பட்டையைக் கிளப்பும் FAITH TECH
ஆன்மீக, ஜோதிட apps மதிப்பு ரூ.5 லட்சம் கோடி
நம்பிக்கைகள் எப்போதும் இந்திய சமூகத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்று. அவை ஒவ்வொருவரின் உணர்வுகளுடனும் கலந்தவை. ஆனால், அந்த நம்பிக்கைகளே இன்று தொழில்நுட்பத்தின் ஓர் உள்ளடக்கமாக மாற்றப்பட்டு, மாபெரும் வணிகமாக எழுந்து நிற்பதுதான் ஹைலைட்! இந்தியாவில் 97 சதவீதம் பேர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாக ஓர் ஆய்வின் வழியே சொல்கிறது அமெரிக்காவின் பியூ ஆய்வு மையம். நம்பிக்கை என்பது இந்தியர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் என்றும் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு.
அந்த நம்பிக்கைதான் இந்த வணிகத்தின் மூலதனமாக மாறியிருக்கிறது. அதனாலேயே இந்த வணிகத்தினை ஃபெய்த் டெக் (Faith Tech) என அழைக்கின்றனர். அதாவது நம்பிக்கை தொழில்நுட்பம். சமீபமாக இந்தியாவில் இந்த வணிகத்தில் பல்வேறு ஸ்டார்ட்அப்கள் உருவாகி சக்கைபோடு போட்டு வருகின்றன.இதனால், பல முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் இந்த ஃபெய்த் டெக் ஸ்டார்ட்அப்களில் நிறைய முதலீடுகள் செய்து வருகின்றன.
ஃபெய்த் டெக் ஸ்டார்ட்அப்ஸ்
ஆன்மீகம், ஜோதிடம், பக்தி ஆகியவற்றுக்கான தொழில்நுட்ப செயலிகளின் வணிகமே ஃபெய்த் டெக் ஸ்டார்ட்அப்ஸ் எனப்படுகிறது. மக்களின் மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்து வரும் மாபெரும் சந்தை இது.உதாரணத்திற்கு ‘ஆஸ்ரோடாக்’, ‘ஆப்ஸ்ஃபார்பாரத்’, ‘வாமா’, ‘போதி’, ‘கணேஷாஸ்பீக்ஸ்’ எனப் பல்வேறு ஃபெய்த் டெக் ஸ்டார்ட்அப்களும், அவற்றின் செயலிகளும் உள்ளன.இவை ஜோதிடர்களிடம் பேசவும், கோயில்களைத் தரிசிக்கவும், அங்கே நேரடியாக பூஜைகளைக் கண்டுகளிக்கவும், அங்குள்ள பிரசாதங்களைப் பெறவும் பக்தர்களுக்கு ஆஃபர் செய்கின்றன.
உதாரணத்திற்கு, சென்னையில் இருக்கும் ஒருவர் காசியில் இருக்கும் கோயில் திருவிழாவை தரிசிக்க நினைக்கிறார். ஆனால், அவரால் அங்கு செல்லமுடியவில்லை. இந்தச் செயலிகளில் ஏதாவது ஒன்று அந்தக் கோயிலுடன் இணைப்பை வைத்திருந்தால் அந்தக் குறிப்பிட்ட செயலியை டவுன்லோடு செய்து கட்டணம் கட்டி தரிசனத்தை நேரடியாக ஆன்லைனில் கண்டுகளிக்கலாம்.
ஆப்ஸ்ஃபார்பாரத் என்ற நிறுவனத்தின் ஸ்ரீமந்திர் செயலி இந்தியா முழுவதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை இணைத்திருப்பதாகச் சொல்கிறது. இதேபோல, ஜோதிடர்களிடம் ஜோதிடம் பார்க்க ஆஸ்ரோடாக் போன்ற செயலிகளும் இருக்கின்றன. இதைத்தான் நம்பிக்கைத் தொழில்நுட்ப வணிகம் என அழைக்கின்றனர் நிபுணர்கள். இந்தத் தொழில்நுட்பம் சந்தைக்குப் புதியதா எனக் கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் கடந்த காலங்களில் சில செல்போன் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் ஜாதகத்தை கணிக்கும் சேவையைத் தந்துள்ளன.
அப்போது ஒரு நிமிடத்திற்கு இவ்வளவு கட்டணம் என்ற அடிப்படையில் இந்தச் சேவையை அந்நிறுவனங்கள் வழங்கியது நினைவிருக்கலாம். அதுவே இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் செயலிகளாக பல்வேறு புதிய விஷயங்களுடன் உருமாறியுள்ளன.
கடந்த 2023ம் ஆண்டு நிலவரப்படி இந்த ஃபெய்த் டெக் சந்தையின் மதிப்பு 60 பில்லியன் டாலர் எனச் சொல்லப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய். அப்படியென்றால் இதன் பயன்பாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.
அதுமட்டுமல்ல. அடுத்த எட்டு ஆண்டு காலக்கட்டத்தில், அதாவது 2024 முதல் 2032ம் ஆண்டுக்குள் இந்தச் சந்தையின் மதிப்பு 8.82 சதவீதம் வளர்ச்சியடையும் எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக 2032ம் ஆண்டில் 128 பில்லியன் டாலராக வளர்ச்சிபெறும் எனகணிக்கப்படுகிறது. இது இந்திய மதிப்பில் கணக்கிட்டால் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தாண்டுகிறது. சரி, ஃபெயித் டெக் எழுச்சிக்கான காரணங்கள் என்ன?
