பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்





குடும்பங்கள்ல நடக்குற பிரச்னைகளை ரசனையா அலசி, ஆராஞ்சு தீர்ப்புச் சொல்ற அளவுக்கு இன்னைக்கி எனக்கு தகுதி வந்திருக்குன்னு சொன்னா, அதுக்குக் காரணம் என் குடும்பத்தில எனக்குக் கிடைச்ச அனுபவங்கள்தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம்... மூத்த அண்ணன் ஆல்பர்ட் இருக்காரே, அச்சு அசலா என்னைய மாதிரியே இருப்பாரு. அவருக்கு கல்யாணம் முடிஞ்சபிறகுதான் நான் பிறந்தேன். அதனால எங்க ரெண்டு பேருக்குள்ள பெரிய இடைவெளி. ஆல்பர்ட் அண்ணன்னா அய்யாவுக்குக் கொள்ளைப் பிரியமாம். எங்கயாவது வெளியில போனா தோள்ல தூக்கி வச்சுக்கிட்டுப் போவாராம். அய்யாவை, ‘டேய் சுந்தரம்’னுதான் அண்ணன் கூப்புடுவாராம். அம்புட்டு உரிமை... அப்பிடிக் கூப்பிடும்போதெல்லாம் அய்யா முகத்துல பளீர்னு வந்துபோற சந்தோஷத்தைப் பாத்துக்கிட்டே இருக்கலாம்னு அம்மா அடிக்கடி சொல்லும். மூத்தபுள்ளைங்கிறதால வந்த பாசமோ, என்னவோ..! எங்க எல்லாரையும் அம்மா போட்டு வெளுத்து வாங்குறப்ப எல்லாம் அமைதியா இருக்கிற அய்யா, ஆல்பர்ட் அண்ணனை அடிச்சா மட்டும் அம்மாகூட மல்லுக்கு நிப்பாராம். அண்ணனுக்கும் அம்மாவை விட அய்யாவோட ஒட்டுதல் அதிகமாம். அண்ணன் பெரிசா ஒண்ணும் படிக்கல... நாலஞ்சு வகுப்பு படிச்சிருப்பாரு. அதுக்குப்பிறகு, ஹார்வி மில்லுல சேத்து விட்டுட்டாராம் அய்யா. தொடக்கத்துல நல்லாத்தான் இருந்தாராம் அண்ணன். கல்யாணம் முடிஞ்சப்புறம்தான் பிரச்னை ஆரம்பமாச்சு...அண்ணனுக்குப் பொண்ணு எடுத்தது தூரத்து உறவுல. அவங்க கிறித்தவத்துக்கு மாறாதவங்க. ஆனாலும், சொந்தம் விடக்கூடாதுன்னு அய்யா உறுதியா நின்னாராம். அம்மாவுக்கு சுத்தமா விருப்பமில்லையாம். கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மூணு மாதம் பிரச்னை இல்லாம ஓடியிருக்கு. மதனி ரொம்ப நல்லவங்க... தைரியமானவங்க. கல்யாணத்துக்கு முன்னாடி அவங்க வருமானத்துலதான் அவங்க குடும்பமே ஓடியிருக்கு. மதனியோட அப்பா இருக்காரே, அவருதான் அண்ணனோட வாழ்க்கையில வில்லனா வந்திருக்காரு.

