ரஜினியின் இளமை ரகசியம்!





ஸ்டைலும் இளமையும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது என ரஜினி பற்றி வியக்கிறது உலகம். ‘எந்திரனி’ல் இன்னும் புதுப்பொலிவு பெற்றிருந்தது அவரது தோற்றம். ஸ்டைல், ரஜினியுடனேயே பிறந்த விஷயம். சினிமாவில் அவரது இளமையும், அழகும்..? ‘சிவாஜி’ மொட்டை பாஸ், ‘எந்திரன்’ வசீகரன், சிட்டி ரோபோ, வில்லன் ரோபோ என பலவித கெட்&அப்களில் ரஜினியை இளசுகளுக்கு நிகராக இளமையாகச் செதுக்கியவர் மேக்கப் கலைஞர் பானு பாஷ்யம்.த்ரிஷா, ஜோதிகா, அசின், சூர்யா, விக்ரம், நயன்தாரா என இன்றைய முன்னணி நட்சத்திரங்களின் ஆஸ்தான மேக்கப் கலைஞர் பானுதான். இந்தியாவிலேயே சினிமா ஒப்பனைத்துறையில் பணிபுரியும் ஒரே பெண் கலைஞர். ‘7&ஆம் அறிவு’ படத்துக்காக தாய்லாந்து ட்ரிப் முடித்து திரும்பியவருடன் பேசினால், ஒப்பனை இல்லாமல் வந்து விழுகின்றன வார்த்தைகள்.

‘‘கணக்கு பாடத்துக்குத்தான் நன்றி சொல்லணும். அது சுத்தமா மண்டைல ஏறாததால படிப்பே வேண்டாம்னு ஒதுங்கி மேக்கப்ல ஆர்வம் செலுத்தினேன். பாம்பேல ப்யூட்டீஷியன் கோர்ஸையும், அமெரிக்காவில் மேக்கப் கோர்ஸையும் முடிச்சேன். நிறைய விளம்பரப்படங்கள்ல வேலை பார்த்தேன். ‘டும் டும் டும்’ படத்துல ஆரம்பிச்சது என் சினிமா பிரவேசம். இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்துலயும் ஜோதிகாவுக்கு ஒர்க் பண்ணேன். ரெண்டு பேருக்கும் மேக்கப் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவே, தொடர்ந்து அவருக்கு நான்தான் மேக்கப். சும்மா விடுவாரா ஜோ? சூர்யாவையும் என் பக்கம் திருப்பி விட்டுட்டார்!எனக்கு அமைஞ்ச படங்கள் & ‘கஜினி’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘கந்தசாமி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘அயன்’ & எல்லாமே நல்ல தீனி போட்டது. ‘எந்திரன்’ பெரும் விருந்தே வைத்தது. எந்திரனில் சூப்பர் ஸ்டாரின் அழகும் இளமையும் பேசப்படுதுன்னா அது அவருக்கே கிடைக்க வேண்டிய பெருமை. யோகா மூலம் இன்னும் இளமையை அவரோடவே வைச்சிருக்கார். அவரோட தோலில் எந்தச் சுருக்கமும் இல்லாதது பெரிய ப்ளஸ். அவருக்கு எந்த கேரக்டருக்கும் பொருந்தக்கூடிய முகவெட்டு. அதனாலதான் எல்லாமே கச்சிதமா பொருந்திப்போகுது. ‘எந்திரன்’ கெட்&அப்கள் ஓவர் நைட்ல முடிவு பண்ணினதில்ல. இயக்குநர் ஷங்கருக்கு திருப்தி வர்ற வரை நிறைய யோசிச்சோம். ஆரம்பத்துல சிட்டி ரோபோவுக்குத்தான் மேக்கப் போட்டேன். பிறகு வசீகரன், வில்லன் சிட்டினு மற்ற வாய்ப்புகளும் தேடி வந்தது. சிட்டிக்கும் வில்லன் சிட்டிக்கும் நிறையவே வித்தியாசம் காட்டியிருப்போம். சிட்டி ரொம்பவே கூல். அதனால, ரொம்ப மென்மையானவரா, ஹேண்ட்ஸம் பர்சனாலிட்டியா அவரது உருவத்தை வடிவமைச்சோம். மாஸ்க் பயன்படுத்தினது சவாலா இருந்தது. வில்லன் சிட்டிக்கு அதற்கு நேர்மாறான கேரக்டர். டிஃபரன்ட் கலர், விறைப்பான அசைவுகள், முறுக்கேறிய தோற்றம்னு ஹேர் ஸ்டைல்லயும் வித்தியாசம் காட்டினோம்.



