நெருப்பில்லாமல் பிரியாணியா?





கலைக்கும் நட்புக்கும் தலைவணங்கத் தவறுவதே இல்லை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். கவியரசரிடம் அவர் ஆசீர்வாதம் வாங்கும் படம் அற்புதம். கலைமகளின் ‘விசேஷ’ பிறப்பல்லவா கண்ணதாசன்!
- ந.பேச்சியம்மாள், சிதம்பரம்.

‘உதயம் என்.ஹெச் 4’ படத்தில் புது ஹீரோயின் என்றதும், ‘சித்தார்த்துக்கு இப்படி புதுசு புதுசா அமையுதே’ என்ற உங்கள் கேள்வியில் வயித்தெரிச்சல் தெரியுதே தலைவா!
- தன்ராஜ், அரக்கோணம்.

நயன்தாரா சென்னையில் தங்கினால், ஆர்யா வீட்டிலிருந்துதான் மூணு வேளை சாப்பாடு செல்கிறதா? நெருப்பில்லாம புகையாதுன்னு சொல்வாங்க. நெருப்பில்லாமலா பிரியாணியெல்லாம் ரெடியாகும்?
- கே.வி.கணபதிராவ், புதுச்சேரி.

‘தங்கம் வாங்கியே தீர வேண்டும்’ என்று மக்களை வசியம் செய்துகொண்டிருக்கும் விளம்பரங்களுக்கு மத்தியில், தங்கம் ஒரு மாயை, போதை வஸ்து என்று நெற்றிப்பொட்டில் அறைந்து சொன்னது அபாரம்!
- கவியகம் காஜூஸ், கோவை.

‘கண்களில் துடிக்கும் பேரழகு’ கட்டுரையின் ஓவியமே கிறங்கடித்தது. படிக்கும்போது ‘சிலுக்கு’ நினைவு வந்து ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது!
- எல்.சார்லஸ், தஞ்சாவூர்.

‘ரூபே கார்டின்’ நன்மைகளை அலசியிருந்தது அருமை. எனினும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு சமாச்சாரங்களில் ரூபே கார்டு மூலம் நம் பணம் வெளிநாட்டுக்குப் போகாதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி!
- ‘மண்வாசனை’ சாரதாமணி, சுந்தராபுரம்.

தெய்வீக மங்கை ஆண்டாளின் பெருமையைப் போற்றும் ஆஸ்திரேலியத் தம்பதிகளின் பக்தி, எங்களை ஆச்சரியம் கலந்த சிலிர்ப்பில் ஆழ்த்தி விட்டது!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘என் தனிப்பட்ட வாழ்க்கையை மீடியாக்கள் டமாரம் அடிக்க வேண்டாம்’ என்று சொல்லாமல் சொல்லி பிரபுதேவா ஒரு கொட்டு வைத்திருக்கிறார். உண்மையும் அதுதானே!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

மேக்கப்தான் ஒரு மனிதனை... ஸாரி, மனுஷியை எப்படி மாற்றிக் காட்டியிருக்கிறது. அழகுப் புயலாய் இருக்கும் தன்ஷிகா ‘பரதேசி’யில் அழுக்காச்சியாக எப்படி மாறி இருக்கிறார். அதர்வாவிடம் கெமிஸ்ட்ரி எப்படியோ... ஆனா, பாலாவிடம் பாஸ் பண்ணிட்டாங்க அம்மணி!
- ஏ.கந்தசாமி, திருப்பூர்.

‘வட இந்தியர்களை நாம் வாழ விடுகிறோமா?‘ என்ற கட்டுரை படித்து மனம் கனத்தது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் வாழும் அவர்கள் மேல் அரசு தன் கவனத்தை திருப்புதல் அவசர அவசியம்!
- அ.சுகுமார், வேலூர்; எஸ்.எம்.பாலசுப்ரமணியன், தேனி.