மோகன்ராஜ் என்கவுன்டர் சரியா? தவறா?





கோவை ஜவுளி அதிபர் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கானையும் மகன் ரித்திக்கையும் கடத்திக் கொலை செய்த மோகன்ராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டிருக்கிறார். இது சட்டத்தை மீறிய செயல் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். விசாரணைக்கு அழைத்துச்சென்ற போது போலீசாரை சுட்டுவிட்டு கேரளாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது மோகன்ராஜை சுட்டுக்கொன்றதாக போலீஸ் சொல்கிறது. மோகன்ராஜின் மரணத்தை கோவை மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடும் நிலையில், சட்டத்தின்படி தண்டனையா, உடனடி போலீஸ் தீர்வா என்ற விவாதத்தில் வழக்கறிஞர் சுந்தர்ராஜனும் தமிழிசை சௌந்தராஜனும் மோதுகிறார்கள்.

ஆதரிக்கிறேன் : தமிழிசை சௌந்தராஜன் (பாரதிய ஜனதா கட்சி)

‘‘பல நேரங்களில் மனித உரிமை பேசுகிறவர்கள் குறித்த கடுமையான விமர்சனம் என்னிடம் இருக்கிறது. கோவை சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். மோகன்ராஜை விசாரணைக்கு எடுத்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுடப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொல்லப்பட்ட குழந்தைகளுக்கும் சுடப்பட்ட காவல்துறையினருக்கும் மனித உரிமை இல்லையா என்ற கேள்விக்கு மனித உரிமை ஆர்வலர்களிடம் என்ன பதில் இருக்கிறது? இரண்டு குழந்தைகளைக் கொன்ற கொடூர மோகன்ராஜை மோதலில் போலீசார் கொன்றதில் தவறில்லை. இது மோகன்ராஜ் போன்ற கொடூர எண்ணம் கொண்ட எல்லா கிரிமினல்களுக்குமே ஒரு பாடம்.
 
மக்களை வதம் செய்த நரகாசுரன் கொல்லப் பட்டதை மக்கள் தீபாவளியாகக் கொண்டாடுவது போல, மோகன்ராஜ் கொல்லப் பட்டதை மக்கள் வெடிவெடித்து கொண்டாடி யிருக்கிறார்கள். அப்படியென்றால் அந்தக் குழந்தைகளின் கொலை எந்த அளவுக்கு மக்களை பாதித்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பள்ளிக்கு குழந்தையை அனுப்பிவிட்டு பரிதவிப்போடு வீட்டில் இருக்கும் எல்லா தமிழகத் தாய்மார்களுக்கும் இந்த என்கவுன்டர் ஆறுதல் அளித்தது என்பதை யாரும் மறுக்கமுடியாது.  சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது உண்மைதான். மோகன்ராஜ் விஷயத்தில் போலீசார் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. தங்களை சுட்டுவிட்டு தப்பியோட முயன்றவரைத்தான் போலீசார் சுட்டிருக்கிறார்கள்.

எதிர்க்கிறேன் : சுந்தர்ராஜன் (வழக்கறிஞர்)

மோகன்ராஜ் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்தவர். சிறுமி முஸ்கானை பாலியல் வன்முறை செய்து கொலை செய்ததாக போலீஸ் சொல்கிறது. அவர் தவறு இழைத்ததை நிரூபித்து, நீதிமன்றத்தின் மூலம் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டியது போலீசாரின் கடமை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்கவுன்டர்கள் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘என்கவுன்டர் நடத்திய அதிகாரிகளின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302&ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் அதிகாரிகள் தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்’ என்று உள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதியை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு 2007 ஆகஸ்ட் 8 அன்று சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், நடைமுறையில் இதை எந்த ஒரு என்கவுன்டரிலும் தமிழக அரசு பின்பற்றவில்லை.

பொதுவாகவே இதுபோன்ற குற்றவாளிகள் விஷயத்தில், ‘கோர்ட், கேஸ் என்று கடைசியில் விடுதலையாகி விடுவான். அவனைக் கொன்றது சரிதான்’ என்ற எண்ணப்போக்கு மக்களிடம் இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர் விஷயத்தில் நீதிமன்றம் தாமதமான நீதியை வழங்குகிறது என்பதாலோ, போலீசால் ஒரு குற்றவழக்கை திறமையாக விசாரிக்க முடியவில்லை என்பதாலோ குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் நபருக்கு போலீசே தண்டனை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. விரைந்து நீதி கிடைக்கவும், திறமையாக விசாரிக்கும்படியாகவும் நீதிமன்றத்தையும் போலீசையும் திருத்தி அமைக்க வேண்டுமே தவிர, துப்பாக்கிகளின் மூலம் தீர்வுகாண முயன்றால் ஆபத்தில்தான் முடியும். தமிழகத்திலேயே திறமையான காவல்துறை அதிகாரிகள் இருக்கும்போது, அவர்களை நம்பாமல் துப்பாக்கியை நம்பும் போக்கை போலீசார் மாற்றிக்கொள்ள வேண்டும்.

டி.அருள் எழிலன்