அதிர்ஷ்டம் மட்டுமே வெற்றியைத் தராது! உதயநிதி ஸ்டாலின்






தந்தையின் அடையாளத்தை இனிஷியலோடு நிறுத்திக் கொள்ளாமல் பெயரளவிலும் அவரை முழுமையாக தன்னுடனேயே இருத்திக் கொள்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே. அப்படி ஒரு தனயன் உதயநிதி ஸ்டாலின். ‘‘என் இன்ஸ்பிரேஷன் அப்பாதான்...’’ என்கிற உதயநிதி, இன்று தமிழ்ப் படவுலகில் வெற்றியடைந்திருக்கும் முன்னணித் தயாரிப்பாளர். அதில் இன்னும் ஒரு பரிமாணமாக அவர் இப்போது நடிகனும் கூட. அவரது ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ அவரை ஹீரோவாக்கி இருக்கிறது. ‘‘என் சினிமா பிரவேசம் நீண்ட பிராசஸ். பூம்புகார் புரொடக்ஷன்ஸ், மோகனா மூவீஸ்னு எங்களைச் சுத்தி நடந்த புரொடக்ஷன் வேலைகள், எங்க வீட்டைச் சுத்தியே கூட படப்பிடிப்புகளாக நடந்த நிகழ்வுகள், சீரியல், சினிமான்னு நடிச்ச அப்பாவோட ஆரம்ப கால ஈடுபாடு இவை எல்லாமே சினிமா மேல ஆர்வத்தை வளர்த்த விஷயங்கள்னு சொல்லலாம். நான் சினிமாவுக்கு வந்த அதே காரணம்தான் நடிக்க ஆசைப்பட்டதுக்கும்! அது எங்கே, எப்படி நிகழ்ந்ததுன்னு துல்லியமா சொல்ல முடியலை. ‘குருவி’ படம் நடந்துக்கிட்டிருந்தபோது ஒரு தெலுங்கு டைரக்டர் என்னை சந்திச்சு ஒரு கதை சொன்னார். சொல்லி முடிச்சதும், ‘நீங்கதான் இந்தப்பட ஹீரோ...’ன்னார். ‘எனக்கு நடிக்கிறதுல விருப்பமில்லை...’ன்னு சொல்லி அனுப்பிட்டேன். எனக்கு அந்த ஸ்கிரிப்ட் பிடிக்கலை போலிருக்குன்னு நினைச்சு, பத்து நாள்ல இன்னொரு ஸ்கிரிப்ட்டோட வந்துட்டார். நான் நடிக்கப் போறதில்லைன்னு தெளிவா சொல்லியும் கூட, ‘நீங்க ஒருநாள் நடிக்க வருவீங்க...’ன்னுட்டுப் போனார். அவர் பெயர் கூட நினைவில்லை. இந்த விஷயம் வெளியே வந்து மீடியாக்கள் நான் நடிக்கப் போறதாவே முடிவு பண்ணிச்சு. அதைத் தொடர்ந்து தமிழ் டைரக்டர்ஸும் கேட்டாங்க. இப்படியே என் நடிப்பாசையை வளர்த்துட்டாங்க.



நடிக்கலாம்னு நானே முடிவெடுத்ததும் முதல்ல என் மனைவிகிட்டதான் சொன்னேன். ‘எதுக்குத் தேவையில்லாத வேலை. புரட்யூசரா மரியாதையோட இருக்கீங்க. அது போதுமே...’ன்னு சொன்னவங்க, பிறகு ‘நல்ல படமா பார்த்து நடிங்க...’ன்ற அளவுக்கு நெருக்கமா வந்து ஒரு கட்டத்துல முழுசா சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. அம்மாவுக்கும் கூட நான் நடிக்கறதுல முதல்ல விருப்பமில்லாமதான் இருந்தது. சமீபத்துல நான் நடிச்ச பாடல்களைப் போட்டுக் காட்டிய பிறகுதான் அவங்களுக்கு நம்பிக்கை வந்துச்சு. பாடல்களைப் பார்த்த அப்பாவும் மகிழ்ச்சியோட கைகொடுத்து வாழ்த்து சொன்னார்...’’ ‘‘நடிச்ச அனுபவத்தையும் சொல்லுங்க..?’’

‘‘நான் பார்த்த படங்கள்ல எனக்கு ‘எஸ்.எம்.எஸ்’ பிடிச்சிருந்தது. அந்த டைரக்டர்கிட்ட நடிக்கணும்னு ஆசைப்பட்டு ராஜேஷைத் தேடினேன். அவர் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ எடுத்துக்கிட்டிருக்கார்னு சொன்னாங்க. கடைசியில அந்தப் படத்தை நாங்களே வெளியிட நேர்ந்தது. அப்ப அவரைப் பிடிச்சுக்கிட்டேன். ‘கண்டிப்பா பண்ணலாம்...’னு சொன்னவர், இந்தக் கதையைச் சொன்னார். இந்தப் படத்துக்கு முதல்ல அவர் வச்ச டைட்டில் ‘சுமாரான பையனும், சூப்பர் ஃபிகரும்’. ‘ஐய்யயோ, ஃபிகர்னு எல்லாம் டைட்டில்ல வேணாம் சார்...’ன்னேன். பிறகுதான் ‘எஸ்.எம்.எஸ்’ படப் பாடலான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ன்னு வச்சு சுருக்கமா ‘ஓகே ஓகே’ன்னார். நானும் ‘ஓகே’ன்னேன்.



