பாம்புக்கடி போதை





‘கேள்விப்பட்டேன்...’, ‘ஃப்ரெண்டு செஞ்சான்... பார்த்தேன்’ என்கிற கதையே இல்லை. ‘‘நான்தாங்க... பாம்பாட்டிகிட்ட காசு கொடுத்து பாம்பை நாக்குல கடிக்க விடுவேன். அப்படியே உடம்பெல்லாம் போதை ஏறும். ஸ்ஸ்ஸ்... அப்படியே சொர்க்கம் மாதிரி இருக்கும்’’ என்று நேரில் நின்று சாட்சி சொல்கிறார் அந்த இளைஞர். பெயர், ஆனந்தன். ஒட்டுமொத்த கடந்த காலத்தையும் போதையில் தொலைத்துவிட்டு, இன்று மறுவாழ்வு சிகிச்சை பெறும் 25 வயதுக்காரர். தமிழகத்தின் நகரங்களில் விஷமாகப் பரவி வரும் புதிய போதைப் பழக்கத்துக்கு நேரடி சாட்சி!

‘‘சென்னைதான் சார் சொந்த ஊரு. அம்மா, அப்பா, ஒரு தம்பி. ஒன்பதாவது வரை படிச்சேன். ரொம்ப கஷ்டமான குடும்பம். அம்மாவும் அப்பாவும் ரயில்ல பழ வியாபாரம் பண்ணுவாங்க. ஆறு வயசுல இருந்தே நானும் அதுல கொஞ்சம் கொஞ்சமா இறங்கிட்டேன். என் கூட என்னை மாதிரியே நிறைய பசங்க. சிகரெட், தண்ணி, கஞ்சா எல்லாத்தையும் அவனுங்களோட கத்துக்கிட்டேன். ஒரு கட்டத்துல அது ஓவராயிடுச்சு. அப்பா அம்மாகிட்ட காசு புடுங்கிட்டு வந்து தண்ணி அடிப்பேன். போதை பத்தலைன்னா கஞ்சா, போதை மாத்திரைன்னு வேற பக்கம் போவேன். எப்படியாச்சும் போதை வேணும். ஒரு கட்டத்துல நமக்குத் தெரியாத போதையே இல்லைன்னு ஆயிடுச்சு. அப்பதான் ஒரு போலீஸ்காரரு பாம்பு போதையைக் காட்டினாரு’’ - பேய்க்கதை போல தன் கதையை விவரிக்கிறார் ஆனந்தன்.

‘‘அவரு ஒரு பாம்பாட்டிகிட்ட கூட்டிட்டுப் போனாரு. அந்தப் பாம்பாட்டி மண் பானையில ஒரு பாம்பைப் போட்டு, அதை ஒரு பிளாஸ்டிக் ஷீட்டால மூடினான். அதுக்கு நடுவுல மட்டும் ஒரு சின்ன ஓட்டை இருந்துச்சு. அந்தப் பானைய சூடு பண்ணினான். மேல இருந்த ஓட்டை கிட்ட என் நாக்கை கொண்டு போகச் சொன்னான். சூடு தாங்காத பாம்பு வெளிய வர்றதுக்காக ஓட்டையைப் பார்த்து என் நாக்குல ஒரே கொத்து. நெஜமா சார்... சொர்க்கத்துக்கு போன மாதிரி இருந்துச்சு. எங்க செட்டு பசங்க எல்லாரும் வந்திருந்தாங்க. அதே கொத்து, அவங்களுக்கும் மூணு நாளைக்கு போதை தெளியல. அதுக்கப்புறமும் ரெண்டு, மூணு தடவை அங்க போய் கொத்து வாங்கியிருக்கேன். அதுக்கப்புறம் போதை ஓவராகி, ஏரியால பிரச்னை பண்ணி ஜெயிலு கியிலெல்லாம் பார்த்துட்டுதான் சார் திருந்தினேன்’’ என்கிற ஆனந்தன் தற்போது சென்னை விஸ்டம் மருத்துவமனையின் போதை மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார்.
இவர் சொல்கிறபடி போதை தரும் பாம்பு என்று ஒன்று உண்டா? விஸ்டம் மருத்துவ மனையின் இயக்குனர் அறிவுடைநம்பியிடமே கேட்டோம்.

