உப்பும் சுப்புவும்!





கொத்தமங்கலம் சுப்புவுக்கு இது நூற்றாண்டு விழா! அறிஞரைத் தெரியாதவர்களுக்காக ஓர் சிறிய அறிமுகம்.இலக்கியவாதி, கவிஞர், இயக்குனர், வசனகர்த்தா, நடிகர், வில்லிசைக் கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர்!காலங்கள் கடந்த அழியா காவியம் ‘தில்லானா மோகனாம்பாள்’, இவரது கைவண்ணத்தில் உருவானதே! இலக்கியம், அரசியல், சினிமா என எல்லாத் துறை பிரபலங்களின் நற்பெயருக்கும் நன்மதிப்புக்கும் பாத்திரமாக வாழ்ந்தவர். 1910&ல் பிறந்து 1974&ல் மறைந்தவர்.

அப்பாவைப் பற்றி நெகிழ்வுடன் நினைவுகூர்கிறார் சுப்புவின் மூத்த மகன் விஸ்வநாதன்...

வெறும் எட்டாவது மட்டுமே படிச்சவர் அப்பா. ஆனாலும், அதிபுத்திசாலி. தினம் 16 மணி நேரம் புத்தகங்கள் வாசிப்பார். அவரோட லைப்ரரில பெரிய பெரிய ஆங்கில எழுத்தாளர் புத்தகங்கள் எல்லாம் இருக்கும். ‘எப்படிப்பா உனக்கு இதெல்லாம் புரியும்’னு கேட்டா, ‘புரியும்டா... அவங்க எல்லாம் அங்க என்னை மாதிரியே எழுதறவங்க. அதே அலைவரிசைல உள்ளதால எனக்குப் புரியறதுடா’ம்பார்.

நான் உள்பட என் கூடப்பிறந்த அத்தனை பேருக்குமே, ‘அப்பாவுக்கு என் மேலதான் பாசம் அதிகம்’னு ஒரு எண்ணம் இருந்திருக்கு. காரணம், எல்லாக் குழந்தைகளையும் அப்படித்தான் சீராட்டி, சிறப்போட வளர்த்தார். ரவிவர்மாவோட ஓவியத்தை எந்தப் பக்கத்துலேர்ந்து பார்த்தாலும், அது நம்மளைப் பார்க்கிற மாதிரியே இருக்கும். அப்பாவோட இந்தப் பாசம் அப்படிப்பட்டதுதான்.

கூட்டுக்குடும்பத்துல அப்பாவுக்கு ஆர்வம் அதிகம். உறவுகள், குழந்தைகள்னு வீடு கொள்ளாத மனுஷங்க... அப்பா ஒருத்தரோட சம்பளம்தான். கொஞ்சமும் முகம் சுளிக்காம, அத்தனை பேர்கிட்டயும் அன்புப்பிழம்பா இருப்பார். ராத்திரி 1 மணிக்கு வீடு திரும்பினாலும், முதல் வேலையா, அத்தனை குழந்தைகளையும் ஒரு ரவுண்டு பார்த்துட்டுத்தான் அடுத்த வேலையே பார்ப்பார்.

இந்த அன்பு வீட்டுக்குள்ள மட்டுமில்லை... வெளியாட்கள்கிட்டயும் தொடரும். முகம் தெரியாத யாருக்கோ நடக்கிற விபத்து, எங்கேயோ நடக்கிற மரணங்கள்னு நாடு தாண்டி நடக்கிற விஷயங்களுக்காகவும் அப்பா வருத்தப்படுவார். அந்த சோகமும் துக்கமும் எங்க வீட்டுக்குள்ளயும் பிரதி பலிக்கும். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்றேன். மகாத்மா காந்தி 1948&ல இறந்தார். அப்பா 74&ல தவறினார். 73 நவம்பர்ல அப்பாவுக்கு உடம்பு முடியாமப் போச்சு. அதுவரை ‘காந்தி மகான் கதை’யை வில்லுப்பாட்டுல சொல்றப்ப, காந்தியோட மரணத்தை நினைச்சு, குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கார். கேட்கிறவங்களையும் அழ வைப்பார். காந்தியக் கொள்கைகள்ல அந்தளவு ஈடுபாடு கொண்டவர். கடைசி வரைக்கும் கதர் மட்டுமே கட்டினவர்.

அறிஞர் அண்ணா முதல்வரானதும், சென்னைல உலகத் தமிழ் மாநாடு நடந்தது, அதுல கவியரங்கத்துல பேச அப்பாவைக் கூப்பிட்டிருக்கார். அந்த நிகழ்ச்சிக்காக ஒரு புது சட்டை தச்சார் அப்பா. ‘சட்டை குட்டையாப் போச்சு... ஏன் தெரியுமா? அண்ணா என்னை அழைச்சதால, நான் ரொம்ப உசந்துட்டேன். அதனால சட்டை குட்டையாப் போச்சு’னு அவர் பேசினதுக்கு அரங்கமே அதிர்ந்தது.

