இடியாப்பத்தில் சிக்கல் நீக்கலாம்!





கையேந்தி பவனில் ஆரம்பித்து, பெரிய ஓட்டல்கள் வரை இடியாப்பம் மட்டும் அவர்களால், அங்கேயே தயாரிக்கப்படுவதில்லை. இடியாப்பத்துக்காக அவர்கள் நம்பியிருப்பது அதைத் தயாரிப்பதையே முழுநேர வேலையாகச் செய்கிற குடிசைத் தொழிலாளர்களை! சுவையான, பக்குவமான இடியாப்பம் தயாரிப்பது என்பது கை தேர்ந்த சமையல்கலை நிபுணர்களுக்கே சவாலான விஷயம்தான்.சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த சின்னம்மாவின் கைவண்ணத்தில் தயாராகும் இடியாப்பங்கள், குட்டிக் குட்டி ஓட்டல்கள் முதல், கல்யாண கான்டிராக்ட் வரை பல இடங்களுக்கும் சப்ளை ஆகின்றன. அறுசுவையில் சமைக்கத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, பக்குவமாக இடியாப்பம் மட்டும் செய்யத் தெரிந்தாலே, அதை பிசினஸாக எடுத்துச் செய்ய முடியும் என்கிற சின்னம்மா, தனது அனுபவங்கள், இந்தத் தொழிலில் ஈடுபட விரும்புவோருக்கான வழிமுறைகள் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘அதிகம் படிக்கலை. கணவர் ஓட்டல்ல வேலை பார்த்திட்டிருந்தார். அங்க இடியாப்பம் சப்ளை பண்ணின கம்பெனியைப் பார்த்து, நாமும் ஏன் பண்ணக்கூடாதுனு வேலையை விட்டு வெளியே வந்தார். ஆரம்பத்துல நான் இடியாப்பம் செய்து தர, அதை சைக்கிள்ல வச்சு, 1 பீஸ் 50 பைசானு தெருத் தெருவா விற்பனை பண்ணிட்டிருந்தோம். அப்புறம் ஆர்டர் அதிகமாக ஆரம்பிச்சது. வீட்டுக்குப் பக்கத்துல உள்ள ஓட்டல்களுக்கு கேட்டாங்க. அப்படியே கல்யாணங்களுக்கும் ஆர்டர் வர ஆரம்பிச்சது. இப்ப ஒரு பீஸ் 1 ரூபாய்க்கு, தினமும் குறைஞ்சது 600 பீஸ்லேர்ந்து அதிகபட்சமா 5 ஆயிரம் பீஸ் வரைக்கும் சப்ளை பண்றோம்’’ என்கிறார் சின்னம்மா.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘அரிசி, அடுப்பு, இடியாப்பத்தட்டு, அதை வேக வைக்கிறதுக்கான பெரிய பாத்திரம்... ஆரம்பத்துல 100 ரூபாய் முதலீடு போட்டாலே போதும்!’’
 
சுவை ரகசியம்..?

‘‘அரிசி சரியா இருந்தாலே, இடியாப்பம் நல்லா வரும். இதுல பெரிசா ரகசியம்னு ஒண்ணுமில்லை. பச்சரிசிதான் பெஸ்ட். புது அரிசியா இருந்தா இடியாப்பம் நல்லா வராது. அதிகம் வெந்தாலும், சரியா வேகலைன்னாலும் ருசி இருக்காது. சரியான பக்குவத்துல வேக வச்சு எடுக்கிறதுதான் டெக்னிக். இடியாப்பம் பண்ற மிஷின் கூட இன்னிக்கு கிடைக்குது. அதோட விலை ஒன்றரை லட்ச ரூபாய். ஆனாலும் அதுல பண்ற இடியாப்பம் சீக்கிரமே கெட்டுப் போயிடுது. சுவையும் கம்மி.’’

வர்த்தக வாய்ப்பு மற்றும் லாபம்?

‘‘1 கிலோ அரிசில 35 பீஸ் வரும். பழைய அரிசியா இருந்தா, 5 பீஸ் கூடுதலா வரும். இன்னிக்கு இடியாப்பம் இல்லாத ஓட்டலே கிடையாது. குழந்தைங்கள்லேர்ந்து, பெரியவங்க வரைக்கும் எல்லாரும் சாப்பிடக்கூடிய எளிமையான, ஆரோக்கிய உணவு அது. எல்லா நாளும் வியாபாரம் இருக்கும். அக்கம்பக்கத்து கடைகளுக்கு பாக்கெட் போட்டு சப்ளை பண்ணலாம். ஓட்டல்கள்ல பேசி ஆர்டர் எடுக்கலாம். 30 சதவிகித லாபம் நிச்சயம்.’’

ஆர்.வைதேகி