‘‘தெரியலைங்க. ஆனால், எங்களிடம் மறுவாழ்வு சிகிச்சைக்கு வரும் சிலர் இப்படிச் சொல்வது வழக்கம். ஏதோ மூன்று வகை பாம்புகளிடம்தான் போதை இருப்பதாக அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அறிவியல்ரீதியாக இதற்கு நிரூபணம் கிடையாது. நல்ல பாம்பு மாதிரி விஷப்பாம்புகளைத்தான் இப்படிக் கடிக்க வைக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பொதுவாக மது, கஞ்சா போன்ற மல்டிபிள் டிரக்ஸ் எடுத்துக்கொள்ளும் ஆசாமிகள்தான், இந்த மாதிரி வித்தியாச போதைகளைத் தேடி அலைகிறார்கள். மற்றவர்களால் முடியாததை நம்மால் செய்ய முடியும் என்கிற உளவியல் சிக்கல்தான் இந்தப் பழக்கத்துக்கு இட்டுச் செல்கிறது’’ என்ற அறிவுடை நம்பி, இதில் போதை எப்படி உண்டாகிறது என்பது பற்றியும் விரிவாகப் பேசினார்.
‘‘பல்வேறு போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் உடலில் ஏற்கனவே விஷம் இருக்கும். இவர்களை நிஜமாகவே விஷப் பாம்புகள் கொத்தினால் விளைவு மோசமாகத்தான் இருக்கும். எனவே, சும்மா ஏதோ ஒரு பாம்பைத்தான் கொத்த விடுவார்கள். ஏற்கனவே போதையில் இருப்பவர், இல்லாத போதையை இருப்பதாகக் கற்பனை பண்ணிக் கொள்ளலாம். இதற்குத்தான் வாய்ப்பிருக்கிறது.
வேதனை என்னவென்றால், இது போன்ற போதைக்கு ஏங்கும் இளைஞர்கள் பொதுவாக பணக்கார வாலிபர்களாக இருக்கிறார்கள். மும்பை போன்ற நகரங்களில் இதற்கென்றே சில ஏரியாக்கள் உண்டு. எத்தனை பேர் இந்தப் பழக்கத்தால் கடிபட்டு இறந்தார்கள், எத்தனை பேர் உடல் பாதிப்புக்கு உள்ளானார்கள் என்ற புள்ளிவிவரங்கள் கிடையாது. ஆனால், விரல்களில் பாம்பைக் கடிக்க விட்டும், கால்களில் கடிக்க விட்டும், விரல் அழுகி அவற்றை ஆபரேஷன் மூலம் அகற்ற நேர்ந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். நரம்புகள் பலவும் ஒன்று சேரும் இடம் நாக்கு. நாக்கில் கொத்தவிடுவதன் மூலம் அந்த விஷம் நேரடியாக மூளைக்குப் போகும். போதை என்ற பெயரில் அறியாமல் தெரியாமல் எதிலும் ஈடுபடுவது ஆபத்தைத்தான் கொண்டு வரும்’’ என்றார் அறிவுடைநம்பி.
பாம்புகளின் விஷம் பற்றி மதுரை ஸ்நேக் ட்ரஸ்ட்டின் இயக்குனரான ரமேஷிடம் கேட்டோம். ‘‘இதெல்லாம் சரியான பித்தலாட்டம். விஷமுள்ள பாம்பு முட்டிக்கு மேல எங்க கடிச்சாலும் சாவு நிச்சயம். அப்படியிருக்க, நாக்கில் கொத்தவிட்டா பொழைப்பானா? இது ஒரு பொய்யான நம்பிக்கைதான்’’ என்று தொடங்கியவர் ஆற அமர விளக்கமும் தந்தார்.



‘‘தமிழகத்தில் உள்ள பாம்புகளில் நான்கு வகைதான் விஷமுள்ளவை. அவை கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் எனப்படும் வைபர், மற்றது கோப்ரா எனப்படும் நல்ல பாம்பு. இவையெல்லாம் தரையிலுள்ள விஷப் பாம்புகள். அதேபோல் தண்ணீரில் 7 வகையான விஷப் பாம்புகள் உண்டு.
பாம்புகளின் விஷத்தில்கூட இருபத்தைந்து சதவீதம்தான் விஷம் இருக்கும். மீதமுள்ளவை புரோட்டீன்கள். லாஜிக்கலாக பாம்பின் விஷத்தை சாப்பிடக் கூட செய்யலாம். விஷத்தைக் கை, கால்களில் சும்மா தடவினாலும் ஒன்றும் செய்யாது. விஷம் நேரடியாக ரத்தத்தில் கலக்கும்போதுதான் இறப்பு நேரிடும். ஆனால் எந்த வடிவத்திலும் அது போதையைத் தரவே தராது. பல் பிடுங்கிய பாம்பை கொத்தவிட்டு வித்தை காட்டுவது போல் இதுவும் ஒரு பித்தலாட்டம்தான். ஆனால் ஆபத்தான பித்தலாட்டம்’’ என்றார் அவர்.
போதையே ஆபத்து தான்... அதற்கு மத்தியில் நடத்தப்படும் இந்த ‘விஷப்பரீட்சை’ வியாபாரத்துக்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பதோ!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்