கல்யாணத்துக்குப் பெறகும் மகளோட வருமானத்தை இழக்க அவருக்கு விருப்பமில்லே. அண்ணன் மனசை மாத்தி, ‘உங்க அய்யாகிட்ட ‘உயிர்ச்சொந்தம் இல்லே... பொருட்சொந்தம் இல்லே’ன்னு எழுதிக் குடுத்துட்டு இங்கேயே வந்திரு. எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்’னு சொல்லியிருக்காரு. அவரு சொன்னதை வேதவாக்கா அண்ணன் எடுத்துக்கிட்டாரு. நேரா வீட்டுக்கு வந்து, ‘இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு எழுதிக்குடுங்க’ன்னு நின்னாராம்.அய்யா இடிஞ்சு போனாரு... ‘நம்ம தோள்லயும் மடியிலயும் தூக்கிப்போட்டு வளத்த புள்ள... பொருட்சொந்தம் இல்லேன்னு சொன்னாச் சரி. உயிர்ச்சொந்தம் எப்பிடிய்யா விட்டுப்போகும்’னு கதறியிருக்காரு. இன்னொரு பக்கம் அம்மா... வயித்துல அடிச்சுக்கிட்டு அழுதிருக்கு. அப்போ நான் கைக்குழந்தை. புள்ளைகளைப் பெத்து ஆளாக்கி, பேரன் பேத்திகளைப் பாத்து, முக்கால் வாழ்க்கையை வாழ்ந்து முடிச்ச இந்தத் தருணத்துல அம்மாவோட அந்த அழுகையை நினைச்சுப் பாக்குறேன். இப்பதான்யா அந்த வலிக்கு அர்த்தம் தெரியுது!  ஊர் பெரிய மனுஷங்க முன்னிலையில பேச்சுவார்த்தை நடந்துச்சாம். ‘என்னைக்கிருந்தாலும் நீதானடா உன் அய்யாவுக்கும் அம்மாவுக்கும் நல்லது கெட்டது பண்ணணும். அதெப்பிடி சொந்தமில்லாமப் போயிரும்’னு எல்லாம் எடுத்துச் சொல்லியிருக்காங்க. எதுவும் அண்ணன் காதுல ஏறல. ஒரு பத்திரத்துல, ‘இந்தக் குடும்பத்துக்கும் எனக்கும் உயிர்ச்சொந்தம், பொருட்சொந்தம் இல்லே’ன்னு எழுதிக் குடுத்துட்டு கிளம்பிட்டாராம்.எதுக்கும் கலங்காம நிக்கிற அய்யா, கதறிக்கதறி அழுதிருக்காரு பாருங்க... அந்த கண்ணீரோட சேந்து பாசமும் கரைஞ்சிருக்குமோ..? தன்னோட காதலி கேட்டாள்னு அம்மாவோட இதயத்தைப் பிடுங்கி எடுத்துக்கிட்டு ஓடுனானாம் ஒரு பையன். ஓடும்போது கால்தவறி அவன் கீழே விழுந்தப்போ, அம்மாவோட இதயம் துடிதுடிச்சு, ‘அய்யா... விழுந்துராம போய்யா’ன்னுச்சாம். உள்ளுக்குள்ள வலி வதைச்சாலும், ‘எங்கே இருந்தாலும் நல்லாயிருய்யா’ன்னு மனப்பூர்வமா வாழ்த்தித்தான் அய்யாவும் அம்மாவும் அண்ணனை அனுப்பி வச்சிருப்பாங்க... ஆனா, அண்ணன் நல்லா இருந்தாரா..?

