கின்னஸ் குடும்பம்!
சாதனைக்காக சண்டை செய்யும் யாராவது ஒருத்தர் சாதனை பண்ண களமிறங்கினா, ‘ஆமா... இவரு பெரிய கின்னஸ் சாதனை படைக்கப் போறாரு...’ என்று கேலி செய்பவர்கள் பலர் உண்டு.
ஆனால், ‘நாங்கள் கின்னஸ் சாதனை படைக்குற குடும்பம் இல்லை.  கின்னஸில் பல சாதனைகளை படைக்கிற குடும்பம்’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த நாராயணன்.மதுரை டேக்வாண்டோ அகாடமியின் நிறுவனர், தலைமை பயிற்சியாளர்... இதுவரை இவர் 31, மனைவி ஸ்ருதி 2, மகள் சம்யுக்தா ஒன்று என ஒரு குடும்பமே 34 கின்னஸ் சாதனைகளை படைத்திருக்கிறது.
 இன்னும் நிறைய வாங்கணும்... இதெல்லாம் பத்தாது என்கிறது இந்த ‘டிஷ்யூம்... டிஷ்யூம்...’ ஃபேமிலி. சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் பட்டாளத்திற்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த நாராயணனை அழைத்து பேச வைத்தோம்.‘‘ஸ்போர்ட்ஸ் உட்பட பல விஷயங்களில் சாதனை படைச்ச ரொம்ப பேரு சொல்வாங்க... ‘நான் சின்ன வயசிலே இருந்து பிராக்டீஸ் பண்ணேன். அதான் சாதிக்க முடிஞ்சது’ என்று.
 நம்ம கதையே வேறங்க. ஸ்கூல் லைஃப்ல நான் விளையாட்டு, தற்காப்புக் கலைகளில் எல்லாம் ஆர்வமில்லாமல்தான் இருந்தேன். மதுரையில் பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு சென்னையிலே இன்ஜினியரிங் காலேஜ் சேர்ந்தேன். ஓஎம்ஆர்ல நான் படிச்ச காலேஜ் பக்கத்துல ஒரு டேக்வாண்டோ அகாடமி இருந்தது. சும்மா டைம் பாஸ்க்கு போகலாமேன்னுதான் அங்கே போய் பிராக்டீஸ் பண்ணேன்.
 *காதல் பிறந்தது...
அப்புறம்தான் அது மேல ஒரு காதல் பிறந்தது. தீவிரமாக பயிற்சிக்கு செல்ல ஆரம்பிச்சேன். படிச்சுகிட்டே டேக்வாண்டோவில் ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் முடிச்சேன்.
சென்னை டி.சி.எஸ்ல வேலைக்கு சேர்ந்தேன். மாலை நேரம் டேக்வாண்டோ பயிற்சியும் செஞ்சேன். பார்ட் டைம் பயிற்சியாளராகவும் இருந்தேன். அங்கே டேக்வாண்டோ ஜாம்பவான்கள் பலர் வருவாங்க. அவங்களோட நிறைய விஷயங்களை என்கிட்டே ஷேர் பண்ணுவாங்க. அதற்குப் பிறகுதான் டேக்வாண்டோ மீது தீராக் காதல் பிறந்தது.
*மதுரையில் அகாடமி...
சரி... வேலை நமக்கு செட் ஆகாது. பேசாமல் நாம பிறந்த மதுரையிலே போய், நாமளே ஒரு டேக்வாண்டோ அகாடமி ஆரம்பிப்போமே என்ற எண்ணம் உருவாச்சு. வேலையை ரிசைன் பண்ணிட்டு, மதுரையிலே வீட்டு மாடியிலே மதுரை டேக்வாண்டோ அகாடமியை ஸ்டார்ட் பண்ணேன். ஆரம்பத்துல இதுல ரொம்ப பேருக்கு ஆர்வமில்லை. எங்க வீட்ல கூட நான் ஏதோ கராத்தே கிளாஸ் கத்துத் தர்றதாத்தான் நினைச்சாங்க.
ஆனால், நான் விடலை. டேக்வாண்டோவை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு செல்ல வேண்டுமென்று நினைத்தேன். அதற்கு நாம் ஒரு கின்னஸ் சாதனை படைக்கணும்னு ஒரு வெறியே உருவாச்சு.
*2016ல் முதல் கின்னஸ்...
உலக அளவில் ஓர் அங்கீகாரம் கிடைக்கணும்னா, கின்னஸ் சாதனைதான் ஒரே வழின்னு தோன்றியது. களத்துல இறங்கினேன். 2016லதான் முதல் கின்னஸ் சாதனை படைச்சேன். அதன் பின்னர் நிறைய மேடைகள் கிடைத்தன. இந்தக் கலை ரொம்ப பேரை ரீச் ஆகணும்னு நான் நினைச்சது, மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்தது.
இதற்கு மேலும் பல கின்னஸ் சாதனைகளை படைக்கணும்னு தீவிரமாக பயிற்சி எடுத்தேன். முதலில் தொழில்நுட்பரீதியாக ஆரம்பிச்சேன். படிப்படியா பிளாக்ஸ் உடைக்கிறது உட்பட பவர்ஃபுல்லான சாதனைகளை செஞ்சேன். கடந்தாண்டு இத்தாலியில் நடந்த மிகப்பெரிய நிகழ்வுல, பல ஜாம்பவான்கள் மத்தியில் கின்னஸ் சாதனை படைத்ததை மறக்கவே முடியாது...’’ என்று ஒரு புன்முறுவலோடு முடித்தார். பொதுவாக, வீட்ல கணவர், மனைவி சண்டை போடுறது சகஜம். உங்கள் மனைவியை இதுல எப்படி கொண்டு வந்தீங்க... மகளையும் சாதனை படைக்க வச்சது எப்படி? என்றதும் சிரிக்கிறார்.