நடிக்கிறதுக்கு ஒர்க்ஷாப் வச்சு, வீடியோவில ஷூட் பண்ணி, என் தன்னம்பிக்கையையும் வளர்த்தார். நான் சண்டை, சிலம்பம்னு கத்துக்கப் போனதைக் கேள்விப்பட்டு, ‘சார்... இதுல ஆக்ஷனே கிடையாது’ன்னார். ரொம்ப நல்லதுன்னு கிளாஸை கட் பண்ணிட்டேன். கஷ்டம்னு நான் உணர்ந்த விஷயங்கள்ல டான்ஸும் ஒண்ணு. ரொம்பக் கஷ்டப்பட்டேன். தினேஷ் மாஸ்டர் தனித்தனி ஸ்டெப்புகளா சொல்லிக் கொடுத்து எடுத்தார். டான்ஸ்ல இன்னும் கூட இம்ப்ரூவ் பண்ணிக்கணும்னு தெரியுது. என் டான்ஸைப் பார்த்த ஆர்யா கூட கலாய்ச்சார். படம் முழுக்க நான் சந்தானத்தோடதான் வருவேன். பேப்பர்ல இருக்கிறதை இம்ப்ரூவைஸ் பண்ணி டேக்ல வேற மாதிரி நடிப்பார். நான் புரியாம நின்னுடுவேன். சமயங்கள்ல அவர் நடிப்பைப் பார்த்து சிரிப்பு வந்து வசனத்தை விட்டுடுவேன். அந்த மாதிரி சமயங்கள்ல எல்லாம் அவரோட ஒத்துழைப்பைச் சொல்லியே ஆகணும். அவர் பின்னந்தலை காட்டியபடி என்னோட பேசற சஜஷன் ஷாட்கள்ல எல்லாம் நான் பண்ண வேண்டிய ரீயாக்ஷன்களை அவர் செய்து காட்டுவார். அதை அப்படியே பார்த்து நடிச்சேன்...’’ ‘‘ஹன்சிகாவோட காதல் காட்சிகள்ல இயல்பா நடிக்க முடிஞ்சதா..?’’

‘‘அதுவும் கஷ்டமாத்தான் இருந்தது. அவங்க குழந்தையில இருந்தே ஆர்ட்டிஸ்ட். டேக்ல ஈசியா நடிச்சுட்டுப் போயிடறாங்க. எனக்காக லேட் ஆனாலும் அவங்களும் கோ ஆபரேட் பண்ணி நடிச்சாங்க. க்ளைமாக்ஸ்ல நான் ஹன்சிகாவுக்கு முத்தம் கொடுத்து முடிக்கிற மாதிரி சீன். என்னோட தயக்கத்தைப் பார்த்து ‘வேலைக்கு ஆகாது’ன்னு நினைச்ச டைரக்டர், எனக்கு ஹன்சிகா முத்தம் கொடுத்து முடிக்கிறமாதிரி சீனை மாத்தி எடுத்தார். காதல் படம்னாலும் ஹன்சிகாவோட காதலைவிட சந்தானத்தோட ஃபிரண்ட்ஷிப் தூக்கலா இருக்கும். படத்தைப் பார்த்த என் மனைவி கூட, ‘ஹன்சிகாவைவிட சந்தானத்தோட உங்க கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆயிருக்கு...’ன்னு சொன்னாங்க. அதுல அவங்களுக்கு ஒரு திருப்தி..!’’ (சிரிக்கிறார்) ‘‘தாத்தா படம் பார்த்தாரா..?’’

‘‘இன்னும் இல்லை. ஆரம்பத்திலேர்ந்து கேட்டுக்கிட்டிருக்கார். ‘ஃபர்ஸ்ட் காப்பி ரெடியானதும்தான் காட்டுவேன்’னு சொல்லியிருக்கேன். அவர் முழுமையா பார்க்கணும். ஆனா டைட்டில் வச்சதிலேர்ந்து ஆர்வமா கேட்டுக்கிட்டே இருக்கிறவர், ஆடியோ சிடியைக் கொண்டுவரச் சொல்லி போட்டுக் கேட்டார். ஹாரிஸ் மியூசிக்ல அவருக்கு ‘அழகே அழகே’, ‘அடடா ஒரு தேவதை’ பாடல்கள் பிடிச்சிருக்கு..!’’
‘‘எளிதா எல்லாமே கிடைக்கிற ‘லக்கி பெர்சனா’ உங்கமேல இருக்கிற விமர்சனம் புரியுதா..?’’ ‘‘நான் நடிகனாகிட்டது கூட ‘லக்’கா இருக்கலாம். ஆனா நான் தயாரிக்கிறேன், நடிக்கிறேன்ங்கிற காரணத்துக்காக மட்டும் படம் வெற்றியடைஞ்சிடுமா..? வெற்றி அதிர்ஷ்டத்துனால மட்டும் கிடைக்கறதில்லை. அதுக்கு தேர்ந்தெடுக்கும் திறமையும், திட்டமிடலும் வேணும். ரெட் ஜெயன்ட்டைப் பொறுத்தவரை இங்கே நாங்க பத்து பேர் இருக்கோம். ஒரு புராஜெக்ட் எட்டு பேருக்கு பிடிச்சிருந்தாதான் மேலே நகரும். அதைத்தான் வெற்றிக்கான அடித்தளமா நினைக்கிறேன்..!’’
- வேணுஜி