கடைசி வரை அவருக்குக் குழந்தைகளே இல்லாமப் போச்சே. அதுமட்டுமில்லே... ஆறேழுமாசம் மாமனார் வீட்டுல இருந்தவரு, திடீர்னு காணாமப் போயிட்டாரு. அஞ்சாறு வருஷமாச்சு. எந்தத் தகவலும் இல்லே. திடீர்னு ஒருநாள் அரை சாமியாரா வீட்டுக்கு வர்றாரு. கந்தல் உடை... புத்தி தெளிவில்லாத பேச்சு. அம்மா கிடந்து அழுகுது. அய்யாவும் கலங்கி நிக்கிறாரு. அம்மா சொல்லுது... ‘அய்யா, இங்கேயே இருய்யா... நாங்க பாத்துக்குறோம்’னு. அண்ணன் கேக்கல. கொஞ்சம் காசை வாங்கிக்கிட்டு கிளம்பிட்டாரு... எங்காவது சுத்தித் திரிஞ்சுட்டு எப்பவாவது வீட்டுக்கு வருவாரு. யாரும் இல்லாத நேரத்துல வீட்டில இருக்கிற பண்டம், பாத்திரங்களை எடுத்துட்டுப் போயி விப்பாரு. இப்பிடியே வாழ்க்கை ஓடுச்சு. திடீர்னு ஒருநாளு, ‘சொத்தைப் பிரிச்சுக் குடுய்யா’ன்னு அய்யாகிட்ட கேட்டாரு. சொத்துன்னு சொல்லிக்க இருந்ததெல்லாம் அந்த பூர்வீக வீடு மட்டும்தான். அய்யாவுக்கு எங்கயிருந்துதான் அந்தக் கோபம் வந்துச்சோ தெரியல... ‘ஏண்டா, உயிர்ச்சொந்தம், பொருட்சொந்தம் இல்லேன்னு எழுதிக் குடுத்துட்டு மாப்பிள்ளை சோக்குல போன பய நீ... இப்போ எந்த மூஞ்சியோட வந்து சொத்தைக் கேக்குறே’ன்னு அடிச்சுத் தொரத்திட்டாரு. அதோட போனவருதான் அண்ணன்... ஏழு வருஷம் முன்னாடி இறந்துட்டதா தகவல் வந்துச்சு. கடைசி காலத்துல அவர் முகத்தைக்கூடப் பாக்க குடுத்துவைக்கலே...ஆல்பர்ட் அண்ணன் கதை இப்பிடின்னா அடுத்த அண்ணன் செல்லையா இருக்காரே... அவரு கதை இதுக்கும் மேல! ஆளு அம்மா மாதிரி... நல்ல கலரா இருப்பாரு. 3ம் வகுப்பு வரைதான் படிச்சாரு. ‘வேலைக்குப் போகமாட்டேன்’னு அடம்புடிச்சு சோக்காளியா சுத்துன ஆளு. நல்ல கலைஞன். கூத்து, பாட்டுன்னு, எப்பவும் பத்துப்பேரு கூடவே திரிவாக. வறுமை தெரியாம, நல்லா கட்டுமஸ்தான ஆளா இருந்ததால ரசிகைகளும் அதிகம். இடையில கெட்ட சகவாசங்கள் வேற... அப்போ ஓரளவுக்கு எனக்கு விபரம் தெரியும். இவரு வீட்டுல தெண்டமா சுத்தித்திரியுறத பாத்துட்டு ஒரு பென்சிலை எடுத்து, ‘வேலை செய்யாமல் வீட்டில் உக்கார்ந்து தின்பவர்களுக்கு இங்கே இடமில்லை’ன்னு எழுதி வச்சுட்டேன்.

அதைப் படிச்சுட்டு அவருக்கு பயங்கர கோபம்... ‘ஒரு சில்லுவண்டுப்பய எனக்குப் புத்தி சொல்ற மாதிரி எழுதி வச்சுட்டானே’ ன்னு. ஒரு வழியா எல்லா சகவாசங்களையும் விட்டுட்டு ராணுவத்துக்குப் போனாரு. ‘சரி, கஷ்டமெல்லாம் தொலைஞ்சு இனிமே கொஞ்சம் நல்லா யிருப்போம்’னு நினைச்சு அண்ணனுக்குக் கல்யாணமும் பண்ணி வச்சாக. நல்லாத்தான் இருந்தாரு. திடீர்னு அங்கே என்ன காரியத்தைப் பண்ணினாரோ தெரியல... இவரை ‘அன்ஃபிட்’னு எழுதி இடையிலேயே வீட்டுக்கு அனுப்பிட்டாக. அய்யா, ஹார்வி மில்லுல சேத்துவிட்டாக. அங்கேயும் வேலைக்குப் போகாம திரும்பவும் பாட்டு, கூத்துன்னு சுத்த ஆரம்பிச்சிட்டாரு. விட்டுப்போன கெட்ட சகவாசங்க திரும்பவும் ஒட்டிக்கிச்சு. ஆல்பர்ட் அண்ணன் கூட கூட்டணி போட்டு இவரும் வீட்டுல இருக்கிற தட்டுமுட்டுச் சாமான்களை திருட்டுத்தனமா எடுத்து விக்க ஆரம்பிச்சிட்டாரு. ஒருதடவை காசு தரலைன்னு அம்மாவையே அடிக்கப் போயிட்டாரு. அழுது புலம்புன அம்மா, ‘நீ அனாதையாத்தாண்டா சாவே’ன்னு திட்டியிருக்கு. என்ன நினைச்சு திட்டுச்சுன்னு தெரியலே... செல்லையா அண்ணன், அம்மா சொன்னது மாதிரியே இறந்து போனாரு...

 அடுத்த வாரம் சந்திப்போமா!