உலகில் அதிகம் பேர் மரணிப்பது காசநோயால்தான்





இந்தக் கட்டுரையை நீங்கள் படித்து முடிப்பதற்குள் 20 பேர் உயிரிழந்திருப்பார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காசநோயாளியாக உருமாறியிருப்பார்கள். பல நூறு பேர் மரணத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள். சத்தமில்லாமல் ஊடுருவித் தாக்கும் ஆயுதத்தைப் போல, மனித குலத்துக்கு எதிரான கொள்ளை நோயாக உருவெடுத்திருக்கிறது காசநோய் (டி.பி). காற்றின் மூலம் பரவும் இந்தக் கொடூர நோய், 2 நொடிக்கு ஒருவர் என்ற வேகத்தில் புதிய நோயாளிகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் ஹெச்.ஐ.விக்கு எதிராக பெரும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. பல நூறு கோடி செலவில் நிகழ்ந்த அந்த பிரசாரங்களால், அந்நோய் கட்டுக்குள் வந்திருக்கிறது. முற்றிலும் குணப்படுத்த முடியாத ஹெச்.ஐ.வியையே கட்டுக்குள் கொண்டு வந்த மருத்துவ சாகசம், காசநோய்க்கு முன்னால் எடுபடவில்லை. 100% குணப்படுத்தும் அளவுக்கு மருந்துகள் கண்டறியப்பட்ட பிறகும் இது விஷ விருட்சமாக வளர்வது ஏன்?
‘‘பிற நோய்களோடு ஒப்பிடும்போது காசநோயால்தான் அதிக உயிரிழப்பு நேர்கிறது. இதற்கு மருத்துவம் தவிர சில சமூகக் காரணிகளும் உண்டு. காசநோய் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் ரத்தப்பரிசோதனை செய்து கொள்கிற மக்கள், இரு வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியான இருமல் இருந்தால் டி.பி பரிசோதனை செய்து கொள்ள நினைப்பதில்லை. காசநோயை மக்கள் சாதாரணமாக நினைக்கிறார்கள். அளவுகடந்த வதையைத் தருவதோடு மட்டுமின்றி, சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் உயிரையும் பறித்துவிடும் இது. தவிர, சமூகப்புறக்கணிப்புகள் ஒரு பக்கம்... குறிப்பாக பெண்கள் இந்நோய்க்கு ஆட்படும்போது அவர்கள் வாழ்க்கை பெரும் சிக்கலாகிறது. சத்துணவுக் குறைபாடு, சுகாதாரமற்ற வாழ்க்கை முறை, ஏழ்மை போன்ற காரணங்களால் காசநோய் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

சுவாசம் மூலமாக 40 சதவீதம் பேரின் உடலுக்குள் காசநோயை உருவாக்கும் பாக்டீரியா நுழைகிறது. எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும் வரை பிரச்னை இல்லை. சக்தி குறைந்தால் வேலையைக் காட்டிவிடும். பாக்டீரியாவை உடம்பில் கொண்ட 40 பேரில் 4 பேருக்கு காசநோய் வரக்கூடும். காசநோய் நுரையீரலை மட்டுமின்றி மூட்டுகள், வயிறு, மூளை என எந்த உறுப்பையும் தாக்கலாம். ஆனாலும், நுரையீரல் காசநோயால்தான் அதிக உயிரிழப்பு.


கடந்த 100 ஆண்டுகளில் காசநோய் மருத்துவம் பெருமளவு வளர்ந்துள்ளது. இதன் விபரீதத்தை உணர்ந்து உலக சுகாதார நிறுவனமும், அரசுகளும் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. மிகச்சிறந்த மருந்துகளும் வந்துவிட்டன. ஆனாலும் மருத்துவ வளர்ச்சிக்கு இணையாக நோயின் தன்மையும் வளர்ந்து கொண்டே போகிறது. இந்நோய் வராமல் தடுக்க வாய்ப்பு குறைவு. நோயை சீக்கிரம் கண்டுபிடிப்பதே இப்போது நம்முன் உள்ள வழி. நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலமே நோய் பரவாமல் தடுக்க முடியும். அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை, சிகிச்சை, மருந்துகள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன. எனவே அறிகுறிகள் தெரிந்தால் காலம் தாழ்த்தாமல் அரசு மருத்துவமனையை நாட வேண்டும்’’
என்கிறார் டாக்டர் ரம்யா.

ரம்யா, காசநோய் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியை ஒருங்கிணைத்து வரும் ‘ரீச்’ (ரிசர்ச் குரூப் ஃபார் எஜுகேஷன் அண்டு அட்வகசி ஃபார் கம்யூனிட்டி ஹெல்த்) என்ற அமைப்பின் இணை இயக்குனராக உள்ளார். 

