படிப்பு





மனைவியுடன் வாக்குவாதம் முற்றியது. கடைசியில், ‘‘நீ உன் இஷ்டப்படியே பண்ணித் தொலை!’’ எனக் கத்திவிட்டு வெளியே கிளம்பினான் சுந்தரம்.

‘‘நான் எதைச் சொன்னாலும் கேக்குறதில்ல... சரிக்கு சமமா வாதாடி ஜெயிச்சு, கடைசியா அவ நினைச்சதைத்தான் செய்யிறா! அப்புறம் நம்மகிட்ட என்ன ஐடியா வேண்டிக் கிடக்கு?’’ - வாய் அவனை அறியாமல் புலம்பியது.

‘‘நான் நினைச்சதை என்னிக்குமே செய்ய முடியறதில்லை. படிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி எல்லாத்துக்கும் அவ கூட வாதம் பண்ண வேண்டியதாப் போச்சு. பேசாம என் ஃப்ரெண்டு முருகனை மாதிரி நானும் படிக்காத பெண்ணைக் கட்டியிருக்கலாம். சுதந்திரமாச்சும் மிஞ்சியிருக்கும்!’’ - புலம்பியபடியே டீக்கடைக்கு வந்தான் சுந்தரம்.

அங்கே, அவனுக்கு முன்னால் ‘தம்’ போட்டுக் கொண்டிருந்தான் முருகன்.
‘‘வாடா சுந்தரம்! நானே உனக்கு போன் போடலாம்னு இருந்தேன்...’’
‘‘ஏன்டா... என்னாச்சு?’’
‘‘என் வீட்டுக்காரி, என்ன சொன்னாலும் நல்லா தலையத் தலைய ஆட்டுறா! கழுதைக்கு புரிஞ்சுதா, இல்லையான்னுகூட தெரியலை. ஆனா, செய்யும்போது தெளிவா அவ நினைச்சதைத்தான் பண்ணுறா! என்ன பண்றதுன்னே தெரியலைடா... உன்னை மாதிரி படிச்சவளைக் கட்டியிருக்கலாம்!’’ - வெறுத்துப் போய் சொன்னவனை அதிர்ச்சியோடு பார்த்தான் சுந்தரம்.