கர்ணனின் கவசம்





‘‘கிராபீன் மனிதனுக்கு பின்னாடிதான் காமதேனு இருக்கு...’’ ஆதித்யாவின் செவிகளில் தாரா கிசுகிசுத்தாள்.
‘‘மின்னல் ஒளில நானும் பார்த்தேன். காமதேனுவை பாதுகாத்துட்டு இருக்கறது இவன்தான். இவனை அழிச்சாத்தான் நம்மால காமதேனுவை அடைய முடியும்...’’
புருவங்கள் முடிச்சிட பதிலளித்தான் ஆதித்யா.
‘‘எப்படி வீழ்த்தப் போற?’’

‘‘ஒரு வழி இருக்கு... ஆனா, விடியறதுக்குள்ள அதை செய்தாகணும்...’’
‘‘ஓ... இரவுல மட்டும்தான் நடமாடுவானா?’’
‘‘ஆமா... பொழுது விடிஞ்சதும் காமதேனுவோட மறைஞ்சுடுவான்...’’
‘‘கிராபீன் கனிமத்தை எப்படி நொறுக்க முடியும்?’’
‘‘கஷ்டம்தான். சீரான அறுகோணத்துல கிராபீன் மூலக்கூறுகள் இருக்கறதா விஞ்ஞானிங்க சொல்றாங்க. ரொம்ப பவர்ஃபுல் ஆன கனிமம் இது. அநேகமா அடுத்த வருஷம் அறிமுகமாகிற ஐபோன்ல அலுமினியம் குறைவாவும் கிராபீன் அதிகமாவும் இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவங்க இப்பவே அதுக்கான தயாரிப்புல இறங்கிட்டாங்க...’’ என்றபடியே ஆதித்யா, தான் அணிந்திருந்த வெள்ளை நிற டி- ஷர்ட்டைக் கழற்றினான். பெல்ட்டின் கொக்கியை நீக்கிவிட்டு ஜீன்ஸின் ஜிப்பை தளர்த்தினான்.
‘‘இடியட்... என்ன பண்ற?’’ தாரா சீறினாள்.
‘‘பேசாம இரு...’’ என்றபடி ஜீன்ஸை கால்வழியாக வெளியே எடுத்தான். சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள் தாரா. அவள் பக்கம் திரும்பாமல், ‘‘அப்படியே பின்னாடி போ...’’ என கர்ஜித்தான்.

‘‘எதுக்கு?’’ என்று கேட்டபடி திரும்பிய தாரா, திக்பிரமை பிடித்து நின்றாள். காரணம், கழுத்திலிருந்து கால் வரை உடலோடு ஒட்டியபடி கருமை நிற கவசத்தை அவன் அணிந்திருந்தான். எதன் காரணமாக டி-ஷர்ட்டையும், ஜீன்ஸையும் கழற்றினான் என்பது அவளுக்கு புரிந்தது.
‘‘சொல்றேன்ல... பின்னாடி போ...’’ என்று கத்தினான் ஆதித்யா.
அவன் பார்வை சென்ற திசையைப் பார்த்தாள். கிராபீன் மனிதன் இப்போது நேருக்கு நேராக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘‘மை காட்...’’ என முணுமுணுத்தாள் தாரா. கிராபீன் மனிதனின் கண்களில் இருந்து பாய்ந்த ஒளி, ப்ளோரசன்ட் டார்ச் லைட் போல் அவர்கள் இருவரின் மீதும் விழுந்தது. மலைக்கு முன்னால் இரு எறும்புகள் நிற்பது போல் அவர்கள் இருவரும் நின்றார்கள்.
அனிச்சையாக தாரா பின்னால் நகர்ந்தாள். ஆனால், ஆதித்யா அதே இடத்தில் அசையாமல் நின்றான். கிராபீன் மனிதனைப் பார்த்தபடியே தன் வலது உள்ளங்கையை அழுத்தமாக மூடினான். கவசத்தை மீறி அவனது நரம்புகள் புடைத்து தோள் பட்டை வரை சென்றதை தாரா பார்த்தாள்.
மூடிய வலது கையை கிராபீன் மனிதனை நோக்கி ஆதித்யா உயர்த்தினான். அவனது கைகளில் இருந்து சரமாரியாக குண்டுகள் சீறி, கிராபீன் மனிதனை சல்லடையாகத் துளைத்தன.

