நிழகல்கள் நடந்த பாதை





இன்று புதிதாய்...

பசி, காமம் என்ற உணர்ச்சிகளுக்கு நிகராக மனிதனை வாட்டும் இன்னொரு பிரச்னை இருக்கிறது... ஒருமுறை சென்னையில் உள்ள ஒரு ரோட்டரி கிளப்பில், தங்களது உழைப்பினால் உயர்ந்த நான்கு பேரைக் கூப்பிட்டு கௌரவித்தார்கள். சென்னையின் மிகப்பெரிய நிறுவனங்களின் முதலாளிகளோடு என்னையும் உட்கார வைத்திருந்தார்கள். இது ஏதோ ஆள்மாறாட்டம் என்று எழுந்திருக்கச் சொல்லிவிடுவார்களோ என்று கடைசிவரை பயமாகவே இருந்தது.

இப்படித்தான் போன வருடம் ஒரு பிரபல வார இதழ், தமிழகத்தின் பத்து செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக என்னைத் தேர்வு செய்தது. என்கூட யார் எல்லாம் இருந்தார்கள் என்று தெரிந்தால் அசந்து போய் விடுவீர்கள். எனது மகளுக்கு ஒரு எல்.கே.ஜி சீட்டிற்காக ஒரு பள்ளியில் இரண்டு மாதம் போராடி, தோல்வியடைந்து, வெறுத்துப் போய், கல்வி அமைப்பிற்கே எதிரானவனாக மாறியிருந்த நேரத்தில்தான் இந்த செய்தி வெளிவந்திருந்தது. அதன் ஆசிரியருக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதலாமா என்றுகூட யோசித்தேன்.

மேற்படி பாராட்டுக் கூட்டத்தில் அவரவரும் தாங்கள் கடந்து வந்த சாதனைப் பயணத்தின் சவால்களையும் போராட்டங்களையும் மனம் உருகும்படி விவரித்தனர். எனக்கு எப்படி யோசித்தும் அந்த மாதிரி எதுவுமே நினைவுக்கு வரவில்லை. ஏதாவது பொய் சொல்லி சமாளிக்கலாமா என்று நினைத்தேன். பொதுவாக எல்லோருக்கும் பெரிய கூட்டத்தைக் கண்டால் கற்பனை கரை புரண்டோடும். எனக்கு நேர் எதிர். சுத்தமாக வறண்டு போய்விட்டது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் எனது முறை வந்ததும் நேராக என்னைப் பார்த்து அம்பானி, விஜய் மல்லையாவிடம் கேட்கவேண்டிய அந்தக் கேள்வியைக் கேட்டார்... ‘‘வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் நீங்கள் புதுப் புது முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறீர்கள். இதற்குத் தூண்டுதலாக இருந்தது எது?’’ நான் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். ‘‘ஒரு காரணமும் கிடையாது. எனக்கு பயங்கரமாக ‘போர்’ அடிக்கும். அதிலிருந்து தப்பவே வாழ்க்கையில் நான் நிறைய விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறேனே தவிர, வேறு எந்த லட்சியமும் இல்லை’’ என்றேன். கூட்டத்தில் பேரமைதி நிலவியது.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு இடத்திலும் நம்மிடம் வந்து சேரும் இந்த சலிப்பைத்தான் பசிக்கும் காமத்திற்கும் நிகரான ஆதாரமான பிரச்னையாக நினைக்க வேண்டியிருக்கிறது. சிந்தனையிலிருந்து செயல் பிறக்கிறது என்கிறார்கள்; எனக்கென்னவோ அது சலிப்பிலிருந்துதான் பிறக்கிறது என்று தோன்றுகிறது. மனித மனம் எப்போதும் கனவிலேயே வாழ விரும்புகிறது. அது எல்லாவற்றிற்கும் விரைவாகப் பழகி விடுகிறது. எல்லாவற்றையும் சீக்கிரமே அதன் எல்லைவரை போய் துய்த்துக் களைப்படைந்து விடுகிறது. உடனே அடுத்தது என்ன என்ற கேள்வி பிறந்து விடுகிறது. மனிதர்களின் சாதனைகள், குற்றங்கள், உறவுகளில் ஏற்படும் பிறழ்வுகள் என எல்லாவற்றையும் தூண்டும் ஆதார உணர்ச்சியாக இந்த சலிப்புதான் இருக்கிறது. வேலை, வீடு, அன்பு, காதல், ஊர் எல்லாவற்றிற்குமே ஒரு கட்டத்தில் நமக்கு புதிதாகத் தர எதுவுமில்லாமல் போய்விடுகிறது. அப்போது நமது வாழ்க்கையே நமக்கு ஒரு சிறைச்சாலையாகவும் சித்திரவதைக் கூடமாகவும் மாறுகிறது.



