தமிழ்நாட்டில் பவர்கட்... இலங்கைக்கு போகுமாம் மின்சாரம்!





ஒருபுறம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம் தொடர, இன்னொருபுறம் மின் உற்பத்திக்கான பணிகள் வேகம் பிடிக்கத் தொடங்கிவிட்டன. முதல் அணு உலை விரைவில் தன் இயக்கத்தைத் தொடங்கும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்நிலையில், ‘கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும், மின்வெட்டால் தவிக்கும் தமிழகத்துக்கே தரவேண்டும்’ என்ற தமிழக முதல்வரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ‘மின் ஒப்பந்தச் சட்டப்படி என்ன ஒதுக்கீடோ அது மட்டுமே தரமுடியும்’ என்கிறார் மத்திய மின்துறை இணையமைச்சர் வேணுகோபால்.
மின் ஒப்பந்த சட்டம் என்னதான் சொல்கிறது..?

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன், நேஷனல் ஹைட்ரோ பவர் கார்ப்பரேஷன், அணுசக்திக் கழகம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் நிறுவப்படும் மின்ஆலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, நிறுவனம் இயங்கும் மாநிலத்துக்கும், அருகில் உள்ள பிற மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும். இதற்கு பல அளவுகோள்கள் உண்டு.  1969ல் டி.ஆர்.காட்கில் என்ற பொருளாதார நிபுணரால் உருவாக்கப்பட்ட ‘காட்கில் ஃபார்முலா’ என்ற கணக்கீடே இதற்கு உதவுகிறது. இதன்படி இந்திய மாநிலங்கள் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு, கேரளா ஆகியவற்றை உள்ளடக்கியது தெற்கு மண்டலம். இம்மண்டலத்தில் மத்திய அரசு மின்நிலையங்களில்! உற்பத்தியாகும் மின்சாரத்தில் 38 முதல் 50 சதவீதம், நிறுவனம் இயங்கும் மாநிலத்துக்குக் கிடைக்கும். 15 சதவீதம் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படும். மீதமுள்ள மின்சாரம் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படும். மத்திய தொகுப்பில் சேகரிக்கப்படும் மின்சாரம், மின் உற்பத்தியில் பின்தங்கியிருக்கும் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.



நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 2490 மெகாவாட் மின்சாரத்தில் வெறும் 1300தான் தமிழகத்துக்கு. மீதம் மத்திய தொகுப்புக்கும், தெற்கு மண்டலத்தில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா, லட்சத்தீவு, பாண்டிச்சேரிக்கும் அனுப்பப்படுகிறது. கல்பாக்கம் அணுமின் நிலைய மின்சாரமும் இவ்விதமே பிரித்தளிக்கப்படுகிறது. இதைப்போல ஆந்திர மாநிலம் ராமகுண்டம், சிம்மத்திரி அனல் மின் நிலையங்கள், கர்நாடக மாநிலத்தில் உள்ள கைகா அணுமின்நிலையம், கேரளாவில் உள்ள காயங்குளம் அனல் மின்நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட அளவு தமிழகத்துக்கு மின்சாரம் பிரித்தளிக்கப்படுகிறது. ஆனால், இம்மாநிலங்களுக்கு தமிழகம் அளிக்கும் மின்சாரத்தோடு ஒப்பிடுகையில் அவர்கள் அனுப்புவது மிகக்குறைவு.  இந்நிலையில், ‘‘கூடங்குளம் மக்களின் உயிரைப் பணயம் வைத்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, தண்ணீர் விவகாரத்தில் தமிழர்களை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது...’’ என்று போர்க்கொடி உயர்த்துகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தொடர்ந்து குரல ¢கொடுத்து வரும் தமிழுணர்வாளர் தியாகு இதுபற்றி நம்மிடம் பேசினார்.

‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்கும் முடிவு, அறிவியல் முடிவோ, பொருளியல் முடிவோ இல்லை. அரசியல் முடிவு. சர்வதேச அணுமின் கழகத்தின் விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் அவசர கோலத்தில் வேலைகள் நடந்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன், ‘முதல் அணுஉலையில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே தரப்படும்’ என்றார் மத்திய அமைச்சர் நாராயணசாமி. இப்போது அவரது சத்தத்தையே காணோம். மொத்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கே தரவேண்டும் என்று முதல்வர் விடுத்த கோரிக்கையையும் மத்திய அரசு நிராகரித்து விட்டது. தமிழக மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட முதல்வர், நெய்வேலியில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கே கேட்கலாம். கல்பாக்கத்தில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும் தமிழகத்துக்கே கேட்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு கூடங்குளம் மின்சாரத்தைக் கேட்பது, தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி மக்களை சமாதானம் செய்வதற்காகவே...’’ என்று குற்றம்சாட்டும் தியாகு, ‘‘கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் நான்கில் ஒரு பங்குதான் தமிழகத்துக்குக் கிடைக்கப்போகிறது. மீதமிருப்பவை அண்டை மாநிலங்களுக்கு. நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல், ‘தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம்’ என்று வெளிப்படையாகச் சொல்கிறார் கர்நாடக முதல்வர். முல்லைப் பெரியாறு உரிமையை முற்றிலுமாக மறுக்கிறார் கேரள முதல்வர். பாலாறை அணை கட்டி மறித்து முடக்க நினைக்கிறது ஆந்திரா. இப்படி திட்டமிட்டு தமிழர்களை வஞ்சிக்கும் மாநிலங்களுக்குத்தான் கூடங்குளம் மின்சாரம் செல்லப்போகிறது. இதெல்லாம் போதாதென்று, தமிழ் இனத்தையே கொன்றொழித்த இலங்கைக்கும் இங்கிருந்து மின்சாரம் அனுப்பப் போகிறார்கள்...’’ என்று அதிர்ச்சியூட்டுகிறார் அவர்.

‘‘இதற்காக ராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையில் கடலுக்கு அடியில் மின் கேபிள்கள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது. இந்திய மின்தொகுப்புக் கழகமும், இலங்கை மின்சார சபையும் இது தொடர்பாக 2010 ஜூன் மாதம் ஒப்பந்தம் போட்டுள்ளன. 4000 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டத்துக்கு ஆயத்தங்கள் முடிந்து விட்டன. விரைவில் கடலுக்கு அடியில் மின் கேபிள் அமைக்கப் போகிறார்கள். இதன்மூலம் தினமும் 1000 மெகாவாட் மின்சாரம் இலங்கைக்குச் செல்லப்போகிறது. அநேகமாக அருகில் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்தே அந்த மின்சாரம் அனுப்பப்படலாம்...’’ என்கிறார் தியாகு. ‘‘இலங்கையில் இன ஒழிப்புப் போர் தொடங்கிய திரிகோணமலை சம்பூர் பகுதியில் இந்தியா ஒரு அனல் மின் நிலையத்தை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது. இதையெல்லாம் யோசிக்கும்போது மத்திய அரசின் முழுமையான தமிழர் விரோத மன நிலைதான் வெளிப்படுகிறது’’ என்று வருந்துகிறார் தியாகு. உள்நாட்டு மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் தவிக்கும் நிலையில் அந்தப் பக்கம் பாகிஸ்தானுக்கும் இந்தப் பக்கம் இலங்கைக்கும் மின்சாரத்தை வாரி வழங்க திட்டம் போடுகிறார்கள். என்னதான் நடக்கிறது இங்கு..?

விசுவாமித்திரர் கோபம்!

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மத்தியில் இன்னும் உக்கிரம் குறையவில்லை. போராட்டத்தின் ஒரு பகுதியாக விஜயாபதியில் உள்ள விசுவாமித்திரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. உலகத்திலேயே இங்கு மட்டும்தான் விசுவாமித்திரருக்குக் கோயில் இருக்கிறது. ‘‘அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். மண்ணுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களை நிச்சயம் தண்டிப்பார்’’ என்று கூறும் போராட்டக் குழுவினர் அதற்கு ஆதாரங்களை அடுக்குகிறார்கள்.

‘‘கூடங்குளம் அணு உலை ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், சோவியத் அதிபர் கோர்பசேவும்தான் கையெழுத்திட்டார்கள். ராஜீவ் காந்தி துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்டார். கோர்பசேவின் அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விட்டது. சோவியத் குடியரசே குலைந்து தனித்தனியாக சிதறிவிட்டது. மீண்டும் 1997ல் இந்திய பிரதமர் தேவகவுடாவும், ரஷிய அதிபர் எல்ட்சினும் கையெழுத்திட்டார்கள். சில நாட்களிலேயே தேவகவுடாவின் பதவி போனது. எல்ட்சின் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்டார். இதற்கெல்லாம் உச்சமாக கூடங்குளம் அணுஉலையை வடிவமைத்த ரஷிய நாட்டுக் குழுவினர் 6 பேர் விமான விபத்தில் இறந்து போனார்கள்...’’ என்கிறார்கள். கேட்கவே திகிலாக இருக்கிறதே..!

- வெ.நீலகண்டன்
படம்: ராஜி