சகுனியின் தாயம்



‘‘வேண்டாம்...’’ - ஏதோ சொல்ல முற்பட்ட சோழ மன்னரை தடுத்தார் சீன சக்கரவர்த்தி.‘‘ஏன்?’’ - கேட்ட பெருநற்கிள்ளியின் முகம் சிவந்தது.‘‘நமது கட்டளைக்கு மதிப்பில்லாதபோது அமைதியாக இருப்பதே சாலச் சிறந்தது...’’‘‘மதிப்பா? இது என் நாடு. புகார் நான் ஆளும் பிரதேசம். எனது ஆணைக்கு எப்படி இங்கு மதிப்பில்லாமல் போகும்..?’’‘‘அப்படியெனில் இதுவரை ஏன் இளமாறனையும், யவன ராணியையும் நம்மால் பிடிக்க முடியவில்லை..?’’

மிக மெதுவாகத்தான் இந்த வினாவை சீன சக்கரவர்த்தி தொடுத்தார். ஆனால், நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் துடித்தார் சோழ மன்னர். ‘‘எனது வினா உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்...’’ - சொன்ன சீன சக்கரவர்த்தி அருகில் வந்தார். சோழ மன்னரை ஆறுதலாக அணைத்தார். அந்த அணைப்பே பெருநற்கிள்ளிக்கு நெருப்பாக தகித்தது. சீற்றமாகவும் வெளிப்பட்டது. ‘‘இந்த முறை அவர்களைப் பிடித்துக் காட்டுகிறேன்...’’‘‘சற்றுப் பொறுங்கள். இந்த விஷயத்தில் நாம் பொறுமையாக இருப்பது அவசியம்...’’

‘‘அதற்குள் எல்லாம் குடிமுழுகிவிடும்...’’
‘‘அப்படி ஏதும் நடக்காது. என்னை நம்புங்கள். உங்கள் படைபலத்தையோ சோழர்களின் வீரத்தையோ நான் குறைத்து மதிப்பிடவில்லை...’’
‘‘பிறகு ஏன் தடுக்கிறீர்கள்?’’

‘‘இதில் செலவழிக்கும் நேரத்தை நாம் வேறு விஷயங்களில் பயன்படுத்தலாம் என்கிறேன்...’’
‘‘இதை விட வேறு முக்கியமான செயல் இருக்கிறதா என்ன?’’
எந்த பதிலையும் சொல்லாமல் சோழ மன்னரையே உற்றுப் பார்த்தார் சீன சக்கரவர்த்தி.
‘‘ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? இளமாறனும், யவன ராணியும் எடுத்துச் சென்றிருப்பது சாதாரண பொருளை அல்ல... நமது யுத்த தந்திரத்தை...’’
‘‘எனவே அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படித்தானே?’’
‘‘ஆம்...’’

‘‘சரி. அவர்கள் இருவரும் கைதாகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம்... பிறகு என்ன செய்வதாக உத்தேசம்..?’’

‘‘...’’‘‘எனக்கு பித்துப் பிடிக்கவில்லை சோழ மன்னரே... தெளிவாகத்தான் இருக்கிறேன். அதனால்தான் வினாவையும் தொடுக்கிறேன். நமது வீரர்களிடம் இளமாறனும், யவன ராணியும் சிக்கிய பிறகு என்ன செய்வீர்கள்? அவர்களை சிறையில் அடைப்பீர்கள். அவர்கள் எடுத்துச் சென்ற நமது போர்த் தந்திரம் மீண்டும் நம் கைக்கு வந்துவிடும். பிறகு..?’’
சோழ மன்னர் நிமிர்ந்து சீன சக்கரவர்த்தியை ஏறிட்டார்.

