தலைவா : சினிமா விமர்சனம்





மும்பை தாதாவால் வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் மகன், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் திரும்பி வந்து, அதேபோல தாதாவாகி, அப்பாவின் எதிரிகளை ஒரு கை பார்த்து, தலைவன் ஆகிற கதை.

1988ல் ஆரம்பிக்கிறது கதை. தாராவி தமிழ் மக்களின் மனம்தொட்ட தலைவராக வலம் வருகிறார் சத்யராஜ். ‘அண்ணா’ என அழைக்கப்பட்டு, மக்களின் நலனுக்கு யார் குறுக்கே நின்றாலும் எதிர்த்து நின்று, அவசியமென்றால் கொலையும் செய்து, மக்களின் மனசை ஈர்க்கிறார். மகன் விஜய்யின் எதிரேயே அவரை வெடிகுண்டில் பலியாக்குகிறார்கள் எதிரிகள். பின்பு தாராவி தவிக்க, எதிரிகளை விஜய் அடையாளம் கண்டு துள்ளத் துடிக்க பழி தீர்ப்பதுதான் க்ளைமேக்ஸ் நிமிடங்கள்.

தந்தையின் எந்த தாதா ரகசியங்களும் தெரியாமல் சிட்னியில் வளரும் விஜய், ரொம்பவும் இளசு. சிரிப்பிலும், இளமையிலும், உடையிலும் அழகான புது விஜய். அந்த குதூகல விஜய், மும்பையில் உருமாற்றம் அடைகிற விதத்தில் ஆரம்பிக்கிறது மெயின் ஸ்டோரி. ‘நாயகன்’, ‘தேவர் மகன்’, ‘புதிய பறவை’ கதைகளை சேர்த்துக் குலுக்கி செய்த திரைக்கதையில் தெரிகிறது டைரக்டரின் சாமர்த்தியம். இதுவரை வெளிநாட்டுப் படங்களையே சுட்டவர், தமிழ்ப்படங்களில் ‘கை’ வைத்திருப்பதை வன்மையாகக் கண்டித்துவிட்டு தொடரலாம்.

‘துப்பாக்கி’க்கு பிறகு வந்த கதையென்பதால், இயற்கையாகவே எதிர்பார்ப்பில் எகிறும் கதைக்கு விஜய் அவரால் முடிந்தவரை ஈடு கொடுக்கிறார். விஜய்க்கும், அமலாபாலுக்கும் இடையிலான கெமிஸ்டரி, இயக்குநரின் ‘கண்காணிப்பில்’ கொஞ்சம் குறைவுதான். ஆனால், வழக்கம்போல் ஆட்டத்தில் பின்னிப் பெடலெடுக்கிற விஜய், நடிப்பிலும் வித்தியாசம் காட்டுகிறார். மும்பைக்கு வந்து அப்பாவின் பொறுப்புக்களை தோள் மாற்றிக்கொள்கிற இடத்தில் ஆரம்பிக்கிறது விஜய்யின் பொறுப்பு.

மும்பைக்கு விஜய் தரையிறங்கும்போதுதான் டேக் ஆஃப் ஆகிறது ‘தலைவா’. தலைவனுக்கான விறைப்பும், முறைப்புமாக முயன்று உயிர் கொடுப்பதில் நிற்கிறார் விஜய். எக்கச்சக்கமாக பன்ச் வசனங்கள் பேசாமல், பார்வையால் பன்ச் கொடுக்கும் விஜய், இதில் புதுசு.

அமலாபால் செம ஜீலிர். கொஞ்சம் கொஞ்சமாக விஜய்யின் பக்கம் சரிவதில் தெரிவது அழகிய ரொமான்ஸ். எந்தப் படத்தின் சாயலும் இல்லாமல், சிட்னியில் விஜய், அமலாபால், சந்தானம் வலம் வரும் இடங்கள் படத்திற்கு நல்ல இளமை. வழக்கம் போல சந்தானம் பெரிய ரிலீஃப். காமெடிக்கு என வலிந்து செய்யாமல் இப்போதெல்லாம் கதையோடு தன்னை இணைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிற அக்கறை சந்தானத்திடம் இருக்கிறது. வெரிகுட்!

‘யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது’ பாடலில், விஜய் அமலாபால் இருவரின் சிறிய அசைவுகளோடு நடனம் ஈர்க்கிறது. சிட்னியின் அழகு, மும்பையின் அழுக்கு... இரண்டையும் ஃப்ரெஷ் லுக்கில் தருவது நீரவ் ஷாவின் அனுபவப்பட்ட ஒளிப்பதிவு. கேமரா தொட்ட இடமெல்லாம் சிட்னியின் அழகு இனிக்கிறது. விஜய்யின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இரண்டு பாடல்களில் ஈர்க்கிறார். ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’, நல்ல துறுதுறு.

தலைப்பை ‘தலைவா’ என வைத்து, ‘தளபதி எங்கள் தளபதி’ என பாட்டு வைத்து, இப்படி தலைவன் விஜய்யை தவிக்க வைத்திருக்க வேண்டாம் டைரக்டர் விஜய். மூன்று மணி நேரத்துக்கும் மேல் படம் நீள்வது, விஜய்யின் ஆத்மார்த்த ரசிகர்களுக்கே அலுப்பும் ஆயாசமும் தரக்கூடும். கொஞ்சம் பலமாக கத்திரி போட்டிருந்தால், ‘தலைவா’ இன்னும் ஈர்ப்பான்!
- குங்குமம் விமர்சனக் குழு