முதலில் இன்டர்நெட் வளர்ச்சிதான். கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலைவிட தற்போது அசுர வளர்ச்சியை இணையதளங்கள் எட்டியுள்ளன.இரண்டாவது முக்கிய காரணம் இந்திய அரசியல் சூழல். இது மக்களை தாங்கள் சார்ந்த மதத்தின் மீது அதிக நாட்டம் கொள்ளச் செய்துள்ளது. மதம் மற்றும் நம்பிக்கையின் மீதான இந்த அதிகரித்த முக்கியத்துவம், ஃபெய்த் டெக் பயன்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கும் வழிவகுத்துள்ளது.
மூன்றாவதாக கொரோனா தொற்று. அப்போது மக்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டுக் கொண்டிருந்தனர். இதனால் கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு நேரடியாகச் செல்லமுடியாத சூழல். அந்த இக்கட்டான சூழலில் மக்களுக்குக் கடவுள் நம்பிக்கையும் அதிகரித்திருந்தது. மனநலம் சார்ந்த பிரச்னைகள் உள்ளிட்டவை வந்ததால் அமைதியை நோக்கியும், ஆன்மீகத்தை நோக்கியும் திரும்பினர். அப்போது மக்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பை ஃபெய்த் டெக் செயலிகளே உருவாக்கித் தந்தன. குறிப்பாக 2020ம் ஆண்டு காலக்கட்டத்தில்தான் நிறைய ஃபெய்த் டெக் ஸ்டார்ட்அப்கள் உருவாகின. நான்காவதாக பணம் செலுத்த யுபிஐ உள்ளிட்ட முறைகள் வந்ததால் ஃபெய்த் டெக் பயன்பாட்டை மக்களால் எளிதாக நுகரமுடிகிறது. இதுவே ஃபெய்த் டெக் வேகமாக வளர்ந்ததற்கான காரணங்கள்.
ஃபெய்த் டெக் ஸ்டார்ட் அப்பின் மாடல்கள்
இந்த ஃபெய்த் டெக் ஸ்டார்ட்அப்கள் சில மாடல்களைக் கொண்டிருக்கின்றன. இதில் முதலாவதாக கோயிலைச் சார்ந்த வணிக மாடல்கள். இதில் இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நேரடியாக கோயில்களுக்கு மட்டும் செய்யும் பணிகள் ஒரு ரகம். அதாவது நன்கொடைக்கான விஷயங்கள், பக்தர்களுக்கான செயலிகள், அக்கவுன்ட் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை உருவாக்கிக் கொடுக்கின்றன. அதனை கோயில்களே பயன்படுத்திக் கொள்ளும்.
மற்றொரு ரகம் என்பது வாடிக்கையாளர்களான பக்தர்களுக்கு செய்யும் பணிகள். இதில் கோயில் பூஜைகள், ஆரத்திகள் உள்ளிட்டவற்றை வீட்டிலிருந்தே நேரடியாக பார்க்கும் வசதிகளை வழங்குகின்றன. இதனுடன் சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பூக்கள், இனிப்புகள் எனப் பிரசாதங்களையும் பக்தர்களுக்கு வழங்குகின்றன. இரண்டாவது மாடல் என்பது ஜோதிடர்கள் சார்ந்தது. இதற்கு சிறந்த உதாரணம் ‘ஆஸ்ட்ரோடாக்’ செயலி. இது நேரடியாகவே சம்பந்தப்பட்ட ஜோதிடரிடமே பேச வைக்கிறது.
கொரோனா நேரத்தில் மக்கள் பயத்தில் இருந்தபோது இதுபோன்ற ஜோதிட செயலிகள் வளர்ச்சியடைந்தன. ஓர் ஆய்வு, வசதி படைத்த நகரங்களில் வசிக்கும் 22 வயது முதல் 60 வயதுள்ள பெண்கள் ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைன் ஜோதிடத்திற்குச் செலவழிப்பதாகச் சொல்கிறது. தொடர்ந்து ஊரகப் பகுதியைச் சேர்ந்த 22 முதல் 45 வயதுக்குள் உள்ள ஆண்கள் ஆண்டுக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை செலவழிப்பதாகத் தெரிவிக்கிறது. இதனால், அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது ஆன்லைன் ஜோதிடம்.
மூன்றாவது மாடல் குரு சார்ந்தது. அதாவது, ஒரு குரு தன்னுடைய பக்தர்களுக்கு அல்லது தன்னை பின்தொடர்பவர்களுக்கு இந்தச் செயலி மூலம் விஷயங்களைப் பகிர்வார். பெரிய கார்ப்பரேட் யோக மையங்கள் இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர வணிக ரீதியாக உள்ள செயலிகள் தனிரகம். விளக்குகள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் செயலிகளாக இருப்பவை. இந்த ஃபெய்த் டெக் ஸ்டார்ட்அப்கள் எல்லாம் மில்லினியல்கள் எனப்படும் 1980களில் பிறந்தவர்களையும், ஜென் இசட் எனப்படும் 1997க்குப் பிறகு பிறந்தவர்களையும் சார்ந்து இயங்குவதாகவும், இவர்கள் மூலமே 65 சதவீத வருவாய் இந்நிறுவனங்களுக்குக் கிடைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஜென் இசட் பிரிவினர் திருமணம் சார்ந்த விஷயங்களே ஜோதிட செயலிகளில் அதிகம் கேட்பதாகவும், மில்லினியல்கள் கோயில் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.இவர்களுடன் வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்தச் செயலிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே இந்தியாவில் ஃபெய்த் டெக் ஸ்டார்ட்அப் பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது.
பேராச்சி கண்ணன்
|