பார்வை





‘‘அம்மா ஆபீசுக்கு கிளம்பிட்டாங்களா சார்?’’ - கேட்டபடி உள்ளே வந்தாள் வேலைக்காரி விமலா.
‘‘இப்பதான் போனா... எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் இருக்கு’’ என்ற சேகர், ஹாலில் பேப்பரைப் படித்தபடி உட்கார்ந்தான்.

துடைப்பத்தை எடுத்து பெருக்க ஆரம்பித்தவுடன் சேகரின் பார்வை தன் மீது படுவதை விமலா ஓரக்கண்ணால் பார்த்தாள். ஹால், சமையல் அறை, பெட்ரூம் என பெருக்கிக்கொண்டே கவனித்தாள். அவன் பார்வை அவள் மீதே இருந்தது. விமலாவுக்கு என்னவோ போல் இருந்தது. பெருக்கி முடித்ததும் தரையைத் துடைக்கும்போது சேகர் சமையல் அறைக்கே வந்து நோட்டம் விட்டான்.

மாலையில் அம்மா வரும்வரை காத்திருந்து, வீட்டிற்கு வந்தவளிடம் விமலா விலாவாரியாக சேகரைப் பற்றிச் சொன்னாள். ‘‘ஐயா அப்படிப் பார்க்கறது எனக்குப் பிடிக்கலை. இந்த சபலம் ஏதாவது ஏடாகூடமா ஆவதற்கு முன்னால நான் நின்னுக்கறேன்மா...’’

‘‘நீ தப்பா புரிஞ்சிக்கிட்டே. சோபாவுக்கு அடியிலயும், கதவுக்குப் பின்னாலயும் ஒரே குப்பை. நீ சரியா பெருக்கறதில்லை. சமையல் அறையில் டைனிங் டேபிள் கீழே துடைக்கறதில்லை. அதுக்குத்தான் அவரை மேற்பார்வை பார்க்கச் சொன்னேன். ஆனா இப்படி நீ நினைப்பேன்னு எனக்கு தோணலே... மன்னிச்சுக்கோ!’’

‘‘இல்லேம்மா! நான்தான் ஐயாவை தப்பா நெனச்சுட்டேன். இனிமே சரியா பெருக்கித் துடைக்கிறேன்’’ - சொல்லிவிட்டு தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டாள் விமலா.