தமிழகத்தை புறக்கணிக்கிறதா இஸ்ரோ?






பெருமிதமான தருணம் இது. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக விண்வெளி ஆராய்ச்சியில் வெற்றிக்கொடியைப் பறக்க விட்டிருக்கிறது இந்தியா. ‘மங்கள்யான்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. அங்கு மனிதர்கள் வாழும் சூழலைப் பற்றி ஆராய்வதற்காக முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே மங்கள்யானை உருவாக்கி சாதித்திருக்கிறது இஸ்ரோ. இந்தியாவுக்கு இப்படி ஒரு இனிப்பான அனுபவத்தைக் கொடுத்த இஸ்ரோ, தமிழக விஷயத்தில் மட்டும் தொடர்ந்து கசப்புணர்வோடு நடந்து கொள்கிறது என்பதுதான் வேதனை.

12வது ஐந்தாண்டு திட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக வருடத்துக்கு 60 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்காக கணிசமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 2 ராக்கெட் ஏவும் தளங்கள் உள்ளன. பல செயற்கைக்கோள் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாலும், பல நாடுகள் செயற்கைக்கோள்களை ஏவ இந்தியாவை அணுகுவதாலும் மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவெடுத்தது. அதற்கு மிகவும் பொருத்தமான இடம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினமே என்று இஸ்ரோவைச் சேர்ந்த பல நிபுணர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதைப் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல், ஸ்ரீஹரிகோட்டாவிலேயே மூன்றாவது தளத்தையும் அமைக்கும் பணிகளைத் தொடங்கி விட்டது இஸ்ரோ.

அறிவியல், பூகோள, பாதுகாப்பு ரீதியில் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைத்தால் வழக்கமான செலவில் பல கோடி ரூபாயை மிச்சப்படுத்த வாய்ப்பிருந்தும், சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த திட்டத்தை சிலர் திசைமாற்றி விடுவதாக வருந்துகிறார்கள் அதிகாரிகள். 

இதுபற்றி திரவ இயக்க உந்து மைய ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் எம்.மனோகரனிடம் பேசினோம். ‘‘ஸ்ரீஹரிகோட்டாவை விட ராக்கெட் ஏவுதளம் அமைக்க மிகச்சிறந்த இடம் குலசேகரப்பட்டினம். சில தொழில்நுட்ப விபரங்கள் மூலம் இதை உறுதிப்படுத்த முடியும். பி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள்களை தெற்கு நோக்கி ஏவி 450 முதல் 1000 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்த வேண்டும். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கு நோக்கி ஏவி 36 ஆயிரம் கி.மீ தூரத்தில் நிலைநிறுத்த வேண்டும். உலக விண்வெளி விதிமுறைப்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட்டுகள் இன்னொரு நாட்டின் மீது பறக்கக்கூடாது. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரடியாக ராக்கெட்டுகளை ஏவினால் அது இலங்கை, இந்தோனேஷியா நாடுகள் மீது பறக்க வாய்ப்புண்டு. அதற்காக தென்கிழக்காக அனுப்பி, மீண்டும் திசை திருப்பி சுற்றுப்பாதைக்குக் கொண்டு வர வேண்டியிருக்கிறது. இதனால் பல கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பகுதி நான்கு பாகங்களை உள்ளடக்கியது. இலங்கையைச் சுற்ற கூடுதல் எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே 4வது பாகம் இணைக்கப்படுகிறது. இதற்கு செலவாகும் தொகை சுமார் 20 கோடி ரூபாய். குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை அனுப்பினால் இதைத் தவிர்க்கலாம்.

செயற்கைக்கோளின் பயன்பாடு அதன் எடையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. கூடுதல் எடையுள்ள செயற்கைக்கோளில் கூடுதலாக டிரான்ஸ்பாண்டர்கள், ஆராய்ச்சிக் கருவிகள் எடுத்துச் செல்லமுடியும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மூலம் 1600 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை 650 கி.மீ தூரத்தில் நிலைநிறுத்த முடியும். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும்போது 2200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்புவது சாத்தியம். 600 கிலோ கூடுதல் எடை கிடைக்கும். இன்றைக்கு சர்வதேச மார்க்கெட்டில் 1 கிலோ எடையை விண்ணில் அனுப்ப ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை கட்டணம். அப்படிப் பார்த்தால் 600 கிலோ கூடுதல் எடைக்கான கட்டணம் ரூ.90 கோடி.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை ஏவினால் 36,000 கி.மீ தூரத்தை குறைவான பயண நேரத்தில் கடந்து விடமுடியும். இலக்கைத் தொட்டபிறகு, மிஞ்சியுள்ள எரிபொருளை வைத்தே செயற்கைக்கோளின் ஆயுள் தீர்மானிக்கப்படும். பயண நேரம் குறைவதால் எரிபொருள் மிச்சமாகி செயற்கைக்கோளின் ஆயுள் 2 ஆண்டுகள் வரை கூடுதலாகும். 

