பட்டாம்பூச்சி ருக்மணி





டிசம்பர் 31ம் தேதி முடிந்தாலும் காலண்டரைத் தூக்கிப்போட மனசு வராது, அது ஜி.வெங்கட்ராம் தயாரிக்கும் காலண்டர் என்றால். தென்னிந்தியாவின் முன்னணி புகைப்படக்கலைஞரான இவரது கடந்த ஆண்டு காலண்டரில், கார்களோடு ஸ்டார்கள் அணிவகுத்தார்கள். இந்த வருட காலண்டருக்காக அவர் கையில் எடுத்திருக்கும் கான்செப்ட்டும் அதனை எடுத்த விதமும், வாவ்! இனி இந்த வித்தியாச க்ளிக்ஸ் பற்றி வெங்கட்...

‘‘போட்டோகிராபியில் அசாதாரணம் காட்டுவதுதான் என்னோட கான்செப்ட். இந்த வருட காலண்டருக்காக என்ன செய்யலாம் என யோசித்தேன். காடுகளின் பின்னணியில் படம் பிடிப்பது என்றால் எனக்குக் கொள்ளை பிரியம். இந்த முறை அதை செய்து பார்க்கும் ஆசை எட்டிப் பார்த்தாலும் அது அத்தனை சாத்தியமானதாகத் தெரியவில்லை. முதுமலையில் தொடங்கி கூர்க் வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்குச் சுற்றிப் பார்த்தும் நான் கற்பனை செய்த காடுகளைப் பார்க்க முடியவில்லை.

ஆர்ட் டைரக்டர் ராஜீவனை வைத்து செடி, கொடி இருப்பதுபோல செட் போட நினைத்தோம். அதுவும் சரி என்று படாததால், அந்த செட்டப்பை பெயின்டிங் செய்தோம். பெயின்டிங் ரெடியானதும் திடீரென ஒரு யோசனை. பறவைகள், பட்டாம்பூச்சிகள் சிறகு விரிக்கும்போது பலவித வண்ணங்களில் இறகுகளில் அற்புத அழகு மின்னும். அதுபோல் ஒரு மாடலையோ, நடிகையையோ வைத்து ஷூட் பண்ண முடிவு செய்தேன். அதற்கு சரியான ஆள் ருக்மணிதான் என்று தீர்மானித்தேன்.



பாலே நடனம், யோகா என்று உடம்பை வில்லாக வளைப்பது ருக்மணிக்கு அல்வா சாப்பிடுவது போல. இந்த யோசனையை ருக்மணியிடம் சொல்ல, ‘கான்செப்ட் ஓகே... ஆனா நீங்க எப்படி பண்ணப்போறீங்கன்னு தெரியல’ என்று யோசித்தார். பொருத்தமான உடைகளை சிபின்ராஜ் தயாரித்தார். கால், கைகளைத் தூக்கும்போது ஆடையின் தையல் விட்டுவிடாதபடி கவனம் எடுத்துச் செய்தோம். ஒவ்வொரு உடையையும் தைக்க இரண்டு வாரங்கள் வரை ஆனது. ரேச்சல் என்பவர் ஹேர்ஸ்டைலை செய்தார்.



ஒவ்வொரு காஸ்ட்யூமுக்கும் உடலின் வளைவு நெளிவுகளால் பாம்பு, கொக்கு, மீன், பட்டாம்பூச்சி என ருக்மணி மாற... எனது குழுவினரின் ஒத்துழைப்புடன் எனது கற்பனைக்கு வடிவம் கிடைத்தது. ருக்மணி அணிந்திருக்கும் ஒரு காஸ்ட்யூம் பலூன் வடிவம் பெறுவதற்காக கீழிருந்து காற்று வைத்து அடித்தோம். அந்தரத்தில் நிற்பதுபோல இருக்கவேண்டும் என்பதற்காக ஒரு மரக்கிளையில் ருக்மணியை நிற்க வைத்து, படம் எடுத்தபிறகு அந்தக் கிளையை மறைத்துவிட்டோம். மீன் வடிவ கான்செப்ட், பாலே நடனத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்தப் படங்களை கூர்ந்து கவனித்தால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான கற்பனைச் சிறகு விரியும்’’ என கேமராவுடன் அடுத்ததொரு புதிய கோணம் பார்க்கப் புறப்பட்டார் வெங்கட்ராம்.
இந்த காலண்டரை ரசிக்கவே ஒரு வருஷம் போதாதே!
- அமலன்
அட்டையில்: லக்ஷ்மி ராய்
ஸ்பெஷல் படம்: ஜி.வெங்கட்ராம்