பாண்டிய நாடு





மதுரையில் குற்றச் செயல்கள் புரியும் பெரிய தலைக்கட்டு இறந்துவிட, அடுத்து அந்த ‘இடத்துக்கு’ யார் பொறுப்பு என இரண்டு கோஷ்டிகளாகி எகிறுகிறார்கள். அதில் ஒரு கோஷ்டியால் உள்ளூர்க் குடும்பம் ஒன்று தன் மூத்த மகனை இழந்துவிடுகிறது. அவரது தம்பி ஆக்ரோஷமாகி கிளர்ந்தெழுகிற கதைதான் ‘பாண்டிய நாடு’.

வருஷம் முழுக்க வெயிலடிக்கும் மதுரையில் சும்மாவே அருவாவை எடுத்து, திக்கெட்டும் சுழற்றி, பின்னி பெடலடுப்பார் விஷால் என்று எதிர்பார்த்தால்... அவரை அடக்கி வாசிக்கச் சொல்லி, அருமையாக கதை சொல்லியிருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன். காய்ச்சி எடுக்கப் போகும் ஆக்ஷனுக்கு நடுவே அழகான குடும்பக் கதையும் கைகோர்த்து வருகிறது. அந்த நேர்த்திக்கே கொடுக்க வேண்டும் சுசீந்திரனுக்கு பொக்கே!
ஆல்வேஸ் ஆவேச விஷால், இதில் அமைதியாக, எந்த சண்டை சச்சரவுக்கும் போகாமல், வில்லனுக்கு விரிக்கும் வலைகளும், அதில் வில்லன் சிக்கி சிக்கி தப்பிக்கிற விதமும் ரொம்பப் புதுசு. டைரக்டரின் கை பற்றியிருக்கிற அழகு விஷாலிடம் தெரிகிறது. வில்லனை தீர்த்துக் கட்டும் வலையில் விஷாலோடு அப்பாவும் இணைவது படத்தின் பெரும் திருப்பம். ஆக்ஷனைக் கூட எல்லோரும் உட்கார்ந்து பார்க்க வைக்க முடியும் என்பதை தெரிந்துகொண்ட வகையில், மீண்டும் எழுந்துவிட்டார் விஷால்.

அப்பாவாக பாரதிராஜா... நம்பவே முடியவில்லை. தமிழகத்திற்கே தெரிந்த அவரது ‘வாய்ஸ்’, அசல் அப்பாவாக அருமையான வார்த்தைகளில் வெளிப்பட்டு இருக்கிறது. அப்பாவும், பிள்ளையும் வேறு வேறு ரூட்டில் வில்லனை தீர்த்துக் கட்ட புறப்படும் நெருக்கடியில், படம் பார்க்கிறவர்களுக்கு கிடைப்பது இரட்டை பரபரப்பு. எதிரிகள் விரிக்கும் வலையில் அப்பா சிக்கிக்கொள்ளும் கடைசி நொடிகளில் விஷால் அவரைக் காப்பாற்றி, யாரென்று சொல்லாமலே மருத்துவமனையில் சேர்த்து மறைவது புருவம் உயர்த்துகிற திருப்பம்.
ஹீரோயின் லட்சுமி மேனன், நெடுநெடு உயரத்தில் கிடுகிடு அழகில் கிறங்கடிக்கிறார். விஷாலின் உயரத்திற்கும் கிட்டத்தட்ட நல்ல பொருத்தம். பதறி எடுக்கிற பின்பாதி ஆக்ஷனுக்கு நடுவில் லட்சுமி-விஷால் காதல், வெல்லக்கட்டி. காதலைச் சொல்லிவிட்ட மகிழ்ச்சியில் நண்பர்களோடு துள்ளாட்டம் ஆடும் பாடலுக்கு நடுவே, ‘கல்யாணத்தை ஜூலையில் வச்சுக்கலாமா...’ என ஹஸ்கி வாய்ஸில் லட்சுமி மேனன் போனில் கேட்பது டைரக்டோரியல் டச்!
ஆச்சரிய வில்லன் சரத்.

அருமையான தேர்வு. எந்தவித விநோத மேக்கப்பும் போட்டு கலவரப்படுத்தாமல், அதிரடி உடல்மொழியிலேயே அசத்துகிறார். விக்ராந்த் வந்து போனாலும், நினைவில் நிற்கிறார். அவரையும் கொஞ்சம் கவனிங்கப்பா!
சும்மா சொல்லக் கூடாது... டி.இமானை! ‘மைனா’வில் ஆரம்பித்த இமான் சீசன், ‘பாண்டிய நாட்’டிலும் ஒலிக்கிறது. பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி... மனிதர் வஞ்சகம் இல்லாமல் பின்னியெடுக்கிறார். மீண்டும் ஒளிர்கிறார் வைரமுத்து! ஆரம்பத்திலேயே வரும் அந்த ஒப்பாரிப் பாட்டு, அச்சு அசல் அடாவடி குத்து. எல்லா ஆக்ஷனையும் நாமே பக்கத்தில் இருந்து பார்ப்பதைப் போன்ற நெருக்க உணர்வை அளிக்கிறது மதியின் கேமரா. பாஸ்கர் சக்தியின் உரையாடல்களில் அமைதியும், காதலும், நெருப்பும் பரவுகிறது.
பாண்டிய நாட்டில் சுசீந்திரன் கொடியே பறக்கிறது!
- குங்குமம் விமர்சனக் குழு