‘‘பாண்டியர்கள் மீது போர் தொடுப்போம். திட்டமிட்டபடி கொற்கை துறைமுகத்தை நம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவோம்... என்று என்னால் இதற்கு விடை அளிக்க முடியும். ஆனால், உங்கள் மனதில் இருப்பது இது மட்டுமல்ல என்று புரிகிறது. அதனால்தான் சுற்றி வளைத்துப் பேசுகிறீர்கள். இதற்கு மேலும் நாசியைத் தொட கழுத்தைச் சுற்றி கைகளை கொண்டு செல்ல வேண்டாம். நேரடியாகவே உரையாடலாம். என்ன சொல்ல வருகிறீர்கள்?’’
‘‘இளமாறனையும், யவன ராணியையும் பிடிக்க வீரர்களை அனுப்ப வேண்டாம்...’’
‘‘சரி...’’

‘‘அதனால் பயனேதும் இல்லை. என்னதான் புகார் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும், காவிரிப்பூம்பட்டினத்துக்குள் என்று இளமாறன் நுழைந்தானோ அன்று முதல் அவன்தான் இந்த நகரத்தை நிர்வகித்து வருகிறான்...’’சோழ மன்னரின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்..?’’ ‘‘தொடர்ச்சியாக அவனால் தப்பிக்கவும், நினைத்த நேரத்துக்கு நினைத்த இடத்துக்கு செல்ல முடிவதையும் வைத்து...’’
‘‘ம்...’’

‘‘உண்மையில் அவன் இழுத்த இழுப்புக்குத்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். நம்மை வைத்து அவன் பகடையாட்டம் ஆடுகிறான்...’’‘‘ம்...’’‘‘இதற்கெல்லாம் அவனுக்கு இங்கிருக்கும் யாரோ உதவுகிறார்கள்...’’‘‘அவர் யாரென்று எனக்குத் தெரியும். அதங்கோட்டாசான். அவரை சந்திக்க நேர்ந்ததால்தான் நான் இங்கு வரவே தாமதமானது...’’
‘‘நீங்களாக அவரை சந்திக்கச் சென்றீர்களா?’’

‘‘இல்லை...’’ சட்டென்று பதிலளித்த சோழ மன்னர் மேற்கொண்டு வார்த்தைகளை விட சங்கடப்பட்டார்.அது சீன சக்கரவர்த்திக்கும் புரிந்தது. எனவே பொதுவாகவே உரையாடலைத் தொடர்ந்தார். ‘‘எனில், உங்களை வலுக்கட்டாயமாக வரவழைத்து அதங்கோட்டாசான் பேசியிருக்கிறார்...’’
‘‘ம்...’’

‘‘என்றாலும் உங்களை பிணைக்கைதியாக அவர் பிடிக்கவில்லை. உடனடியாக இங்கு நீங்கள் வராமல் தடுத்திருக்கிறார். அதாவது காலதாமதப்படுத்தி
யிருக்கிறார்...’’
‘‘ஆமாம்...’’

‘‘அதற்குள் இளமாறனும், யவன ராணியும் இங்கு வந்துவிட்டார்கள்...’’
‘‘திட்டமிட்டபடி நம் போர்த் தந்திரத்தை கைப்பற்றிவிட்டார்கள்...’’
‘‘இல்லை சோழ மன்னரே... இந்த இடத்தில்தான் நாம் தவறு செய்கிறோம்...’’
‘‘தவறா?’’

‘‘ம். இதையே தவறான திசையில் நம்மை இளமாறன் செலுத்திக் கொண்டிருக்கிறான் என்றும் சொல்லலாம்...’’‘‘என்ன... அந்த பாண்டிய வீரனா நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறான்..?’’