மேக்கப்பால மட்டுமே ஒருவரை முழுமையாக அழகுபடுத்திட முடியாது. எல்லார்கிட்டேயும் அழகு இருக்கு. அதை இன்னும் கொஞ்சம் மேக்கப்பால கூட்ட முடியும், அவ்வளவுதான்! ‘எந்திரனி’ல் மேக்கப் போடறது என்னவோ 10 நிமிஷத்துல இருந்து அரை மணி நேரத்துக்குள்ளதான். பிறகு ரஜினி 5 மணி நேரம் அப்படியே உட்கார்ந்திருக்கணும். கொஞ்சம் சத்தமா பேசினால்கூட மேக்கப் கலைஞ்சுடும். இப்படி மாத்தி மாத்தி மூணு கேரக்டருக்கும் மேக்கப் போட அவர் நிறைய சிரமப்பட்டார். அவரது தோலுக்கு ரெஸ்ட்டே இருக்காது. ஆனா, எதையுமே சிரமமா நினைக்க மாட்டார். ரொம்ப பொறுமையா, பக்குவமா ஏத்துக்கிட்டு பொம்மை மாதிரி அப்படியே உட்கார்ந்திருப்பார். அந்த அர்ப்பணிப்புதான் அவரது இளமையின் முதல் ரகசியம்.சூப்பர் ஸ்டாரா எல்லோருக்கும் ரஜினியைப் பிடிக்கும். அவரோட பர்சனல் தெரிஞ்சா இன்னும் ரஜினியைப் பிடிக்கும். எல்லோரையும் சமமா நடத்துகிற பாங்கு, மத்தவங்ககிட்ட காட்டுற அன்பு, மரியாதைன்னு கத்துக்க அவர்கிட்ட எவ்வளவோ விஷயம் இருக்கு. அந்த மனசும் அவரது இளமை ரகசியத்துக்கான காரணங்கள்ல ஒண்ணு.எனக்கு சாக்லெட்னா ரொம்ப ப்ரியம்னு அவருக்கு தெரியும். என்னோட வேலையில சந்தோஷப்பட்டுட்டார்னா போதும்... உடனே ஒரு பாக்ஸ் நிறைய சாக்லெட் கொடுப்பார். நிறைய முறை கொடுத்திருக்கார். எல்லாமே ஹெல்த்தி சாக்லெட். மேக்கப் பார்த்து சந்தோஷப்படுற அவர், ‘உனக்குத் தெரியாது பானு... நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு’னு அடிக்கடி சொல்லுவார். அதுக்கான அர்த்தம் இப்ப வரை எனக்குப் புரியல!‘ஏழாம் அறிவு’ல வித்தியாசமான சூர்யாவைப் பார்க்கலாம். மேக்கப்புக்கு அதிக முக்கியத்துவம். அடுத்து சித்தார்த்தோட ‘180’ படம். நிறைய திட்டம் வைச்சிருக்கேன். கதை, கேரக்டர், டைரக்டர்னு எல்லாம் அமைந்தால் நான் எதிர்பார்க்கிற உயரத்தைத் தொட முடியும்... பார்க்கலாம்!’’ என்கிறார் பானு நிறைய எதிர்பார்ப்புகளோடு!

ஆர்.எம்.திரவியராஜ்