கலைஞர் மேலயும் பாசம் கொண்டவர் அப்பா. கலைஞருக்கும் அப்பாவை ரொம்பப் பிடிக்கும். தான் பங்கேற்கிற அத்தனை கவியரங்கத்துலயும் அப்பாவைக் கட்டாயம் பேச வைப்பார் கலைஞர். ‘உப்பு இல்லாத சாப்பாடும், சுப்பு இல்லாத கவியரங்கமும் ருசிக்கிறதில்லை’ன்னு அதுக்கொரு விளக்கமும் சொன்னார் கலைஞர்.

எஸ்.எஸ்.வாசனை விட்டு வந்ததும், அப்பா யார்கிட்டயும் போய் சேரலை. ஜெமினியை விட்டு வரும்போது அப்பாவுக்கு 50 வயசு. பிள்ளைகள் யாரும் தலையெடுக்கலை. அடுத்து என்ன பண்ணப் போறார்னு தெரியலை. சிவாஜி கணேசன் வீடு தேடி வந்து, ‘நாங்கல்லாம் இல்லையா உங்களுக்கு’ன்னு உருகிட்டு, ‘என் வாழ்க்கைல எத்தனையோ படங்கள் பண்ணிருக்கேன். ‘தில்லானா மோகனாம்பாள்’ தந்த நிறைவுக்கு எதுவுமே ஈடாகாது. அப்பா ரொம்பப் பெரியவர். நல்லா பார்த்துக்கோ’ன்னு என்கிட்ட சொல்லிட்டுப் போனது இப்பவும் நினைவிருக்கு.

‘நோபல் பரிசு மாதிரி தமிழ்நாட்டுல ஒரு பரிசு இருக்குமே யானால், அதை சுப்புவுக்குத் தருவேன்’னு மனசாரப் பாராட்டினவர் எழுத்துலக ஜாம்பவான் வ.ரா.
அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமப் படுக்கைல விழுந்த கடைசி நாட்கள்ல அவர் கூடவே இருந்து பார்த்துக்கிட்டேன். திடீர்னு வெளியூர் போக வேண்டிய கட்டாயம் எனக்கு. ஊருக்குத் திரும்ப ஃபிளைட் கிடைக்காம, ஒருவழியா ரயில் பிடிச்சு வந்துக்கிட்டிருந்தேன். 1974&ம் வருஷம், பிப்ரவரி 15&ம் தேதி அதிகாலை அப்பா தவறிட்டார். எனக்குத் தகவல் சொல்ல வீட்லேர்ந்து அனுப்பின தந்தி கிடைக்கலை. ரயில்ல வந்திட்டிருக்கும்போது, கூடப் பயணம் பண்ணவங்க ரேடியோ வச்சுக் கேட்டுக்கிட்டு வராங்க. அதுல அப்பா தவறினது செய்திகள்ல வருது. என் துரதிர்ஷ்டம் அதுவும் காதுல விழலை. சென்னைக்கு வந்து, ஸ்டேஷன்லேர்ந்து வீட்டுக்குப் போக ஆட்டோ ஏறினேன். வழக்கமா ஆட்டோ டிரைவர்கிட்ட விசாரிக்கிறது மாதிரி, ‘ஊர்ல என்னப்பா விசேஷம்’னு கேட்டேன். ‘கொத்தமங்கலம் ஐயா தவறிட்டாரு... அதான் நியூஸ்’னு அவன் சொல்ல, ஆட்டோலயே கதறிக் கதறி அழுதேன். ‘நீ ஏன் சாமி அழுவுறே’ன்னு அவன் கேட்க, ‘நான் அவரோட புள்ளப்பா’னு நான் சொல்ல, என்னைக் கட்டிப்பிடிச்சு முதல் ஆறுதல் சொன்னவன் அவன். வீட்டுக்கு வந்து அப்பாவைப் பார்த்துட்டு, ஆட்டோவுக்கு காசு கொடுக்க வெளிய போனா அவன் இல்லை.அப்பாவோட நான் இருந்த அந்தக் கடைசி நாட்கள் என் வாழ்க்கைல மறக்க முடியாதவை. சாகப் போறது தெரிஞ்சாலும், அந்த நாட்கள்ல சாவைப் பத்தியோ, தனக்குப் பிறகு பாகப்பிரிவினை பத்தியோ பேசலை. எப்போதும் போல அறிவுசார்ந்த விஷயங்களையே பகிர்ந்துக்கிட்டார்.அந்த மூணு மாசங்கள்ல அப்பாவை இன்னும் நிறைய பேச வச்சு, ஒரு சுயசரிதை பண்ணியிருக்கலாமே... தவற விட்டுட்டோமேங்கிற ஆதங்கம் இன்னைக்கும் எனக்கு உண்டு.
ஆர்.வைதேகி