கடவுளின் கைகள்





சினிமா, பாட்டு, படிப்பு, லட்சியம் எல்லாம் கலந்த இன்பக் கலவைதான் கல்லூரி வாழ்க்கை. பெற்றோரின் சம்பாத்தியத்தில் நாட்கள் ஓட, ஜாலிக்காக கொஞ்சம் செலவழிக்கவே பட்ஜெட்டை இழுக்க வேண்டும். அதிலும் ‘சிறு துளி’யைச் சேமித்து லட்ச லட்சமாக உதவுகிறார்கள் இந்த மாணவர்கள்!

‘சிறு துளி’ பிறந்தது 2008&ல். சேலம் ஏவிஎஸ் கல்லூரி மாணவர்களின் செல்லக்குழந்தை அது. ஒரு மாணவர் வாரம் ஒரு ரூபாய் என்ற சிந்தனையில் தொடங்கிய உண்டியலில் ஆசிரியர்களும் நிர்வாகமும் சில ஆயிரங்களை அளித்து ஆதரவுக்கரம் நீட்ட, குறைந்தபட்சம் மாதம் ரூ.25 ஆயிரம் சேருகிறது. இதுவரை எங்கெங்கு பெய்துள்ளது சிறு துளி? சொல்கிறார் பொறுப்பாளர் விஜயலட்சுமி... ‘‘மாணவர் மத்தியில் உதவும் எண்ணத்தை உருவாக்க சிறுதிட்டம் தீட்டினோம், வாரம் ஒருவர் ஒரு ரூபாய் தருவதென! பின்னர் இது ஆயிரங்களாகப் பெருக உற்சாகம் அதிகரித்தது. 20 பேர் இதில் தன்னார்வலர்கள். கிராமத்துப் பள்ளிகளுக்கு விசிட் அடித்து, குழந்தைகளுக்கு செருப்பு, சீருடை என ஆரம்பித்தோம். இன்று உதவி மதிப்பு லட்சங்களைத் தாண்டியுள்ளது. பண்டிகைக் காலங்களில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவுப்பொருள், புத்தாடை அளிக்கிறோம். பத்திரிகைகளில் வரும் செய்தி பார்த்து, உதவி தேவைப்படுபவர்களுக்குத் தேடிச்சென்று உதவுகிறோம்!’’
 
‘‘உதவி தேவைப்படுபவர்களை நேரில் சந்தித்து, உண்மைத்தன்மையை விசாரித்த பின்னரே உதவுகிறோம். வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கும், ஆபத்தில் உள்ளவர்களுக்கும் உதவும்போது நிறைவாக உள்ளது’’ என்கிறார் எம்.சி.ஏ. மாணவர் ஸ்ரீகிருஷ்ணன். ‘‘எங்களில் பலர் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஃபீஸ் கட்ட முடியாத திண்டாட்டம் எங்களுக்கே ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் யாராவது உதவுகின்றனர். இந்த வாய்ப்புகூட கிடைக்காத பலர் இருக்கிறார்களே... எங்களது சந்தோஷத்தின் சிறு துளியை சேமித்தே மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உதவி பெற்றவர்களின் ஒரு நிமிட சந்தோஷம் பெருவெள்ளமாக எங்களை நனைத்துள்ளது’’ என்று நெகிழ்கிறார் அசோக். அடுத்தவரின் கண்ணீரைத் துடைக்கும் கைகள், கடவுளின் கைகள்தானே!

ஸ்ரீதேவி