ஆக, குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஒரு பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை ஏவுவதன் மூலம்குறைந்தபட்சம் 110 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும். மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.12,000 கோடி. இந்தத் தொகையை 109 பி.எஸ்.எல்.வி ராக்கெட் அனுப்புவதால் மிச்சமாகும் தொகையை வைத்தே ஈட்டிவிடலாம். ஒரே இடத்தில் கூடுதல் ஏவுதளங்களை அமைப்பதில் பல பிரச்னைகள் உண்டு. ஸ்ரீஹரிகோட்டா புயல் பாதிப்பு அதிகமுள்ள பகுதி என்பதால், வருடத்துக்கு 2 மாதங்கள் பணிகள் நடப்பதில்லை. அதனால் உற்பத்தித்திறன் குறைகிறது. எதிர்பாராத விதமாக ஒரு ஏவுதளத்தில் விபத்துகள் நடந்தால் மற்ற ராக்கெட் தளங்களும் பாதிக்கப்படும். இயற்கைச் சீற்றங்களாலும், அந்நிய சக்திகளாலும் ஆபத்து வரும்போது ஒட்டுமொத்த தொழில்நுட்பமும் சிதைய வாய்ப்புண்டு...’’ என்கிறார் மனோகரன்.

ஏன் குலசேகரப்பட்டினம் புறக்கணிக்கப்படுகிறது..?
‘‘இதில் பல்வேறு அரசியல் உண்டு. கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களின் கைதான் இஸ்ரோவில் ஓங்கியிருக்கிறது. ‘எனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவனுக்குக் கிடைக்கக்கூடாது’ என்ற மனநிலையில் சிலர் செயல்படுகிறார்கள். கேரளாவிலும், ஆந்திராவிலும் காங்கிரஸ் ஆட்சி நடப்பது சாதகமாக இருக்கிறது. ராக்கெட் தயாரிப்பில் 60% வேலைகள் தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரியில்தான் நடக்கிறது. ஆனால் அதற்கான ஆளெடுப்பு பணிகள் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதனால் குறிப்பிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்தவர்களே வேலைக்கு வருகிறார்கள்.

புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவெடுத்த உடனேயே அவசரக் கோலத்தில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 300 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி விட்டார்கள். தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, பேராசிரியர் நாராயணா தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார்கள். ‘2013 பிப்ரவரிக்குள் இடத்தைத் தேர்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டது. அந்தக்குழுவில் இடம்பெற்ற 4 பேர் ஆந்திராகாரர்கள். 2 பேர் கேரளா. ஒருவர் மட்டுமே தமிழர். இந்தக்குழு குலசேகரப்பட்டினத்தை ஆய்வு செய்யவே இல்லை. இதுவரை அறிக்கை கொடுத்ததா என்றும் தெரியவில்லை. இடத் தேர்வுக்காக ஆந்திர முதல்வரை சந்தித்த இஸ்ரோ அதிகாரிகள், தமிழக முதல்வரை சந்திக்கவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் ஒருங்கிணைந்தால் மட்டுமே இதை மாற்ற முடியும்’’ என்கிறார் இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி.

இதுபற்றி மகேந்திரகிரி திரவ இயக்க திட்ட மையத்தின் ஓய்வுபெற்ற இயக்குனர் முத்துநாயகத்திடம் பேசினோம். ‘‘டாக்டர் டி.சீனிவாசன் பி.எஸ்.எல்.வி திட்ட இயக்குனராக இருந்தபோது குலசேகரப்பட்டினத்தில் ஆய்வு செய்தார். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. மகேந்திரகிரியில் திரவ இயக்க மையப்பணிகள் நடந்தாலும், திருவனந்தபுரத்தில் உள்ள வலிய
மலைதான் தலைமை மையமாக இருக்கிறது. ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பெங்களூருவில் இருக்கிறது. இன்னொரு மையம் அகமதாபாத்தில் இருக்கிறது. லாஞ்ச் பேட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கிறது. எல்லாம் பாலிஸியைப் பொறுத்தது. இதுபற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை’’ என்கிறார் முத்துநாயகம்.

பிற மாநிலங்கள் விரட்டியடிக்கிற அணு உலைகளையும், நியூட்ரினோ தொழிற்சாலையையும், அரிய மணல் ஆலையையும் தமிழகத்துக்கு அனுப்புகிறார்கள். ஆக்கபூர்வமான ராக்கெட் ஏவுதளம் மட்டும் தமிழகத்திற்கு இல்லை. தமிழகத்தை கழிவு அறையாக மாற்ற முனைகிற மனோபாவமே இதன்மூலம் வெளிப்படுகிறது. 
- வெ.நீலகண்டன்


ராக்கெட் ஏவுதளம் வந்தால்..!

*   நேரடியாக 4000 பேருக்கும், மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கும் வேலை கிடைக்கும்.
*   அதிகபட்சம் 3 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் வரும். அவற்றின் மூலம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், சுமார் 1 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
*   திரவ உந்துவிசை கல்வி நிறுவனம் உருவாக்கப்படும். இதன்மூலம் தமிழகத்திலிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் உருவாக வாய்ப்புண்டு. 
*   ரயில் வசதிகள் மேம்படுத்தப்படும். சாலைகள் விரிவாக்கப்படும். தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்.
*   கேந்திரிய வித்யாலயா மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள்
உருவாகும்.
*   பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.