நிறங்கள் எனப்படுவது

நிறங்கள் நம் வாழ்வில் தவிர்க்க முடியாதவை. சாலையில் போகும்போது சிக்னலில் சிவப்பு, மஞ்சள், பச்சையில் தொடங்கி, பழங்கள் கனிந்துவிட்டதா என்று பார்ப்பது வரையில் நிறங்கள்! நிறங்கள்! நிறங்கள்! வேறு வேறு அலைவரிசை கொண்ட ஒளி, அலைவரிசைக்கு ஏற்ப வெவ்வேறு நிறமாகத் தெரிகிறது. நிறமானது போட்டான்கள் என்னும் கூறுகளால் ஆனது. ஒளிக்கற்றை என்பதே ஏழு நிறங்களின் கலவைதான். வானவில்லில் அந்த அடிப்படையான ஏழு நிறங்களும் இருக்கும்.ஒரு ப்ரிஸம் வழியே ஒளி புகும்போது ஏழு நிறங்களாகப் பிரிவதைப் பார்க்கலாம். விஞ்ஞானி நியூட்டன், வானவில்லின் ஏழு நிறங்களையும் வட்டத்தகடு ஒன்றில் வரைந்து அந்தத் தட்டை வேகமாகச் சுழற்றி, அவை வெண்மை நிறமாகத் தோற்றம் அளிப்பதைக் காண்பித்தார்.கடல் நீருக்கு உண்மையிலேயே நிறம் ஏதும் இல்லையென்றாலும் அது வானத்தைப் பிரதிபலிப்பதால் நீல நிறம் கொண்டுள்ளது போலத் தோற்றம் அளிக்கிறது. அடிப்படையில் நமது கண்ணில் உள்ள ரெட்டினாவால் சிவப்பு, நீலம் மற்றும் பச்சை ஆகியவற்றை மட்டுமே அறிய முடியும். மூளையின் சிறப்பாற்றலால் பலவித நிறங்களையும் பார்ப்பதாக உணர்கிறோம். நிறங்களைப் பிரித்தறியும் திறன் இன்றி இருக்கும் குறைபாட்டுக்கு நிறக் குருடு என்று பெயர். பல விலங்குகளுக்குக் காட்சிகள் கருப்பு வெள்ளையில் மாத்திரமே தெரியும்.

தோலுக்கு நிறத்தைத் தருவதே நிறமிகள்தான். இந்த நிறமிகள் குறையும்போது அல்லது மறையும்போது தோலில் திட்டுத்திட்டாக வெள்ளையாக மாறியிருப்பதைப் பார்க்கலாம். இது நோய் அல்ல; நிறமிகளின் குறைபாடு. இதை மருத்துவ மொழியில் ‘விட்டிலிகோ’ என்பார்கள். அதற்கான காரணம் சுவாரசியமானது. கிரேக்கத்தில் ஒரு பசுவின் உடலில் வெள்ளையும் கருப்புமான திட்டுகள் ஆங்காங்கே இருக்கும். அதேபோன்று தோலில் நிற மாற்றங்களுடன் இருந்ததால் மனிதர்களின் இத்தோல் குறைபாட்டுக்கு விட்டிலிகோ என்று பெயர் வைத்து விட்டார்கள்.உறுப்புகளின் இயல்பான நிறம் மாறியிருப்பதை வைத்து மருத்துவர்கள் நோயை அடையாளம் காணவும் முடியும். கண் இமையையும் நாக்கையும் மருத்துவர்கள் ஆய்வு செய்வதைப் பார்த்திருப்பீர்களே! மோஷன் டெஸ்ட் ரிசல்ட்டிலும் நிறம் என்பது எப்போதும் குறிக்கப்பட்டிருக்கும்.ஆன்மிகத்திலும் நிறங்கள் புகுந்து விளையாடுகின்றன. நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் உகந்ததாக ஒவ்வொரு நிறம் சொல்லப்படுகிறது. கிழமைக்குத் தகுந்தபடி நிறங்களைத் தேர்வு செய்து அந்நிறத்தில் ஆடை அணிவோரும் உண்டு.இப்போது வீடுகளுக்கு வாஸ்து கலர் பூசுவது அதிகமாகி வருகிறது. கண்ணை உறுத்தும் அடர் நீலம், சிகப்பு என அடிக்கிறார்கள்.

