டைம் டேபிள்... டைனிங் டேபிள்!





வறுமையில் பிறந்து தன் அறிவாலும் நல்லோர் உதவியாலும் மேற்படிப்பை எட்டிய மாணவன் மணிவண்ணன் ‘ரோல்மாடல்’ பகுதியில் இடம்பெற்றிருக்க வேண்டியவன். அதுவரை பொறுத்திராமல் முடிவு தேடிக் கொண்ட அவனை நினைத்தால் நெஞ்சம் விம்முகிறது!
- கே.அம்பிகாபதி, திருநெல்வேலி.

‘கறுப்புதான் உலகத்துக்கே பிடிச்ச கலரு’ என்று கிளம்பியிருக்கும் ‘வாவ்’ அமைப்பை பாராட்டி வரவேற்று நாம் ‘சிவப்புக் கம்பளம்’ விரிக்கலாமா... கூடாதா? டவுட்டா இருக்கு பாஸ்..!
- ரா.பாபு, கடலூர்-2.

வாராவாரம் தென்றலாகவும் சூறாவளி காற்றாகவும் வீசிய பழநிபாரதியின் ‘காற்றின் கையெழுத்து’ விரைவாக முடிந்தது ஏமாற்றம் தந்தது. ஆனால், மனுஷ்யபுத்திரன் எழுதும் புதிய பகுதி பற்றிப் படித்தவுடன், ஏமாற்றம் மறைந்து எதிர்பார்ப்பு பெருகியது!
- வி.நிம்மி, சென்னை-109.

சட்டசபையில் பிட்டு படம் பார்த்த மந்திரிகளை நகைச்சுவையாக நையப் புடைத்து விட்டது ‘நயம்பட பேசு!’ யப்பா ஆல்தோட்ட பூபதி... நீ கலக்கு நைனா!
- எஸ்.அதியமான், புதுச்சேரி.

‘இறந்த பின்னும் தன் காதலனை மானசீகமாக மணந்தார் நிறைமாத கர்ப்பிணி’. கோடம்பாக்க அசிஸ்டென்ட்டுகள் தயாரித்த ஒன்லைன் போலவே இருக்கும் இந்தச் செய்தி, நிஜத்தில் நடந்தது என்பதை நம்பவே முடியவில்லை!
- சி.வி.மல்லிகா மணியன், காரமடை.

‘ஒரு முதியோர் இல்லம் தோன்றினால் நூறு கூட்டுக் குடும்பங்கள் சிதைகின்றன’ என்று 35 வருடங்களுக்கு முன்பே பிரசாரம் செய்த முதியோர் நல மருத்துவர், வி.எஸ்.நடராஜனைப் பாராட்டியே தீர
வேண்டும்!
- டி.வி.ரமா, செங்கல்பட்டு.

பாவம்ங்க காண்டாமிருகம். அதோட இனமே அழியுற நிலையில இருக்காம்... இதுல காண்டாமிருகக் கொம்பு நமக்கு பலான பலத்தைக் கொடுக்குமாம். மூட நம்பிக்கைக்கும் ஒரு முகாந்திரம் வேணாம்?
- வி.என்.ஸ்டீபன் சார்லஸ், திருச்சி.

அடுத்தடுத்து மூன்று படங்கள் என்ற அஜித்தின் அதிரடி டைம் டேபிள்... நமக்கெல்லாம் விருந்து படைக்கப் போகும் டைனிங்டேபிள்தான் போங்க!
- இரா.கணபதிராவ், நாகர்கோவில்.

ஓவியக் கண்காட்சிகளைப் பற்றியே கேள்விப்பட்ட காதுகளுக்கு ஹியூமராலஜி புதுசாக இருந்தது. வயிறு குலுங்க சிரிக்க வைத்து மொத்த உடலுக்கும் புது உற்சாகம் கொடுத்து விட்டது! பிரபல கார்ட்டூனிஸ்டுகளும் ‘ஹியூமராலஜி’ நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்!
- ஜி.டி.மணியரசி, சிவகங்கை.

உறவுகளுக்குப் புது அர்த்தம் கொடுக்கிறது ‘விஜயா டீச்சர்’ தொடர்கதை. தொய்வில்லாமல் கதையோட்டம் செல்வதும் நன்று.
- ஜி.ரவிக்குமார், புதுச்சேரி.