பங்குச் சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க!





''பங்குகளை வாங்குவதற்கு எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று கேட்டால் பங்குகளின் விலையை கவனிக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே... என்ன, 'விலை குறைவாக இருந்தால் வாங்கலாம், அதிகமாக இருந்தால் வாங்கக் கூடாது’ என்று சொல்வதற்கு இது என்ன கத்தரிக்காய் வியாபாரமா... இல்லை, கம்ப்யூட்டர் வியாபாரமா..?’’ & இதுதானே உங்கள் கேள்வி..!

அதற்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இதில் விலை ஏறினால் கொஞ்சம் அமைதி காக்க வேண்டும். விலை சரிந்தால் வாங்க முடிவெடுத்துக் கொள்ளலாம். அதென்ன கணக்கு... எல்லா வியாபாரத்தையும் போல இல்லாமல் இது உல்டாவாக இருக்கிறது என்று யோசிக்கலாம். அதுதான் பங்குச் சந்தை!ஒரு பங்கின் விலை ஏறிக் கொண்டே போகிறது என்றால் என்ன பொருள்..? அந்தப் பங்குக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது... பலருடைய கவனத்தை அந்தப் பங்கு ஈர்த்திருக்கிறது... என்ன விலை கொடுத்தாவது அந்தப் பங்கை வாங்கிவிடத் துடிக்கும் முதலீட்டாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்றுதான் பொருள். அப்படி பலரும் முட்டி மோதும்போது, ஆரம்பகட்ட முதலீட்டாளராக இருக்கும் நாமும் அவர்களோடு முட்டி மோதக் கூடாது. ஏன் எல்லோருக்கும் அந்த பங்கின் மீது ஆர்வம் என்று ஆராய வேண்டும்.சில நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிட்ட சில நியாயமான காரணங்களால் விலை ஏறிக் கொண்டேபோகும். அந்த நிறுவனத்துக்கு புதிய ஆர்டர்கள் கிடைத்திருக்கலாம். அல்லது, அந்த நிறுவனம் சார்ந்த துறைக்கு ஏதாவது அரசு சலுகைகள் கிடைத்திருக்கலாம். அல்லது, அந்த நிறுவனத்துடன் பெரிய நிறுவனம் ஏதாவது ஒப்பந்தம் செய்திருக்கலாம். அப்படிப்பட்ட காரணங்களை நாம் ஆராய்ந்து கண்டுபிடிக்கும்போது, இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த விலையேற்றம் இருக்கும் என்பதையும் கணித்துவிட முடியும்.ஒரு உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், சமீபத்தில் லிஸ்ட் ஆன அரசு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவைச் சொல்லலாம். தீபாவளிக்கு முந்தைய தினம் லிஸ்ட் ஆன இந்த பங்கு அன்றைக்கே நூறு ரூபாய் வரையில் வித்தியாசம் காட்டும் அளவுக்கு விலை உயர்ந்தது. அதாவது, ஐ.பி.ஓ. மூலம் விண்ணப்பித்து உங்களுக்கு பங்கு ஒதுக்கப்பட்டிருந்தது என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பங்குகளை லிஸ்ட் ஆன அன்றைக்கே விற்பனை செய்திருந்தால் ஒரு பங்கு மீது உங்களுக்கு நூறு ரூபாய் லாபம் கிடைத்திருக்கும்.