‘‘காசநோய் இருப்பது தெரிந்தால் சமூகத்தில் மரியாதை போய்விடும், மற்றவர்கள் ஒதுக்கி விடுவார்கள் என்று அஞ்சியே பலர் சிகிச்சை எடுத்துக் கொள்ள முன்வருவதில்லை’’ என வருந்துகிறார் தமிழ்நாடு மாநில காசநோய் அலுவலர் டாக்டர் ஜே.அறிவொளி.

‘‘தகுந்த நேரத்தில் நோயைக் கண்டறிந்து, இடைவிடாமல் 6 முதல் 8 மாதங்கள் வரை சிகிச்சை எடுக்காவிட்டால், நோயின் தன்மை அதிகரித்து மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (MTRTb) அது மாறிவிடும். அதற்கு 2 வருடங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்குப் போகிறவர்கள், சிகிச்சை தொடங்கிய ஓரிரு வாரங்களில் ஓரளவுக்கு குணம் தெரிந்ததும் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறார்கள். வேலைதேடி இடம் பெயர்பவர்களும் சரியாக மாத்திரை சாப்பிடுவதில்லை. இவர்களைப் போன்றவர்களே இப்படி ஆகிறார்கள். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் இப்படி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள். முறையாக சிகிச்சை எடுக்காத பட்சத்தில் இவர்கள் ஙீஜிஸிஜிதீ (எக்ஸ்ட்ரீம் டிரக் ரெசிஸ்டன்ஸ் டி.பி) என்ற சிக்கலான நிலைக்குப் போகக்கூடும்.

முதல் நிலையிலேயே காசநோயைக் குணப்படுத்த சிறந்த ஏற்பாடுகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ‘டாட் பொறுப்பாளர்கள்’ நியமிக்கப்படுகிறார்கள். அந்தப்பகுதியில் உள்ள நோயாளிகளை கவனித்து அவர்களுக்கு சரியான முறையில் மருந்துகளை வழங்குவதும், அறிகுறிகள் தெரிபவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதும் அவர்களுடைய பணி. ‘டாட் பொறுப்பாளர்க’ளுக்கு ஒரு நோயாளிக்கு 250 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். MTRTb நோயாளிகளை கவனிப்பவர்களுக்கு 2500 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும். சமூக அக்கறை உள்ள எவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தங்களை ‘டாட் பொறுப்பாளராக’ பதிவுசெய்து காசநோயை ஒழிக்க ஒன்றிணையலாம்’’ என்கிறார் அறிவொளி.

ஆராய்ச்சிகளின் வேகத்தை விட நோயின் வேகம் அதிகமாக இருக்கிறது. மருத்துவர்கள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் அரசு எந்திரத்தோடு கைகோர்த்தால் மட்டுமே காசநோய் அரக்கனை ஒழிக்க முடியும். மாத்திரைகள் தயாராக இருக்கின்றன. இப்போதைய தேவை எல்லாம் விழிப்புணர்வு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்புதான்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்



காசநோய் - பயோடேட்டா!
*   ஏழை, பணக்காரர் வித்தியாசமெல்லாம் கிடையாது. யாருக்கும் காசநோய் வரலாம். ஹெச்.ஐ.வி மற்றும் நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இது வரும் அபாயம் அதிகம் உண்டு. புகை, மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் வரலாம்.
*   காசநோயாளி இருமும்போதும், தும்மும்போதும், பேசும்போதும் டி.பி ஏற்படுத்தும் பாக்டீரியா காற்றில் கலக்கிறது. சுவாசம் மூலம் அது பிறருக்குப் பரவுகிறது.
*   அறிகுறிகள்... 2 வாரங்களுக்கு மேல் தொடர்ச்சியான இருமல், சளியுடன் ரத்தம் வருதல், இரவுநேரக் காய்ச்சல், எடை குறைவு, அதீத களைப்பு, நெஞ்சு வலி, சுவாசிப்பதில் சிரமம்.
*   அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று சளி பரிசோதனை செய்ய வேண்டும்.
*   காசநோய் என்பது உறுதியானால் பயமோ, பதற்றமோ தேவையில்லை. நல்ல ஓய்வு, சத்துணவோடு 6 முதல் 8 மாதங்கள் இடைவிடாமல் ‘டாட்’ சிகிச்சையை எடுத்துக் கொண்டால் 100% குணமாக்கலாம். தும்மும்போதும், இருமும்போதும் சுத்தமான துணிகளைப் பயன்படுத்தி, பிறகு எரித்து விட வேண்டும். பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.   
*   வராமல் தடுக்க...
குழந்தைகளுக்கு பி.சி.ஜி தடுப்பூசியை மறக்காமல் போடுங்கள்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
சத்தான உணவுகளைச் சாப்பிடுங்கள்.
*   காசநோய் பற்றிய அச்சமா... சிகிச்சை கிடைப்பதில் பிரச்னையா... சந்தேகமா... கவுன்சிலிங் தேவையா..? வேறு ஏதேனும் உதவிகள் தேவையா..? அல்லது டாட் பொறுப்பாளராக விரும்புகிறீர்களா..? தொடர்பு கொள்ளுங்கள்: 99620 63000