நானும் பக்குவப்பட்ட பொண்ணுதான்




நாடே சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது கார்த்திகாவுக்கு போன் அடித்தால் எதிர்முனையில் கும்மாள சத்தம். சிரிப்பும் களிப்புமாக ஹலோவில் ஆரம்பித்த கார்த்திகா, ‘‘என் தம்பி விக்னேஷோட பிறந்தநாளை இந்த நாடே கொண்டாடிட்டு இருக்கு. கேக் வெட்டி முகத்துக்கு முகம் க்ரீம் பூசிக்கிட்டு வீடு முழுக்க ஒரே கலாட்டா கச்சேரி!’’ என்றவரை கொஞ்சம் கோபமாக்கிப் பார்த்தால் இன்னும் அழகுதானே! அதனால் கேள்விகளைத் தொடுத்தோம்...

‘‘ ‘அன்னக்கொடி’ ரிசல்ட் உங்களுக்கு சந்தோஷம் கொடுத்துச்சா?’’
‘‘ ‘வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு’ன்னு சொல்வாங்களே... அது நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். ஒரு படம் கமிட் ஆகும்போது, ‘இந்தப் படம் சூப்பரா போகும்’ங்கிற நம்பிக்கையைத் தவிர, நெகட்டிவா யாரும் யோசிக்க மாட்டாங்க. எங்க அம்மாவோட சினிமா கரியரையே உயர்த்தி வச்சவர் பாரதிராஜா சார். எனக்கும் ஒரு பிரகாசத்தை ஏற்படுத்திக் கொடுப்பார் என்ற நம்பிக்கைதான் எனக்குள்ள கடைசி வரைக்கும் இருந்துச்சு. அன்னக்கொடி கேரக்டர் மூலமா நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைக் காட்ட பாரதிராஜா சார் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். அவரோட நம்பிக்கையை வீணாக்காம என்னோட முழு உழைப்பையும் அந்தப் படத்தில் கொட்டியிருந்தேன். படம் பார்த்தவங்க எல்லாருமே ‘கார்த்திகா ஆக்டிங் பிரமாதம்’னு பாராட்டினாங்க. ஆனா, படம் எதிர்பார்த்தபடி போகலைங்கறதுக்காக, ‘அன்னக்கொடி’யை நான் குறை சொல்ல மாட்டேன். எனக்குக் கிடைச்ச பாராட்டு எல்லாமே பாரதிராஜா சாரால் கிடைச்சதுதான்.’’

‘‘முதுகைக் காட்டி நடிச்ச காட்சிக்கு விமர்சனங்கள் வந்ததே?’’
‘‘நடிப்பு, கேரக்டர்னு வந்துட்டா எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும். கதைக்குத் தேவையில்லாமல் எதையும் திணிக்கிற டைரக்டர் இல்ல பாரதிராஜா. முதுகைக் காட்டிதான் ஜெயிக்கணும்ங்கிற அவசியம் பாரதிராஜாவுக்கு இல்லை. அந்தக் காட்சி கதைக்கு அவசியம்னு புரிஞ்சுதான் அப்படி நடிச்சேன். சிட்டியிலேயே பிறந்து வளர்ந்த பொண்ணு நான். என்னை அன்னக்கொடியா மாத்த பாரதிராஜா எவ்வளவு சிரத்தை எடுத்திருக்கணும்? நான் அந்த கேரக்டராவே மாற எவ்வளவு உழைச்சிருக்கணும்னு யோசிச்சுப் பாருங்க. முதுகைக் காட்டி நடிக்கிறது உலக மகா குற்றமா என்ன? இன்னும் சில பேர், ‘கார்த்திகா முதுகைக் காட்டி நடிச்சு கஷ்டப்பட்டதெல்லாம் வீணாப் போச்சே’ன்னு விமர்சனம் பண்ணினாங்க. சொல்லப் போனா, கஷ்டப்பட்டு நடிச்ச என்னைவிட, விமர்சனம் பண்றவங்கதான் ரொம்ப வருத்தப்படுறாங்க. அது ஒரு கேரக்டர்... நடிப்பு... அதை மட்டும் பாருங்க. தப்பா தெரியாது!’’



‘‘அம்மாவோட வற்புறுத்தலால்தான் அந்தக் காட்சியில் நடிச்சீங்களாமே?’’
‘‘அப்படியா... இந்தக் கதையை யார் அவிழ்த்துவிட்டது? எனக்கும் சரி, என் தங்கை, தம்பிக்கும் சரி... எங்கம்மா முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. அதுமட்டுமில்ல, வாழ்க்கையில் எந்த நேரத்திலும் சுயமா சிந்தித்து முடிவெடுக்கவும் சொல்லிக்கொடுத்திருக்காங்க. எது சரி, எது தப்புன்னு புரிஞ்சிக்கற பக்குவம் எனக்கு இருக்கு. மறுபடி மறுபடி அந்த விஷயத்தை பேசுறதுதான் தப்பு. பாரதிராஜா எப்பவும் மரியாதைக்குரியவர்.’’



‘‘தமிழில் அடுத்து..?’’
‘‘அருண்விஜய்யோட ‘டீல்’. ஒரு போல்டான, க்யூட்டான கேரக்டர் பண்றேன். படத்துல நல்ல காமெடியும் இருக்கும். ஒரே ஒரு பாட்டு மட்டும்தான் எடுக்க வேண்டியிருக்கு. அதுக்காக அடுத்த வாரம் சென்னைக்கு வர்றேன். தவிர, கன்னடத்தில் தர்ஷன் ஜோடியா, ‘பிருந்தாவனா’ படத்தில் நடிக்கிறேன். அதில் கிராமத்துப் பெண்ணா வர்றேன். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த நான், இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கும்போது என்னைக் காப்பாத்த ஹீரோ வர்றார். அதனைத் தொடரும் சம்பவங்கள்தான் கதை. ஒரு டூயட்டுக்காக  மலேஷியாவுக்குப் போறேன். ஆரம்பத்தில் நான் ஷூட்டிங் போகும்போது, அம்மாவும் துணைக்கு வருவாங்க. இப்போ அவங்களும் டி.வி ஷோவில் பிஸியாகிட்டதால, என்னோட மலேஷியா ட்ரிப் தனியாதான் இருக்கும். படங்களோட எண்ணிக்கை முக்கியமில்லைன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. நானும் அதைத்தான் சொல்றேன். எனக்கு எத்தனை படம் பண்றோம்ங்கிறது முக்கியமில்லை. என்ன கேரக்டர் பண்ணப் போறோம்ங்கிறதுதான் முக்கியம். ‘டீல்’ தவிர, கூடிய சீக்கிரமே இன்னொரு நல்ல கேரக்டரில் என்னை நீங்க பார்க்கலாம்.’’
- அமலன்