ஆனால் -
கிராபீன் மனிதனின் உடலில் சிறு சிராய்ப்புக் கூட ஏற்படவில்லை. தன் இரு கைகளையும் உயர்த்தி அந்த மனிதன் கடகடவெனச் சிரித்தான். ஒவ்வொரு சிரிப்புக்கும் பெரும் ஓசையுடன் இடி இடித்தன. நிதானமாக ஆதித்யாவை நோக்கி அடியெடுத்து வைத்தான்.

அதன் பிறகு ஆதித்யா இமைப் பொழுதும் தாமதிக்கவில்லை. தன் உள்ளங்காலை அழுத்தமாக தரையில் ஊன்றி எம்பினான். அடுத்த நொடி ராக்கெட்டைப் போல் காற்றைக் கிழித்தபடி வானத்தில் நேர்கோட்டில் பறந்தான். கிராபீன் மனிதனை வட்டமிட்டபடியே தன் இரு உள்ளங்கைகளையும் மடக்கி முன்னோக்கி நீட்டினான். இரு கரங்களில் இருந்தும் ஏகே 47 போல் விநாடிக்கு 50 குண்டுகள் வீதம் சீறின.

என்றாலும் மலைப் பாறைகளில் பட்டு மணல்துகள்கள் தெறித்து விழுவதைப் போலவே அவைகள் தரையில் சிதறின. உடனே தன் தாக்குதல் உத்தியை ஆதித்யா மாற்றினான். இப்போது கைகளுக்கு பதில் கால்களை நீட்டி முன்னோக்கிக் கொண்டு வந்தான். அவனது பூட்ஸிலிருந்து இரு பீரங்கிகள் முளைத்தன. அளவில் சிறியதாக இருந்தாலும் அதிலிருந்து பாய்ந்த குண்டுகள், இரு கைகளாலும் தூக்க முடியாத அளவுக்கு கனமாக இருந்தன.

எப்பேர்ப்பட்ட பாறைகளையும் சிதறடிக்கும் வல்லமை படைத்த அந்த வகையான நான்கு குண்டுகளை அடுத்தடுத்து கிராபீன் மனிதன் மீது பாய்ச்சினான். குறி தவறாமல் அவையும் அந்த மனிதனின் மார்பைத் தாக்கின. கிராபீன் மனிதன் தள்ளாடினான். குண்டுகள் பாய்ந்த மார்பில் பள்ளங்கள் விழுந்தன.

இதுதான் சரியான தருணம் என்பதை உணர்ந்த ஆதித்யா, கிராபீன் மனிதனின் மார்பை தன் இரு கால்களாலும் பிணைத்து நெருக்கினான். கைகளால் அந்த மனிதனின் கழுத்தைப் பிடித்துத் திருகினான்.

அலறிய அந்த மனிதன் தன் இரு கைகளையும் உயர்த்தி பின்னோக்கிக் கொண்டு சென்றான். ஆதித்யாவை கொத்தாகப் பிடித்து அப்படியே முன்னோக்கிக் கொண்டு வந்தான். உள்ளங்கையில் ஏந்தியபடியே உற்றுப் பார்த்தான். கண்களில் இருந்து பாய்ந்த ஒளியில் சுண்டெலியைப் போல் ஆதித்யா தெரிந்தான். பள்ளம் விழுந்த அந்த மனிதனின் மார்புப் பகுதிகள் மெல்ல மெல்ல பழைய அளவை அடைந்தன.

கத்திரிக்கோலைப் போல் தன் ஆள்காட்டி விரலையும், நடுவிரலையும் விரித்த கிராபீன் மனிதன், அந்த இடைவெளியில் ஆதித்யாவின் இரு கைகளையும் வைத்து மூட்டுப் பகுதிக்குக் கீழாக ஒரே வெட்டாக வெட்டினான்.

துண்டாக இரு கைகளும் அறுபட்டு கீழே விழுந்தன. அலறியபடியே ஆதித்யா மயக்கமானான். பொழுதும் விடிய ஆரம்பித்தது. அதனையடுத்து அந்த கிராபீன் மனிதனும் காமதேனுவுடன் மறைந்தான்.

அறுபட்ட கைகளுடன் துடித்துக் கொண்டிருந்த ஆதித்யாவை செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தாரா.
‘‘என்ன திரிசங்கு சொர்க்கமா..?’’ கண்களைச் சுருக்கியபடி ரவிதாசன் கேட்டான். அவன் தோள் மீது குந்தி தேசத்து இளவரசியான பாலா உறங்கிக் கொண்டிருந்தாள்.