‘‘ஹஹ்ஹா... முதல்ல என்னைக் கட்டிக்கவே மனைவி ஸ்ருதி பயந்தாங்க. பிறகு நான் ரொம்ப நல்லவன்னு நம்பி கட்டிக்கிட்டாங்க!
ஆண்கள் மட்டுமே கத்துக்கிட்ட டேக்வாண்டோவை ஆர்வமா கத்துகிட்டாங்க. எங்களைப் பார்த்து மகள் சம்யுக்தாவும் பயிற்சியில இறங்கி, World Youngest Taekwando Instructor என்ற கின்னஸ் சாதனையை 7 வயதில் படைத்தார்...’’ என்று நாராயணன் முடித்ததும் அவரது மனைவி ஸ்ருதியும், சுருதி பிசகாமல் பேசத் தொடங்கினார். ‘‘நான் ஒரு பரத நாட்டிய டான்ஸர். இவர் சண்டை போடுறவர் மட்டுமல்ல... சாஃப்ட் ஆன ஆளுதான் என முடிவு பண்ணி திருமணத்துக்கு ஓகே பண்ணேன்.அவர் வீட்டு மாடியில் பிராக்டீஸ் பண்ணும்போது போய் பார்த்ததுல எனக்கும் ரொம்ப ஆர்வமாகி போச்சு. அப்படித்தான் கத்துக்கிட்டேன். டேக்வாண்டோவுல பெண்களுக்கு பெருசா ஆர்வமில்லாமல் இருந்தாங்க. இது ஆம்பள பசங்க கத்துக்கிறது... அவங்களோட நாம சண்டை போட முடியுமா என யோசிச்சாங்க..
*விடா(மல்) முயற்சி...
அவங்களை இதுல கொண்டு வருவதற்கான முயற்சியாகத்தான், கின்னஸ் சாதனை படைக்கணும்னு நினைச்சேன். பயிற்சியின்போது கர்ப்பமானேன். பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும் பிராக்டீசை விடலை. தீவிர பயிற்சி செய்து கின்னஸ் சாதனை படைச்சிட்டேன். என் குடும்பத்தினர், உறவுக்காரங்க ஆரம்பத்துல, ‘பொம்பளை புள்ள நீ... எதுக்கும்மா உனக்கு இது’ என்று சொன்னாங்க.
விடாமல் பிராக்டீஸ் பண்ணி 2வது கின்னஸ் சாதனையும் படைச்சேன். அதற்கப்புறம் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்...’’ என ஸ்ருதி முடிக்க, துள்ளிக்குதித்தபடி சம்யுக்தா ஓடி வந்தார்.‘‘நான் 4 வயசுல இருந்தே டேக்வாண்டோ கத்துக்கிட்டு வர்றேன். அப்பாதான் மாஸ்டர். காலையிலே சீக்கிரமா எழுந்திருச்சு பிராக்டீஸ் பண்ணேன். அப்புறம் ஸ்கூல் போய்ட்டு வந்து, ஹோம்ஒர்க் எல்லாம் பண்ணிட்டு, மீண்டும் டேக்வாண்டோ கிளாஸ் போவேன். புல் சைஸ், பஞ்ச், பிளாக்.. இப்படி பண்ணி பிளாக் பெல்ட் வாங்கிட்டேன். ஒரு நாள் அப்பா வந்து, ‘இதப்பாரும்மா... நீ கின்னஸ் சாதனை படைக்க விரும்புறியா..? அதுக்கு கொஞ்சம் சிரமப்படணும். டிரை பண்ணு... வெற்றி, தோல்வியை எல்லாம் நினைச்சு கவலைப்படாதே. ஜாலியா செய்... கிடைக்காட்டினாலும் முயற்சி செய்வோம்... அது போதும்...’’ என்கிறார் இந்தத் தம்பதியின் செல்ல மகள்.
‘‘அப்படியே முயற்சி செஞ்சேன். இன்னைக்கு நான், world youngest intructor என்கிற கின்னஸ் சாதனையை 7 வயசுல படைச்சுட்டேன். ரொம்ப பெருமையாக இருந்தது. இதைப் பார்த்த நிறைய கிட்ஸ் இப்போ பயிற்சிக்கு வர ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் நிறைய கின்னஸ் ரெக்கார்டு படைக்கணும். ஒலிம்பிக்ல கோல்டு மெடல் வாங்கணும். போலீஸ் ஆபீசராகவும் ஆகணும்...’’ என்று முடித்தார் குட்டி சாதனையாளர் சம்யுக்தா.குடும்பத்தை வாழ்த்தி விட்டு விடை பெற்றோம்.
முதல்வரிடம் கின்னஸ் சாதனையை காட்டணும்
சம்யுக்தா பேசும்போது, ‘‘தமிழ்நாட்ல சாதிச்ச பலரையும் கூப்பிட்டு முதல்வர் ஐயா பாராட்டுறாங்கன்னு நியூஸ்ல பார்த்திருக்கேன். நானும் எனது கின்னஸ் சாதனை சர்டிபிகேட்டை முதல்வரிடம் காட்டணும்... பாராட்டு வாங்கணும்னு ஆசையாய் இருக்கிறது. அமைச்சர் உதயநிதி அங்கிளையும் பார்த்து பேசணும்.. பிளஸ்சிங் வாங்கணும்’’ என்றார். ‘‘எங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. முதல்வரிடம் எங்களது சாதனையைக் காட்டி பாராட்டு பெறணும்’’ என்றனர் நாராயணன் - ஸ்ருதி தம்பதியினர்.
செய்தி: எஸ்.அறிவழகன்
படங்கள்: நிவேதன்
|