அடுத்து தீபாவளி அன்று ஒரு மணி நேரம் நடைபெற்ற முகூர்த்த வணிகத்தின் போதும் விலை ஏறித்தான் இருந்தது. (குஜராத், மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் தீபாவளி தினத்தன்றுதான் லட்சுமி பூஜை செய்து புதுக்கணக்கு போடுவார்கள். அதை வைத்துத்தான் அவர்கள் புதுக்கணக்கு தொடங்கும் வகையில் ஒரு மணி நேரம் பங்கு வர்த்தகம் நடைபெறுகிறது.)ஆனால், அடுத்து வந்த வர்த்தக தினங்களில் அந்தப் பங்கின் விலை கொஞ்சம் இறங்கிக் கொண்டே வருகிறது. பட்டியல் இடப்பட்ட விலையும் கொஞ்சம் அதிகம். அன்றைக்கு வர்த்தகமான விலையும் கொஞ்சம் அதிகம் என்பதுதான் பலருடைய கணிப்பாக இருந்தது. ஏன் இந்த விலையேற்றம் என்றால், அந்த பங்கின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக பலரும் போட்டி போட்டுக் கொண்டு வாங்க முற்பட்டதுதான். அதனால் விலை ஒரே நாளில் ஏறியது. அதன்பிறகு கொஞ்சம் அதிக விலை கொடுத்துவிட்டோமோ என்று முதலீட்டாளர்கள் யோசிக்கத் தொடங்க, கொஞ்சம் சரிந்திருக்கிறது.இப்போது ஒரு கேள்வி... கோல் இந்தியாவை லிஸ்ட் ஆன முதல் நாளன்று வாங்கியது சரியா..? ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு என்ற அடிப்படையில் கோல் இந்தியா பங்கு சிறப்பானதுதான். கிட்டத்தட்ட எல்லா நிபுணர்களுமே அந்த பங்கினை வாங்கச் சொல்லித்தான் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இன்னும் சில சர்வதேச பங்குச் சந்தைகளிலும் இந்த நிறுவனம் பட்டியலிடப்பட இருப்பதால், அதன் மதிப்பு இன்னமும் அதிகமாகத்தான் போகிறது. அதோடு, நவரத்ன நிறுவனம் என்ற மதிப்போடு இருக்கும் கோல் இந்தியா நிச்சயமாக முதலீட்டுக்கு ஏற்ற பங்குதான்.

 
ஆனால், முதல் நாள் அடித்துப் பிடித்துக் கொண்டு வாங்காமல், இரண்டு நாள் கழித்து வாங்கியிருந்தால் கொஞ்சம் குறைவான விலைக்கு வாங்கியிருக்க முடியும்தானே! அதைத்தான் சொல்கிறேன்.எப்போதுமே ஒரு பங்கு தினம் தினம் விலையேறிக் கொண்டே போகும்போது ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ‘அந்தப் பங்கு அதற்கான விலையில்தான் வர்த்தகமாகிறதா... அல்லது அதிக விலைக்கு விற்பனையாகிறதா’ என்பதை கவனித்து முதலீடு செய்வதுதான் சரியான முதலீடாக இருக்கும். அது எப்படி ஒரு பங்கு அதிக விலைக்கு விற்பனை ஆக முடியும் என்பதுதானே உங்கள் கேள்வி? முடியும்!பங்குச் சந்தையில் லாபகரமாக வர்த்தகம் ஆகும் பங்குகள் எல்லாமே அதன் உண்மையான மதிப்பை விட அதிக விலையில்தான் வர்த்தகமாகிக் கொண்டிருக்கின்றன. அதன் உண்மையான மதிப்பு பத்து ரூபாயாகத்தான் இருக்கும். ஆனால், அந்த நிறுவனத்தின் திறமை, உழைப்பு போன்ற தன்மைகளுக்கு ஏற்ப, நல்ல லாபத்தைக் கொடுத்து அதிக விலைக்கு வர்த்தகமாகின்றன. நான் சொல்வது அதையல்ல... சில நிறுவன பங்குகள் இந்த உழைப்பு, திறமை இதற்கெல்லாம் உள்ள மதிப்பைவிட அதிகமான விலைக்கு வர்த்தகமாகின்றன.ஒரு நிறுவனத்தின் மதிப்பு, அதன் செயல்பாடு, அது ஈட்டும் லாபம் போன்ற சில காரணிகளின் அடிப்படையில் ஒரு பங்கின் மதிப்பும் இருக்க வேண்டும். நாம் ஆரம்பத்தில் சொன்னதுபோல, ஒரு நிறுவனத்தின் மொத்த லாபத்தை அதன் பங்குகளின் எண்ணிக்கையால் வகுத்துப் பார்த்தால் கிடைப்பதுதான் அந்த பங்குக்கு கிடைக்கும் லாபம். அதன் அடிப்படையில்தான் பங்கின் மதிப்பு இருக்கமுடியும். ஆனால், அதைவிட அதிகமான விலையில் பங்கு வர்த்தகமாகும்போது அதை வாங்கலாமா... கூடாதா..?‘கொஞ்சம் பொறுங்க... அது என்ன, ஒரு பொருள் அதன் உண்மையான மதிப்பை விட அதிகமான விலைக்கு விற்பனையாகுமா... அது எப்படி? அதுக்கு விளக்கம் சொல்லிட்டு அடுத்த விஷயத்துக்குப் போங்க’ என்று மடக்குகிறீர்களா..?

காத்திருங்கள்...  சொல்கிறேன்!