‘‘அப்படித்தான் தெரிகிறது. அவன் உருட்டும் தாயத்துக்கு ஏற்பவே நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்...’’ என்றவர் சிறிது இடைவெளிக்குப் பின் தொடர்ந்தார். ‘‘எதுவெல்லாம் நடந்ததோ அவையெல்லாம் உண்மையில்லை. வேறு ஏதோ ஒன்று உள்ளூர நடக்கிறது. அது நம் கவனத்துக்கு வராதபடி நம்மை திசை திருப்புகிறான்... நம் ஆற்றலை வீணடிக்கிறான். தமிழக பழமொழியில் சொல்வதென்றால் ‘கண்ணால் நாம் பார்த்தவை அனைத்தும் பொய்’...’’
‘‘எதை வைத்து இந்த முடிவுக்கு வந்தீர்கள்?’’

‘‘இதுவரை நடந்ததை வைத்து. சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள். அவனை துரத்துவதைத் தவிர நாம் வேறு எந்தப் பணியையும் கடந்த சில நாட்களாகச் செய்யவில்லை. தவிர...’’‘‘தவிர?’’‘‘இன்னொரு விஷயமும் தொண்டைக்குள் சிக்கிய முள்ளாக உறுத்துகிறது...’’
‘‘அது என்ன?’’

‘‘ஒற்றர்கள்...’’ நிறுத்திய சீன சக்கரவர்த்தி, தன் தாடையைத் தடவியபடி கண்கள் இடுங்க பேச ஆரம்பித்தார்.‘‘யுத்தத்துக்கான முன்னேற்பாடுகளில் நாம் இறங்கியிருக்கிறோம். இதற்கு நமக்கு உதவ வேண்டியவர்கள் ஒற்றர்கள்தான். சொல்லப் போனால் ஒற்று அறிந்து பெறப்படும் தகவல்களை வைத்துத்தான் ஒவ்வொரு அரசும் தன் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது. உள்நாட்டு - வெளிநாட்டு நிலவரங்களை அவர்கள் வழியாகவே நாம் பெறுகிறோம்...’’
‘‘மறுக்கவில்லை. சீன, சேர, பாண்டிய ஒற்றர்கள் கூட புகாரில் இருக்கலாம். கூட என்ன கூட... இருக்கவே செய்கிறார்கள். இதற்கும்...’’

‘‘நாம் பேசுவதற்கும் தொடர்பிருக்கிறது சோழ மன்னரே... நினைத்துப் பாருங்கள்... பாண்டிய நாட்டில் இப்போது என்ன நடக்கிறது? நோய்வாய்ப்பட்டிருக்கும் பாண்டிய மன்னர் என்ன ஆனார்? உங்களுக்கு ஏதும் தெரியுமா?’’

‘‘தெரியாது...’’
‘‘எனக்கும் தெரியாது. அநேகமாக சேர மன்னரின் நிலையும் இதுவாகத்தான் இருக்கும். இப்போது புரிகிறதா என்ன நடக்கிறது என்று...’’சீன சக்கரவர்த்தியின் ஒவ்வொரு சொல்லும் பெருநற்கிள்ளிக்குள் பிரளயத்தை ஏற்படுத்தின.‘‘அதேதான் சோழ மன்னரே... ஒற்றர்கள் அனைவரும் புகார் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் இதுவரை நம்மை அவர்கள் சந்திக்கவும் இல்லை... தகவல்களையும் சொல்லவில்லை. இது பாண்டியர்களின் வேலைதான். குறிப்பாக இளமாறனின் திட்டம் இது...’’

‘‘இப்போது புரிகிறதா சீன சக்கரவர்த்தி நமது யுத்த தந்திரம் எவ்வளவு வலுவானது என்று? அதனால்தான் அதைக் கைப்பற்ற இளமாறன் இந்தளவுக்கு மெனக்கெட்டிருக்கிறான். இதற்காகத்தான் அவர்களை தடுத்து நிறுத்த முயல்கிறேன்... வீரர்களுக்கு கட்டளை பிறப்பிக்க முற்பட்டேன்...’’‘‘இப்படி நீங்கள் செய்வதும் பாண்டியர்கள் கையால் நாம் மடிவதும் ஒன்றுதான் சோழ மன்னரே...’’
‘‘சீன சக்கரவர்த்தி...’’

