இந்தியாவின் பணக்கார பெண் யூடியூபர்!
சமூக வலைதளத்தின் ஆதிக்கமும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. பத்தில் ஆறு பேர் தனக்கென தனிச் சேனலும், அதில் மூன்று முதல் நான்கு பேர் அதன் மூலம் வருவாயும் ஈட்டுகின்றனர். மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, கனடா, ஐரோப்பா நாடுகளில் பெரும்பாலும் சினிமா பிரபலங்களுக்குப் பிறகு இசைக் கலைஞர்கள்தான் மிகப்பெரும் பிரபலங்களாக கொண்டாடப்படுவார்கள். போலவே சின்னத்திரை கலைஞர்களும் இப்படியான பிரபலங்களின் ஸ்டேட்டஸ்களை பெறுவது வழக்கம்.
ஆனால், சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகரித்தது முதல் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் டிஜிட்டல் குறிப்பாக யூடியூபர்கள் பிரபலங்களின் அந்தஸ்து பெற்று வருகின்றனர்.
பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கி, சினிமா வரையிலும் கூட இவர்களின் தாக்கம் பெரிய அளவில் பார்க்க முடிகிறது. இன்னும் சிலரின் டிஜிட்டல் வளர்ச்சி பிரபலம், புகழ் கடந்து மில்லினியர்களாகவும் மாற்றி விடுகிறது.
அப்படித்தான் சாதாரண ஆசிரியையாக மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிஷா மதுலிகா தற்போது வருடத்திற்கு யூடியூப் மூலமாக ரூ.43 கோடி வருமானம் பார்த்து வருகிறார். மேலும் இந்தியாவிலே யூடியூபில் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் பெணமணியாகவும் உயர்ந்திருக்கிறார்.
‘‘எனக்கு சொந்த ஊர் நொய்டா, உத்திரப்பிரதேசம். இதெல்லாம் துவங்கியது 2011ம் ஆண்டு. அப்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் டீச்சராக இருந்தேன்.
அப்போது நிறைய கள ஆய்வுகள், அரசு சார் நிகழ்வுகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதுண்டு. அவ்வேளையில் எனக்கு உடல் சார்ந்தும் சில பிரச்னைகள். தொடர்ந்து என்னால் வேலை செய்ய முடியுமா என்னும் தேக்க நிலை உண்டானது.
அதே சமயம் எங்கு போனாலும் நான் பிரதானமாக பார்த்த ஒன்று உணவு. அதிலும் ஆசிய மக்கள் தினந்தோறும் சுவையாக சாப்பிட நினைப்பவர்கள். இதுதான் என் பலம். எனக்குத் தெரிந்த பாரம்பரிய உணவுகள் துவங்கி, ஏன் அத்தனையும் செய்து வீடியோக்களாக பதிவேற்றக்கூடாது என நினைத்தேன். அப்படித் துவங்கியதுதான் இந்த ‘நிஷா மதுலிகா’ யூடியூப் சேனல்...’’ என்னும் நிஷா அன்றே ஆசிரியை பணியை விட்டுவிட்டு முழுநேர யூடியூபராக மாறினார்.
1959ஆம் ஆண்டு பிறந்த நிஷாவுக்கு தற்போது வயது 65. தனது 54வது வயதில் யூடியூப் பயணம் துவங்கிய நிஷா எதிர்காலத்தில் தன் மொத்தக் குடும்பத்தின் வருவாயும் இதுவாகத்தான் இருக்கும் என, தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்கிறார். இப்போது 14 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள், 4 பில்லியன் பார்வையாளர்கள், வருடத்திற்கு ரூ.43 கோடி வருமானம்... நீண்ட காலமாகவே வெற்றுக் கூடு சிண்ட்ரோம் காரணமாக வாழ்வில் பல சிக்கல்களை சந்தித்தவர்.
குழந்தைகள் படிப்பு, வேலை நிமித்தமாக வெளியூருக்கு செல்லும் போது வீட்டில் ஒரு வெற்றிடம் ஏற்படும். இதன் காரணமாக பல பெற்றோர்கள் குறிப்பாக அம்மாக்கள் தனிமை அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.
அப்படியான ஒரு சவாலான கால கட்டத்தில் 2009ம் ஆண்டு முதன்முதலில் உணவு ரெசிபிகள் குறித்து இணையத்தில் பிளாக் எழுதத் துவங்கியிருக்கிறார் நிஷா.அங்கே ஆரம்பித்து சமூக வலைதளம், தனக்கென பிரத்யேக இணையதளம், யூடியூப் என முன்னேறி தற்போது உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிஷாவின் பிரத்யேக உணவகமும் இயங்கி வருகிறது.
‘‘யூடியூப்பை பொறுத்தவரை தொடர்ச்சியாக வீடியோக்கள் பதிவிடுவதுதான் அதன் ரகசியம்...’’ என்னும் நிஷா தனது தளத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தவறாமல் உணவு ரெசிபி வீடியோ பதிவேற்றி விடுகிறார்.
இன்று இந்தியாவின் முன்னணி ஐந்து நட்சத்திர உணவகங்கள் பலவற்றிலும் நிஷா ஆலோசகராக இருக்கிறார். முக்கிய செஃப் பட்டியலிலும் நிஷாவுக்கு தனி இடம் இருக்கிறது. டாடாவின் ‘தொண்டு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புராஜெக்ட் துருவ்’ செயல்பாட்டில் உறுப்பினராக இந்திய கிராமங்களுக்குள் இணையம் கொண்டு செல்லும் நடவடிக்கையில் தன்னையும் இணைத்துக்கொண்டு செயலாற்றி வருகிறார் நிஷா.
இந்தியாவிலேயே வைர யூடியூப் பட்டன் வாங்கிய முதல் பெண்ணும் இவர்தான் என நிஷாவின் உயரம் இன்றைய பெண்களுக்கு மாபெரும் எடுத்துக்காட்டாக மாறியிருக்கிறது. இந்தியாவின் டாப் 10 யூடியூப் ஸ்டார்களில் நிஷாவுக்கு சிறப்பான அந்தஸ்து. இந்தியாவின் கூகுள் சார்ந்த எந்த நிகழ்வாக இருப்பினும் நிஷாவுக்கு தனி அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்கப்படுகிறது. ‘‘எந்த கான்செப்ட் வீடியோக்கள் ஆனாலும் சரி... தொடர்ச்சியாக பதிவேற்றம் அவசியம். அதுதான் யூடியூப் ரகசியம்...’’ என்பதை அழுத்தமாகவே சொல்கிறார் இந்த யூடியூப் லேடி இந்தியன் ஸ்டார்.
ஷாலினி நியூட்டன்
|