சரவணன் சாருக்குதான் நன்றி சொல்லணும். எனக்கு முழுமையாக கதை சொல்லி, என் கேரக்டருடைய ஆழம் தெரிய வெச்சுதான் நடிக்க வெச்சார்.
ஆரம்பத்தில் இந்தப் படத்தின் நாயகனா சூரி சார் நடிப்பார்ன்னு சொன்னாங்க. அப்பறம் ஒரு புதுமுக நடிகர்ன்னு சொன்னாங்க. யார் ஹீரோவானா என்ன நமக்குக் கொடுத்திருக்க கேரக்டர் படு ஸ்டிராங்... எப்படியாவது இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கணும்ன்னு நினைச்சேன்.

படத்தின் பூஜை... அங்கேதான் சசி சாரை சந்திச்சேன். சரி அவர் சரவணன் சார் கூட ‘உடன்பிறப்பு’ படத்தில் வேலை செய்திருக்கார், படத்தின் ப்ரொடக்‌ஷன் ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ல ‘அயோத்தி’ படத்திலும் நடிச்சிருக்கார்... அதனால நட்புக்காக கெஸ்ட்டா வந்திருக்கார் போலன்னு நினைச்சேன். ஆனால், செம ஷாக். அவர்தான் படத்தின் ஹீரோன்னு சொன்னாங்க. அதுவரைக்கும் எனக்குத் தெரியாது. இந்தப் படம் எனக்கு ஜாக்பாட் மாதிரி மாறிடுச்சு.

செல்வி கேரக்டருக்கு எப்படி தயாரானீங்க?

சேலம் பக்கத்திலே ஒரு கிராமத்திலேதான் கதை நடக்குது. ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்பு ஒரு வாரத்துக்கும் மேல நான் அந்தக் கிராமத்தில் தங்கியிருந்தேன்.

இந்தப் படத்தில் எனக்கும், சசிகுமார் சாருக்கும் ஒரு வீடு இருக்கும். அந்த வீட்டில் இருந்த குடும்பம்தான் எனக்கு முழுப் பயிற்சி கொடுத்தாங்க.

புடவையை எப்படி கட்டணும், சண்டைன்னா எப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு நிற்கணும், கொண்டையை எப்படி நாமாகவே கைகளால் போட்டுக்கறது, இப்படி ஆரம்பிச்சி அந்த ஒரு வாரம் முழுக்க ரிஹர்சல் நடந்துச்சு.

அவங்க 100 நாள் வேலைக்குப் போவாங்க. நானும் அவங்க கூட போனேன். சாணியிலே வாசல் தெளிக்கறது, குழாயடி சண்டை... இப்படி எல்லாமே எனக்குபயிற்சி கொடுத்தாங்க. ஏற்கனவே சினிமாவில் இருந்துட்டு இந்தக் கேரக்டர்ல நடிச்சிருந்தா கூட இவ்வளவு கஷ்டம் தெரிஞ்சிருக்காது போல. 

காரணம், நான் அடிப்படையிலே மாடல். மாடலிங்கில் சிரிக்கறதுக்குக் கூட ஒரு அளவுகோல் இருக்கு. இவ்ளோதான் பல் தெரியணும், நகங்கள் கூட எவ்வளவு முக்கியம் இப்படி நிறைய பார்த்து பார்த்து என்னை நானே பாதுகாப்பா வெச்சிக்கிட்ட சிட்டி கேர்ள்.

நான் இந்த ஷூட்டிங்கில்தான் சாணியை கையாலயே தொடறேன். மேலும் கேரக்டருக்காக ‘முள்ளும் மலரும்’ மங்காவா நடிச்ச படாபட் ஜெயலட்சுமி மேடமையும், வள்ளியா நடிச்ச ஷோபனா மேடமையும்தான் இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு திரும்பத் திரும்ப அவங்க கேரக்டரை ஓட்டிப் பார்ப்பேன். அவங்க ரெண்டு பேர் கேரக்டரிலும் அப்படி ஒரு எதார்த்தமும், டெடிகேஷனும் இருக்கும். அவங்கதான் என் டீச்சர்ஸ்.

‘நந்தன்’ உங்கள் பார்வையில்..?

இதுக்கு அப்பறம் எனக்கு படங்கள் கிடைச்சா கூட இந்த மாதிரி ஒரு கேரக்டர் கிடைக்குமா தெரியலை. அந்த அளவுக்கு அங்கீகாரமான ஒரு கேரக்டர்.
சசி சார் செம கூல். ஆனா, கேமரா ஆன் செய்திட்டா அவர் ஒரு நடிப்பு ராட்சஷன். நிறைய கத்துக்கிட்டேன். மேலும் இரா.சரவணன் சார் நினைச்சிருந்தா ஒரு கமர்ஷியல், கலர்ஃபுல் படம் கொடுத்திட்டுப் போயிருக்கலாம். ஆனால், இந்தப் படம் கொடுக்க நினைச்சிருக்கார். ரொம்ப ஆழமான சமூகப் படம். அவருடைய கம்போஸ்ட் கேரக்டர் எனக்குப் பிடிக்கும். நிச்சயம் சமூகத்துக்குத் தேவையான படம் ‘நந்தன்’.

சினிமாவில் உங்கள் ட்ரீம் என்ன?

எனக்கு அனுஷ்கா மேடம் ரொம்பப் பிடிக்கும். அவங்க நடிச்ச பல கேரக்டர்ஸ்க்கு நான் ரசிகை. ஆக்‌ஷன், குயின், செஃப், டாக்டர்... இப்படி நிறைய கேரக்டர்கள் நடிக்கறாங்க. அவங்க மாதிரி எந்த லிமிட்டும் இல்லாம நிறைய கேரக்டர்ஸ் நடிக்கணும். அதுதான் கனவு.

ஷாலினி நியூட்டன்