‘‘ஆமா...’’ என்று பதிலளித்த பரமேஸ்வர பெருந்தச்சனின் முகத்தில் சிந்தனை அப்பிக் கிடந்தது. இருவரும் த்ரைலோக்கியநாதர் கோயிலின் பிராகாரத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

‘‘அப்ப கர்ணனோட இதயம்..?’’
‘‘இப்போதைக்கு ருத்ரன்கிட்டயே இருக்கட்டும்...’’ என்று முடித்தார் பரமேஸ்வரன்.

‘‘எனக்கென்னவோ அது தப்புன்னு தோணுது...’’
‘‘இல்ல... அதுதான் சரி...’’ என்ற பரமேஸ்வரன் தீர்க்கத்துடன் ரவிதாசனை ஏறிட்டார். ‘‘நமக்குத் தேவை கபாடபுரம் போக வழி. அதை மகாபாரத குந்தியோட சிலை அடையாளம் காட்டிடுச்சு. அது போதும்...’’ என்றபடி குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர் சட்டென்று நின்றார்.

‘‘நீயும், நானும் சுரங்கத்துல இருந்தது தெரியாமயே ருத்ரன் அந்த சிலையை வரவழைச்சான். சிலை வழிகாட்டின திசையை அவனைப் போலவே நாமும் குறிச்சுக்கிட்டோம். அது போதும். சூரியன் போல கர்ணனோட இதயம் எரிஞ்சுக்கிட்டு இருக்கு. அதை ஏந்தற சக்தி நமக்கு இல்ல. கிட்டத்தட்ட 40 வருஷங்கள் ருத்ரனை ஊர் ஊரா அலைய வச்சு ஆயி பயிற்சி கொடுத்திருக்கா. அதனாலதான் அந்த இதயம் அவன் கைக்கு கிடைச்சிருக்கு. பார்த்த இல்ல... எவ்வளவு சர்வசாதாரணமா அதை அவன் பயன்படுத்தினான்னு... தலைகீழா நின்னாலும் நம்ம ரெண்டு பேராலயும் அதைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது...’’

‘‘புரியுது. ஆனா, கபாடபுரத்துக்கு போகாம எதுக்கு திரிசங்கு சொர்க்கத்துக்கு போகணும்னு சொல்ற?’’ பரமேஸ்வரனை கேள்வியுடன் நோக்கினான் ரவிதாசன்.
‘‘ஒரேயொரு திருத்தம். திரிசங்கு சொர்க்கத்துக்கு நாம போகப் போறதில்ல... நீதான் போகப் போற...’’
‘‘நானா..?’’

‘‘ம்... ஏன்னா அங்கதான் இப்ப ருத்ரன் போகப் போறான்...’’
‘‘எதுக்கு?’’
‘‘தாராவை சந்திக்க...’’
‘‘தாரான்னா...’’ என்று இழுத்த ரவிதாசனின் உதடுகளை தன் கரங்களால் பொத்தினார் பரமேஸ்வரன்.
‘‘ஷ்... சத்தம் போட்டு சொல்லாத. உன் மனசுல யாரை நினைச்சியோ அவளேதான்...’’
‘‘ம்... இவளை என்ன பண்ண?’’ தன் தோள் மீது உறங்கிக் கொண்டிருந்த சிறுமியைக் காட்டினான்.
‘‘கூட கூட்டிட்டு போ... பயன்படுவா...’’
‘‘சரி...’’ என்று நிறுத்திய ரவிதாசன், அருகில் வந்தான். ‘‘நீ எங்க போகப் போற?’’
பரமேஸ்வரன் பதில் சொன்னார்.
கேட்ட ரவிதாசன், அதிர்ந்தான்.

‘‘மன்னிக்கணும் ஆயி... இன்னும் நாங்க சரஸ்வதி நதியை கண்டுபிடிக்கலை...’’ உயரமான மனிதன் தலைகுனிந்தபடி பதிலளித்தான். அவனைச் சேர்ந்த மற்ற எட்டு பேரும் அமைதியாக இருந்தார்கள். கொடுத்த வேலையை முடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அந்த ஒன்பது பேரின் முகத்திலும் அப்பட்டமாக பிரதிபலித்தன.
சங்கிலியால் கட்டப்பட்டிருந்த ஃபாஸ்ட்டும், சூ யென்னும் எதுவும் புரியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் முன்னால் கம்பீரமாக நின்று கொண்டிருந்த இருவரையும், அவர்கள் ஆயி - விஜயலட்சுமி என்று அறியாமலேயே மலங்க மலங்க பார்த்தார்கள்.
‘‘இன்னும் ஒரு நாள் டைம் கொடுங்க... உங்க ஆசீர்வாதத்தோட நிச்சயம் மறைஞ்ச அந்த நதியை கண்டுபிடிச்சிடுவோம்...’’ என்றான் குள்ள மனிதன்.
‘‘அதுக்கு அவசியமில்ல...’’ என்றபடி ஆயி புன்னகைத்தாள். ‘‘பத்மாசனத்துல இருந்த இந்திரனை குறிப்பிட்ட நாளுக்குள்ள நீங்க பார்த்ததே போதும். உங்க திறமையை நிரூபிச்சிட்டீங்க. அதனாலதான் உடனடியா உங்களை திரும்பி வரச் சொன்னேன்...’’
ஒன்பது பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘‘அடுத்து நாங்க எங்க போகணும்... என்ன செய்யணும்..?’’ மத்திம உயரம் கொண்ட மனிதன் கேட்டான்.
‘‘அதுக்கு முன்னாடி இவங்கள என்ன பண்ணணும்னு சொல்லுங்க...’’ என்றபடி பார்வையால் ஃபாஸ்ட்டையும், சூ யென்னையும் அளந்தான் உயரமான மனிதன்.