ரத்தத்தில் கூட எத்தனை நிறம் பாருங்கள்! ஹீமோக்ளோபின் இருப்பதால் மனிதனின் ரத்தம் சிகப்பாயிருக்கிறது. கடல் அட்டைகளின் ரத்தம் மஞ்சள் நிறம். கம்பளிப்பூச்சிக்குப் பச்சை, கரப்பானுக்கு வெள்ளை என ரத்தத்திலும் நிற வேறுபாடுகள் உண்டு.கேசம் வெள்ளையாகிவிட்டால் அதைக் கறுப்பாக்கத்தான் எத்தனை விதமான சாயங்கள் சந்தையில் கிடைக்கின்றன!முன்பெல்லாம் குடைகள் கருப்பு நிறத்திலேயே வந்தன. இப்போது பல நிறங்களிலும் கிடைக்கின்றன. துணிகளைப் ‘பளிச்’ வெண்மையாக்குவதான விளம்பரங்கள் இல்லாத தொலைக்காட்சி நிகழ்ச்சியே இல்லையெனலாம்!ராமபிரானுடைய நிறத்தை, ‘மையோ மரகதமோ’ என கம்பர் வியந்து பாடுவார். சிகப்பு வண்ணம் பொதுவுடைமைக் கட்சியோடும் கருப்பு நிறம் திராவிடர் கழகத்தோடும் தொடர்புடையன.உணவுப் பொருட்களிலும் நிறம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் ஒரு விவசாய விளைபொருள். எலுமிச்சை சாதத்தில் மஞ்சள்
போடாவிட்டாலும் சுவையில் பெரிதாக மாற்றம் இருக்காது. ஆனால், பார்க்கத்தான் ஒரு மாதிரியிருக்கும். செயற்கை நிறமிகளை உணவில் சேர்ப்பது கெடுதல் என்பது மருத்துவர்களின் கருத்து.பாலியல் தொழில் நடக்கும் ஏரியாக்களைச் சிகப்பு விளக்குப் பகுதி என்பார்கள். ஆபாச எழுத்துகளையும், ஒருவரின் அந்தரங்கச் செயல்பாடுகளின் விமர்சனங்களையும் தாங்கி வரும் பத்திரிகைகளுக்கு மஞ்சள் பத்திரிகை என்ற பொதுப்பெயர் உண்டு.

வெள்ளைக் கொடி, போரில் சமாதானத்தைப் பிரகடனப்படுத்துகிறது. தூய்மைக்கு அடையாளமாகச் சொல்லப்படுவது வெள்ளை நிறம். கலைமகள் வெள்ளை தாமரைப்பூவில் அமர்ந்து அருள்பாலிப்பதாக சொல்வார்கள். கிரிக்கெட் வீரர்களின் பொதுவான விளையாட்டு நேர உடை, வெள்ளை. அரசியல்வாதிகளுக்கும் அதுவே! விதவைக் கோலத்துக்கு வெண்ணிற ஆடை அக்கால குறியீடு. வெள்ளை அடித்தல் என்று வீட்டுக்குச் சுண்ணாம்பு அடித்தலைச் சொல்லுவார்கள். அமெரிக்க அதிபர் மாளிகையை வெள்ளை மாளிகை என்று சொல்வார்கள்.சம்பந்தமே இல்லாமலும் நிறங்களைச் சிலவற்றுடன் இணைத்துச் சொல்கிறார்கள். பச்சை நிறத்துக்குத்தான் இந்தப் பெருமை அதிகம். கெட்ட வார்த்தை பேச்சை ‘பச்சையாய்ப் பேசுகிறான்’ என்பார்கள். சமைக்காத காய்கறிக்குப் பச்சைக் காய்கறி என்றும் சின்னஞ்சிறிய குழந்தைக்குப் பச்சைக்குழந்தை என்றும் ஏன் பெயர் வந்தது என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.பச்சை ரத்தம் சிந்தியதாகப் பெருமைப்பட்டுக் கொள்வோரும் உண்டு. தான் பச்சைத் தமிழன் என்று சொல்லிக் கொள்வதிலே சிலருக்கு மகிழ்ச்சி. குளிர்ந்த நீருக்குப் பச்சைத்தண்ணீர் என்றும் பெயருண்டு. பச்சைக் குதிரை என்ற விளையாட்டே உண்டு. ஹாலிவுட், பாலிவுட்டின் லேட்டஸ்ட் ஃபேஷன் உடலில் பச்சை குத்திக் கொள்வதுதான்.
 
ஆபாசப் படங்களுக்கு நீலப் படம் என்று ஏன் பெயர் வந்ததோ தெரியவில்லை. கம்ப்யூட்டர்களிலும் செல்போன்களிலும் சக்கைப்போடு போடும் ஒரு தொழில்நுட்பத்துக்கு ‘ப்ளூ டூத் டெக்னாலஜி’ என்று பெயர்.வட இந்தியாவில் ஒரு மான், உயரத்தில் பசுவை ஒத்திருக்கும். ‘நீல் கை’ அதாவது, ‘நீலப் பசு’ என்று அதை அழைப்பார்கள். குறிப்பிட்ட தினத்தில் பேரழிவு ஏதேனும் நிகழ்ந்தால் அந்த நாளைக் குறிப்பிடும்போது கருப்பு தினம் என்று சொல்வதும் உண்டு. கருப்பு நிறம் துக்கத்தை அனுஷ்டிக்கவும், கருப்புக் கொடி எதிர்ப்பைக் காட்டவும் பயன்படுகிறது. கணக்கில் வராத பணத்தைக் கருப்புப் பணம் என்பார்கள். ‘கருப்புப் பணம்’ என்ற பெயரில் கண்ணதாசனால் தயாரிக்கப்பட்ட படம் ஒன்றும் அந்தக் காலத்தில் வந்திருக்கிறது. கருப்புப் பணத்தை மையமாக வைத்து வெளிவந்த ரஜினியின் சூப்பர் டூப்பர் படம் ‘சிவாஜி’.

(அடுத்து...)