கடைசி பக்கம்





சாஃப்ட்வேர் துறையில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் இளைஞன் அவன். எந்த சந்தேகத்துக்கும் கூகுளிலும், விக்கிபீடியாவிலும் விடை தேடும் இந்தத் தலைமுறைக்காரன். கனடாவின் தலைநகரிலிருந்து கானடா ராகத்தில் அமைந்த பாட்டு வரை எதைப் பற்றியும் எவருடனும் விவாதிக்க முடிகிற நிபுணனாக தன்னைக் காட்டிக் கொள்பவன்.  

இன்று காலையில் அவனுக்கே ஒரு பிரச்னை. அடிவயிற்றில் தாங்க முடியாத வலி அடிக்கடி ஏற்பட்டது. இதற்கு முன்பு இப்படி அவனுக்கு வலி வந்ததில்லை. ‘லீவ் போட்டுவிட்டு டாக்டரிடம் போகலாமா?’ என்றுகூட யோசித்தான். எதற்கும் இருக்கட்டும் என தனது டாக்டர் நண்பரிடம் பேசினான். வலிக்கும் ஏரியாவை விசாரித்துவிட்டு, ‘‘லிவரில் ஏதாவது பிரச்னை இருக்கலாம்... எதற்கும் நேரில் வாருங்கள். பார்த்துவிடலாம்’’ என்றார் அவர்.

அவனுக்குப் பதற்றமாகிவிட்டது. முறையற்ற உணவுப் பழக்கமும் வார இறுதி பார்ட்டிகளும் தனது லிவரை நாசம் செய்துவிட்டதா என நினைக்கும்போதே வியர்த்தது. உடனே ‘லிவர் பிராப்ளம்’ என கூகுளில் தேடினான். அது அறிகுறிகளை வைத்து நோயைக் கணிக்கும் ஒரு மருத்துவ இணையத்தளத்தை அடையாளம் காட்டியது. அந்த தளத்துக்குப் போனான். வரிசையாக அறிகுறிகள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஒவ்வொன்றாகப் படிக்கும்போது, எல்லாமே தனக்கு இருப்பதைப் போல பிரமை எழுந்தது. ஏழு வரை எல்லாம் சரியாக இருந்தன. எட்டாவது அறிகுறி: ‘வழக்கமான சுறுசுறுப்பு காணாமல் போய்விடும். பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடுவது; வாலை வேகமாக ஆட்டுவது என எதுவும் இருக்காது’ என இருந்தது. அப்போதுதான் தலைப்பைப் பார்த்தான். அவை, நாய்களுக்கான நோய் அறிகுறிகள்! வெட்கத்தோடு தேடலைக் கைவிட்டான்.
எல்லா விஷயங்களிலும் நிபுணராக ஆசைப்படாதீர்கள்!