‘‘எண்ணெய் கொப்பரைல வறுக்கலாமா...’’
‘‘இல்ல அடுப்புல விறகைப் போல எரிக்கலாமா...’’
‘‘அதுவும் இல்லைன்னா மிக்ஸில போட்டு அரைக்கலாமா...’’
என ஒன்பது பேரும் மாறி மாறி யோசனைகள் சொல்லச் சொல்ல ஃபாஸ்ட், சூ யென்னின் முகங்கள் வெளுத்தன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தண்டனையை சொல்லச் சொல்ல அதை கற்பனையில் இருவரும் கண்டார்கள். துடிதுடித்தார்கள்.
‘‘வேண்டாம்... வேண்டாம்... எங்களை விட்டுடுங்க... தெரியாம பொக்கிஷத்தைத் தேடி வந்துட்டோம்... எங்களை மன்னிச்சிடுங்க...’’ என்று அலறினார்கள்.
அவர்கள் இருவரையும் தன் பார்வையால் எடை போட்ட ஆயி, ‘‘இப்போதைக்கு இவங்களுக்கு எந்தத் தண்டனையும் வேண்டாம்...’’ என்றாள்.
‘‘ம்...’’ என முனகினான் குள்ள மனிதன்.
‘‘இவங்க ரெண்டு பேரையும் உங்க கூடவே கூட்டிட்டு போங்க...’’
‘‘ஓணானை மடிலயே வைச்சுக்க சொல்றீங்களே...’’ என்று இழுத்தான் உயரமான மனிதன்.
‘‘தேவைப்படும்போது தாராளமா பலி கொடுக்கலாம். அதுக்கு என் அனுமதியைக் கேட்க வேண்டிய அவசியமில்ல...’’ என்றாள் ஆயி.
‘‘அப்ப சரி...’’ என்று ஒன்பது பேரும் தங்கள் கைகளைத் தட்டியபடியே இருவரது கழுத்தையும் ஆசையுடன் பார்த்தார்கள். விட்டால் இப்பொழுதே கழுத்தை நெரித்து விடுவார்கள் என்பதை ஃபாஸ்ட்டும், சூ யென்னும் உணர்ந்தார்கள். பயத்தில் அவர்கள் இருவரது இதயமும் வேகமாக துடித்தன.

‘‘சொல்லுங்க ஆயி... அடுத்து நாங்க எங்க போகணும்... என்ன செய்யணும்..?’’ குள்ளமான மனிதன் ஆயியை நோக்கி வினவினான்.
‘‘என்ன செய்யணும்னு அங்க போனதும் டெலிபதில சொல்றேன்...’’ என்று நிறுத்திய ஆயி, விஜயலட்சுமியைப் பார்த்து கண்சிமிட்டிவிட்டு, ‘‘நீங்க போக வேண்டியது கபாடபுரத்துக்கு... ஆனா, அதுக்கு முன்னாடி வேறொரு இடத்துக்கு போகணும்...’’ என்று இடைவெளிவிட்டாள்.
அனைவரும் ஆயியையே உன்னிப்பாக பார்த்தார்கள். அனைவரது பார்வைகளையும் சந்தித்த ஆயி, அவர்கள் செல்ல வேண்டிய இடத்தைச் சொன்னாள்.
அந்த இடம், எங்கு பரமேஸ்வர பெருந்தச்சன் செல்லப் போவதாக ரவிதாசனிடம் சொன்னாரோ... அதே இடம்.
‘‘வைகுண்டம்..!’’
(தொடரும்)