மனிதர்களை அவர்களின் சலிப்பிலிருந்து விடுபடச் செய்வதற்கான வழிமுறைகள் என்பது இன்று ஒரு மாபெரும் சர்வதேச வர்த்தகம். எல்லா கேளிக்கைகளும் பொழுதுபோக்குகளும் கலாசார நடவடிக்கைகளும் இதோடுதான் சம்பந்தப்பட்டிருக்கின்றன. சுவாரசியமே இல்லாத இந்த வாழ்க்கையை சுவாரசியமாக்க மனிதர்கள் பணத்தை மட்டுமல்ல, சில சமயம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் சலிப்பு என்பது நமது மனம் நமது வாழ்க்கையைப் பற்றி எழுப்பும் ஒரு கடுமையான விசாரணை என்று நாம் எப்போதாவது உணர்ந்திருக்கிறோமோ? அப்படி உணரும்போதுதான் பாரதி சொன்ன ‘இன்று புதிதாய் பிறப்பது’ என்றால் என்னவென்று நமக்குப் புரியத் தொடங்கும்... கள்வர்களின் கதைகள் இந்த உலகில் கள்வர்களைப் பற்றி உள்ளதுபோல சுவாரசியமான கதைகள் வேறு யாரைப் பற்றியும் இல்லை. கள்வர்கள் வாழ்க்கையில் மட்டுமல்ல, கற்பனைக்கும் பெரும் சவாலாக இருந்து வந்திருக்கிறார்கள்.

நண்பர் வசந்தபாலனின் ‘அரவான்’ பார்த்தபோது அது கள்வர்களைப் பற்றிய முதல் தமிழ்ப்படம் என்று தோன்றியது. இதுவரை மக்களின் வாழ்க்கையில் கள்வர்கள் எப்படி வந்துபோகிறார்கள் என்பதைத்தான் நமது படங்கள் காட்டியிருக்கின்றன. ஆனால் கள்வர்களின் வாழ்க்கையை ஒரு படம் இங்கே முதன்முறையாக பேச முற்படுகிறது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது எனக்குள் எழுந்த கேள்வி, ‘ஒரு கள்வனின் கண்ணீரை சமூகம் எப்படிப் பார்க்கிறது? ஒரு பொது மனதிற்கு அதன் மேல் பரிவு ஏதும் உண்டா?’ என்பதுதான். ‘அரவான்’ முழுக்க கள்வர்களின் ஆசாபாசங்களையும் தார்மீக நியாயங்களையும் பேசுகிறது. ஆனால் காலகாலமாக உலகின் எல்லா சமூகங்களும் களவை ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகவேதான் பார்த்து வந்திருக்கின்றன. கள்வர்கள் ஒரு சமூகத்திற்கு வெளியே இருப்பவர்கள்; ஒரு சமூகத்தின் உழைப்பை அபகரிப்பவர்கள்; ஒரு சமூகத்தின் தார்மீக நியதிகளை மதிக்காதவர்கள். அவர்கள் மனிதர்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பவர்கள். அதனால்தான் ஒரு கள்வனை தண்டிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எளிய மனிதர்கள்கூட மிகவும் கொடூரமாக மாறிவிடுகிறார்கள். அரவான் கள்வர்களுக்கும் சமூகத்திற்கும் இடையில் இருக்கும் இந்த ஆழமான பகையை எதிர்கொள்ளாமல் தவிர்த்துவிடுகிறது. நியாயமற்றவர்களின் நியாயங்களை ஒரு கலை பேசும்போது அது மனிதர்களின் பொதுவான தார்மீக உணர்ச்சிகளோடு இணைய முடியாமல் போகிறது.

