பசியில் இந்தியா!



மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கு முன்னரும் மோடி அரசு 2 முறை ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால், முதல் இரு முறைகளைப் போல் அல்லாது இம்முறை கடுமையான சவால்களை மோடி அரசு சந்திக்கிறது. அதற்கு முதல் காரணம் தனிப் பெரும்பான்மை இல்லாதது.இந்நிலையில்தான் இந்த புள்ளிவிவரம் வெளியில் வந்திருக்கிறது. அதுதான் இக்கட்டுரையின் தலைப்பு.

இந்தியா அடிப்படையில் வேளாண்மையை பிரதானமாகக் கொண்டு இயங்கும் நாடு. நாட்டின் மொத்த பரப்பளவில் 51% விளை நிலங்களாக உள்ளன. விவசாய விளைபொருள் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 4ம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய முடிந்துள்ளதா?

2022ம் ஆண்டின் கணக்கீட்டின்படி உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் 113 நாடுகளின் பட்டியலில் இந்தியா 68வது இடத்தில் உள்ளது. இச்சூழலில் 2023ம் ஆண்டில் உலகளாவிய பசிக் குறியீட்டில் (Global Hunger Index) 125 நாடுகளின் பட்டியலில் இந்தியா 111வது இடத்தைப் பிடித்து படு மோசமான நிலையில் உள்ளது. 
இந்தக் கணக்கீடு, மக்கள் தொகையில் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடு, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் அவர்களின் இறப்பு விகிதம் ஆகிய நான்கு அளவுகோள்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.இந்தத் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆய்வில் இந்தியாவின் தரவரிசை  தொடர்ந்து சரிவையே சந்திக்கிறது. 2016ல் 97வது இடத்திலும், 2017ல் 100வது இடத்திலும், 2018ல் 103வது இடத்திலும் என தொடர்ந்து வீழ்ச்சி அடைவது சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

உணவுப் பற்றாக்குறை... ஊட்டச்சத்து குறைபாடு...

1950 முதல் 2007 வரையான காலகட்டத்தில் அரிசி, கோதுமை மற்றும் பருப்பு வகைகளின் உற்பத்தி ஆண்டுதோறும் 2.5% என்ற அளவில் அதிகரித்தது. ஆனால், இதே காலகட்டத்தில் மக்கள் தொகை 2.1% மட்டுமே உயர்ந்தது.இதனால் அரிசி, கோதுமை போன்றவை எஞ்சிய நிலையில் ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட்டது. 

இப்படி உணவு தானிய உற்பத்தி அதிகரித்தபோதும், தனி நபருக்கு கிடைக்கக் கூடிய அளவு 1991ல் ஒரு நாளைக்கு 510.1 கிராமில் இருந்து 2021ல் 507.9 கிராமாக குறைந்துள்ளது. ரேஷன் கடைகளில் தானியங்களை ஏழை மக்களுக்கு கொடுக்க முடிந்ததே தவிர, பருப்பு வகைகளையோ, காய்கறிகள் மற்றும் பழங்களையோ வழங்க முடியவில்லை.

இதன் காரணமாக இந்திய மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக 2014ம் ஆண்டு சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் சுரேஷ்பாபு ஒரு நேர்காணலில் விளக்கினார். உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய அறிக்கையில் இந்தியாவில் 74.1% மக்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிட முடியாத நிலையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியது.

உண்மை சுடும்

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (2019 - 21)  ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினர் எடை குறைவாகவும், வளர்ச்சியில் மந்த நிலையிலும் இருப்பதாக தெரிவிக்கிறது. 36% பேர் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையே காரணம். 6 மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளில் 67% பேர் அனீமியா எனப்படும் ரத்த சோகையால்  பாதிக்கப்பட்டுள்ளனர். 2015 - 16ல் இது 59 சதவீதமாக இருந்தது. 2019 - 21 கணக்கெடுப்பில் 15 முதல் 49 வயது வரையிலான பெண்களில் 57% பேர் அனீமியா பாதிப்பில் இருந்தனர்.

இந்த அறிக்கை பாஜக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால், இதற்கு மூல காரணமாக இருந்த மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனத்தின் இயக்குனரை இடை நீக்கம் செய்தது. இனிமேல் அனீமியா குறித்தான கணக்கெடுப்புகள் கூடாது என அரசு முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். 

