தோல் தானம் 30 லட்சம் உயிரைக் காப்பாற்றும்!சென்னை மருத்துவரின் புது முயற்சி

ரத்த தானமும் மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் செய்யும் உறுப்பு தானமும்தான் உயிர் காக்கும் என்றில்லை. இறந்த பிறகு செய்யும் தோல் தானமும் மிக மிக இன்றியமையாதது. ரத்த தானம் போலவே சாவின் விளிம்பில் இருக்கும் பலரையும் தோல் தானம் காப்பாற்றியிருக்கிறது!’’  அக்கறை ததும்பப் பேசுகிறார் டாக்டர் ஜி.பாலகிருஷ்ணன்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் முன்னாள் பிளாஸ்டிக் சர்ஜன். ரத்த வங்கியைப் போல, மனிதர்களின் தோலை சேமித்து வைக்கும் தென்னிந்தியாவின் முதல் தோல் வங்கியை சென்னையில் துவங்கியவர்!

‘‘மரணங்களிலேயே மிகக் கொடுமையானது, தீக்காயங்களில் சிக்கி இறப்பவர்களுக்கு நிகழ்வது! மரணத்தின் வலியை அவர்களைப் போல யாரும் அனுபவிப்பதில்லை. அணு அணுவாக வலியை உணர்ந்து உயிரை விட வேண்டி யிருக்கும். அவர்களின் வெளிப்புறத் தோல் தீயால் பொசுக்கப்பட்டிருக்கும். அதற்கு மருந்து போட்டு காத்திருந்தால், நிச்சயம் புதிய தோல் முளைத்து, காயம் ஆறும். ஆனால், அந்த அவகாசத்தை இயற்கை தராது. கிருமிகள் அந்தக் காயங்களில் தொற்றிக்கொண்டு திசுக்களை அழுகச் செய்யும்.

காயமும் ஆறாது; வலியும் குறையாது. இந்தியாவில் மட்டும் ஒரு வருடத்தில் 60 லட்சம் பேர் பல்வேறு தீக்காயங்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 30 லட்சம் பேர் இறந்துபோகிறார்கள். அதாவது, தீக்காயம் படுபவர்களில் பாதிப் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். இவர்களில் பலரும் இறப்பதற்கு காயத்தில் ஏற்படும் கிருமித் தொற்றுகளே காரணம். இது மாதிரியான கோர மரணங்களை தோல் தானம் மூலம் தவிர்க்கலாம்’’ என்கிற பாலகிருஷ்ணன், அந்த சிகிச்சையையும் விளக்குகிறார்.

‘‘தீக்காயங்களால் 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் வரை பாதிக்கப்படும் நபரைக் காப்பாற்றுவது சுலபம். விலங்குகளின் தோல்களிலிருந்து செயற்கையாகத் தயாரிக்கப்படும் ‘கொல்லாஜன்’ எனும் ஒரு வகை தோலைப் பொருத்தி அவர்களுக்கு சிகிச்சை தரலாம். அது தவிர, அதே நோயாளியின் உடலில் வேறு பாகங்களில் உள்ள தோலை எடுத்து, காயம்பட்ட இடத்தில் ஒட்ட வைக்கலாம். ஆனால், 40 சதவீதத்துக்கும் மேல் தீயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு இந்த சிகிச்சைகள் பலனளிக்காது.

அவர் உடலிலிருந்து எடுத்துப் பயன்படுத்த, பாதிக்கப்படாத தோல் பகுதியும் இருக்காது. தோலின் ஆழம் வரை பொசுங்கிப் போவதால் செயற்கைத் தோலும் பொருந்தி வளராது. உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான புரதச் சத்துக்கள், இப்படிப்பட்ட நோயாளிகளின் தீக்காயங்கள் வழியே தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கும்.

இதனால் இதயம், மூச்சு, நரம்புக் கோளாறுகள் என ஏகப்பட்ட பிரச்னைகளை அவர் சந்திக்கலாம். உயிரையும் இழக்கலாம். ‘உடனடியாக காயத்தை மூட வேண்டும். அவரை உயிர் பிழைக்க வைக்க வேண்டும்’ என்றால் அதற்கு ஒரே வழி தோல் தானம்தான்’’ என்கிறவர், தற்போது தோல் தானம் பற்றிய விழிப்புணர்வையும் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறார்.

‘‘ஒருவர் இறந்து 6 மணி நேரம் வரை அவரது தோலை தானமாகப் பெற முடியும். இருந்தாலும், ‘தோலை உரிச்சி எடுக்க மனசு வருமா’ எனப் பலரும் யோசிக்கிறார்கள். தோல் தானம் என்பது அப்படி அல்ல.

ஒருவரின் காலில் உள்ள தோலை மட்டும்தான் இப்போதைக்கு நாங்கள் தானமாகப் பெறுகிறோம். அதுவும் மனிதத் தோலில் உள்ள எட்டு அடுக்குகளில் முதல் அடுக்கு மட்டுமே மிக மெல்லியதாக இழைத்து எடுக்கப்படும். எனவே, இறந்தவரின் உடலுக்கு எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது. தானம் கொடுக்க நினைப்பவர்கள், இந்த இலவச எண்ணில் தொடர்புகொள்ளலாம்: 1800 425 0393.

இப்படி தானமாகப் பெறப்படும் தோலை அப்படியே தீக்காய நோயாளிக்கு பயன்படுத்துவதில்லை. அதைப் பல்வேறு ரசாயனங்களில் பதப்படுத்தி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.

அதற்குத்தான் தோல் வங்கி தேவைப்படுகிறது. தோலை தானமாகக் கொடுக்க ஒருவரின் வயது, நிறம், பிளட் குரூப், பாலினம் என எதுவுமே முக்கியமல்ல. கல்லீரல் நோய், எச்.ஐ.வி, கேன்சர் போன்ற பிரச்னைகளால் இறந்திருக்கக் கூடாது. அவ்வளவுதான். தானம் பெற்ற தோலை 5 வருடத்துக்கு பாதுகாத்துப் பயன்படுத்த தோல் வங்கிகளில் வசதி உள்ளது.

ஒரு காலத்தில் ரத்த தானத்துக்குக்கூட பயமும் அவநம்பிக்கையும் இருந்தது. ஆனால், இன்று கிட்னி, இதயம், கல்லீரல் என மூளை வரைக்கும் தானம் தர முன்வருகிறார்கள். இங்கே தீக்காயங்களில் பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் குடிசைகளில் வாழ்பவர்கள், பட்டாசு ஆலைகளில் பணியாற்றுபவர்கள். மொத்தத்தில் சாமான்யர்கள்.

அவர்களின் உயிருக்காக இதைச் செய்கிறோம் என்று நினைத்தால், நம்மவர்கள் தானத்தை துணிந்து செய்வார்கள்!’’ என்று நம்பிக்கை தொனிக்கப் பேசுகிறார் பாலகிருஷ்ணன்.ஒருவர் இறந்து 6 மணி நேரம் வரை அவரது தோலை தானமாகப் பெறலாம். இருந்தாலும், ‘தோலை உரிச்சி எடுக்க மனசு வருமா’ என பலரும் யோசிக்கிறார்கள்.

டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்