கோணம்!





‘‘என்னடா அவினாஷ்... இந்தப் பொண்ணாவது உனக்குப் பிடிச்சிருக்கா?’’ - ஆர்வத்தோடு
கேட்டாள் அம்மா விமலா.
‘‘பிடிச்சிருக்கு. ஆனா...’’ - மெல்ல இழுத்தான் ‘‘இன்னும் என்னடா? பொண்ணு தங்க விக்கிரகம் மாதிரி இருக்கா. பி.இ படிச்சிருக்கா. குனிஞ்ச தல நிமிரலை. பொண்ணோட அப்பா சொன்னதைக் கேட்டியா? பொண்ணு படிச்ச காலேஜ் கூட அவ்வளவு கட்டுப்பாடானதாம். ஆணும் பெண்ணும் பேசக் கூடாதாம். மதியம் சாப்பிடற இடத்துல கூட பாய்ஸ் தனி... கேர்ள்ஸ் தனி... பஸ்ஸில கூட பேசக் கூடாதாம். எப்படிப்பட்ட இடத்துல படிக்க வச்சிருக்காங்க பார்த்தியா?’’ - அடுக்கிக்கொண்டே போனாள் விமலா.
‘‘அப்படிப்பட்ட காலேஜ்தான் பிரச்னையே...’’ - அழுத்தமாய்ச் சொன்னான் அவினாஷ்.
‘‘என்னடா சொல்றே?’’

அவினாஷ் நிறுத்தி நிதானமாக விளக்கினான்.
‘‘யோசிச்சுப் பாரும்மா... நான் வியாபார விஷயமா அடிக்கடி ஊருக்குப் போயிடுவேன். இங்கே என் நிறுவனத்தை மனைவிதான் நிர்வகிக்க வேண்டியிருக்கும். வேலை பார்க்கிறவங்களும் வாடிக்கையாளர்களும் பெரும்பாலும் ஆண்கள். அவங்களோட சகஜமா கண்ணைப் பார்த்துப் பேசுற தைரியம் இந்தப் பொண்ணுகிட்ட இல்ல. காலேஜ் அதை மழுங்கடிச்சுடுச்சு. அதனால இந்த இடம் வேண்டாம்!’’
மகன் சிந்திக்கும் கோணம் சரியானது என உணர்ந்து மௌனமானாள் விமலா.