இதேபோன்ற நடைமுறை 2019ம் ஆண்டும் கடைப்பிடிக்கப்பட்டது. 2012 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் இந்தியர்களின் சதவிகிதம் அதிகரித்ததாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் புள்ளி விவரங்கள் வெளிவந்தபோது அதை அரசாங்கம் ரத்து செய்தது. கணக்கெடுத்த இருவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.

வேளாண் உற்பத்தியை பாதிக்கும் காரணிகள்

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் ஆண்டறிக்கை 2022 - 23, மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள், கால்நடை வளர்ப்பு பால் வளம் மற்றும் மீன்வள  விவரங்கள் பற்றிய கையேடு 2022 ஆகிய மூன்று வெவ்வேறு ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது சில விவரங்கள் தெரிய வருகின்றன.

2015 முதல் 2020 வரையான காலகட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் உற்பத்தியின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை கணக்கிட்டு, இதன் போக்கில் 2050 வரை கணித்துள்ளனர்.
இந்தத் தரவுகளின் அடிப்படையில் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், பால், இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் தனிநபர் நுகர்வுக்கான உற்பத்தியானது சராசரியாக அதிகரிக்க வேண்டும்.

ஆனால், இந்த உற்பத்தி விகிதமானது ஊட்டச்சத்து பற்றாக்குறையை குறைக்கும் அளவில் அதிகரிக்கவில்லை. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளான நீடித்த வறட்சி அல்லது பேரழிவை ஏற்படுத்தும் மழை வெள்ளம் போன்றவையும் இதற்கு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.ஏனெனில் காலநிலை மாற்றம் தொடர்பான குழுவின் ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை, காலநிலை மாற்றம் போன்ற தீவிரமான நிலைமைகளால் அரிசி, கோதுமை போன்ற உணவு தானிய உற்பத்தி மட்டுமல்லாமல் மற்ற விவசாய விளை பொருட்களின் உற்பத்தியும் வீழ்ச்சி அடையும் என தெரிவிக்கிறது.

சமீபத்திய மூன்று ஆண்டுகளில் அதற்கு முந்தைய 10 ஆண்டுகளை விட வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் சராசரி ஆண்டு வெப்பநிலை 1900 மற்றும் 2018க்கு இடையில் 0.7 டிகிரி செல்சியஸ் அதிகரித்ததே இதற்கு காரணமாக உள்ளது. ஏற்கனவே 147 மில்லியன் ஹெக்டேர் விளை நிலங்கள் பல்வேறு வகையான நில அரிப்பு மற்றும் உப்பு நீர் காரணமாக பாழ்பட்டுள்ள நிலையில், காலநிலை மாற்றம் இதை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.

2050ம் ஆண்டு வாக்கில் ஏறக்குறைய விளைநிலங்களில் பாதி அளவுக்கு பாதிக்கப்படும் என்பதால் உற்பத்தியும் கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது. துறையின் இரண்டு நிபுணர்கள், ‘உப்பு பாதிப்பு நிலங்களின் அளவு அதிகரிப்பதால், தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல் உள்ளது’ என்கின்றனர்.

நீர் ஆதாரங்களும் தொடர்ந்து குறைந்து வருகின்றன. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகின்றது. பஞ்சாப், குஜராத், அரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சராசரியாக 40 மீட்டருக்கு (131 அடி) மேல் தோண்டி நீரைப் பெற வேண்டி உள்ளது.

எதிர்காலத்தில் அனைவருக்கும் உணவு உத்தரவாதம் செய்யப்படுமா?

மிகவும் நம்பகமான ஆய்வுகள் சிலவற்றை பயன்படுத்தி 2050ம் ஆண்டுவாக்கில் பசியினால் வாடுவோரின் எண்ணிக்கை 11 முதல் 20 சதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிரதான பயிர்களின் உற்பத்தியில் தேக்கம் அல்லது சரிவு ஏற்படும்போது உணவு தானிய பற்றாக்குறையும், ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான தாக்கங்களும் அதிகரிக்கும்.

இந்தியா அதன் மக்கள் தொகையின் தேவைகளை ஈடு செய்ய 2030ம் ஆண்டில் 311 மில்லியன் டன் உணவு தானியங்களையும், 2050ல் 350 மில்லியன்  டன்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என கணித்துள்ளனர். இதை அடைவதற்கு  விளைநிலங்களையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க வேண்டும். கூடவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளையும் சமாளிக்க வேண்டும். ஒன்றிய அரசு செய்யுமா?

என்.ஆனந்தி