கள்வர்களின் உணர்ச்சிப் போராட்டங்களை காட்டுவதல்ல அரவானின் பிரச்னை. அதற்கு ஒரு காவியத் துயரத்தின் மதிப்பை அது பார்வையாளனிடம் கோர முயற்சிக்கிறது. ஆனால் காவியத் துயரத்தின் எல்லா உணர்ச்சிப் பெருக்குகளும் ஆழமான அறவியல் நியாயங்களால் உருவாகின்றன. அந்த அறவியல் நியாயம் அரவானில் இல்லை. கனவின் குழந்தைகள் அண்மையில் ‘சத்வா’ என்ற அமைப்பு, மன வளர்ச்சியற்ற குழந்தைகளுக்கான பள்ளிகளின் குழந்தைகள் தயாரித்த கைவினைப் பொருள்களின் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. பேசக் கூப்பிட்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகள் உருவாக்கிய ஒவ்வொரு சின்னச் சின்ன பொருள்களையும் பார்த்தபோது, ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்ள எவ்வளவு பிரயாசைப்பட்டிருப்பார்கள் என்று தோன்றியது. அத்தகைய ஒரு குழந்தையை ஒன்றின்மேல் மனம் குவியச் செய்து பயிற்சி அளிப்பது சாதாரண விஷயமல்ல. இயற்கை மனிதர்கள் மேல் ஏற்படுத்தக் கூடிய ஒரு மிகப் பெரிய விபத்து, ஒரு குழந்தையை மனம் சிதறுண்டு போகச்செய்வதுதான்.

பெரும்பாலும் இத்தகைய பள்ளிகளை நடத்துபவர்கள், தங்களுடைய குழந்தை ஒன்றிற்கு இடம்தேடி அலைந்து... சரிவராமல் தாங்களே சொந்தமாகத் தொடங்கியவர்கள்தான். நான் போன ஒரு பள்ளியில் ஒரு பையன் இடைவிடாமல், ‘வீட்டுக்குப் போகணும்... அண்ணியை பார்க்கணும்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். எனது நண்பர் ஒருவர் அத்தகைய தன் பையனிடம் கடுமையாக அடி வாங்குவார். அவனது கோபத்தைத் தணிக்க ஒரே வழி... காரில் அமர வைத்து ஊர் சுற்ற வேண்டும். ‘தினமும் ஆறு, ஏழு மணி நேரம் அவ்வாறு சுற்றிக்கொண்டிருக்கிறேன்’ என்றார். இந்தக் குழந்தைகள் பருவ வயதை எட்டும்போது அவர்களின் துயரங்கள் கடுமையாக மாறிவிடுகின்றன. பாதுகாப்பு கருதி அத்தகைய பெண் குழந்தைகளுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சையை சர்வசாதாரணமாக செய்கிறார்கள். அத்தகைய குழந்தைகளைப் பராமரிக்கும் பெற்றோர், அதற்காக தங்கள் முழு வாழ்க்கையையும் கொடுக்கிறார்கள். இந்த பூமியும் இந்த வாழ்க்கையும் இந்தக் குழந்தைகளுக்கும் சொந்தம் என்று நம்புகிறவர்கள் இருக்கும்வரை இவர்களுக்கு இங்கே ஒரு இடம் நிச்சயம் உண்டு. நார்மலான மனிதர்களின் எத்தனையோ விநோதமான நடவடிக்கைகளை சமாளித்துக் கொண்டிருக்கும் நாம், இந்தக் குழந்தைகளிடமும் நியாயமாக நடந்துகொள்ளலாம்தானே?
(இன்னும் நடக்கலாம்...)