‘‘ஆத்திரம் வேண்டாம் அரசே... எனக்கென்னவோ நம் யுத்த தந்திரத்தைக் கைப்பற்றுவது மட்டுமே இளமாறனின் இலக்காக இருக்காது என்று தோன்றுகிறது. இதை முன்பே உங்களிடம் சொல்லியிருக்கிறேன்... இப்போதும் அதையே அழுத்தம்திருத்தமாக சொல்கிறேன். வேறு ஏதோ ஒன்றை எடுக்கத்தான் புகாருக்கு அவன் வந்திருக்கிறான்... அதற்கு யவன ராணி பூரணமாக உதவுகிறாள்... அது என்ன?’’எவ்வளவு யோசித்தும் சோழ மன்னருக்கோ, சீன சக்கரவர்த்திக்கோ விடையேதும் கிடைக்கவில்லை.

ஆனால் -பதற்றத்துடன் அங்கு வந்து சேர்ந்த சேரமன்னர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வேறொரு தகவலைச் சொன்னார்.‘‘பாண்டிய மன்னர் சித்திரமாடத்து துஞ்சிய நன்மாறன் காலமாகிவிட்டார்...’’‘‘எப்போது?’’ பெருநற்கிள்ளி குரலில் அதிர்ச்சி வெளிப்பட்டது.‘‘அரை திங்களுக்கு முன்பு...’’‘‘இதெப்படி நமக்கு தெரியாமல் போயிற்று?’’

‘‘அதுதான் எனக்கும் தெரியவில்லை. நம் ஒற்றர்களுக்கு எப்படி இது தெரியாமல் போகும்... ஏன் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவலை நமக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை... ஒரே புதிராக இருக்கிறது...’’‘‘இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ பளிச்சென்று பதில் சொன்னார் சேர மன்னர்.அதைக் கேட்டு பெருநற்கிள்ளியும், சீன சக்கரவர்த்தியும் ஒருசேர அதிர்ந்தார்கள்.

அதே நேரம் -இளமாறனின் கைகளில் இருந்த வெண்பட்டின் மீதே அங்கிருந்தவர்களின் பார்வை பதிந்திருந்தது. அதில் முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆட்டின் உருவம் வரையப்பட்டிருந்தது.ரகசிய இடத்தில் குழுமியிருந்த அவர்கள் அந்த வரைபடத்தையும் இளமாறனையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.‘‘புரிகிறதல்லவா? முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட ஆட்டின் வடிவில்தான் படைகள் நகரப் போகின்றன. சக்கர வியூகம், பத்ம வியூகம் போல் இதுவும் வியூகம்தான்...’’

‘‘சரி இதற்கு மாற்றாக நமது வியூகம் எப்படி இருக்கும்?’’கேட்ட தளபதியை நோக்கி இளமாறன் புன்னகைத்தான். ‘‘இது எதிரிகளின் போர் வியூகம் அல்ல...’’‘‘பிறகு?’’‘‘நமது வியூகம். பாண்டியப் படைகள் இந்த வியூகத்தின் அடிப்படையில்தான் நகரப் போகின்றன... எதிரிகளைத் தாக்கப் போகின்றன...’’

சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்தவன், நிதானமாக அந்த வார்த்தையைச் சொன்னான் -‘‘புரிகிறதல்லவா? ஆடுதானே என அவர்கள் அலட்சியமாக நினைக்கிறார்கள்... ஆனால், அந்த ஆட்டை வைத்துத்தான் புலியை அடிக்கப் போகிறோம்... அதுவும் எந்தப் புலி சோழ நாட்டின் கொடியில் பறக்கிறதோ... அந்தப் புலியை உருத் தெரியாமல் வீழ்த்தப் போகிறோம்...’’
‘‘இந்தச் செயலைச் செய்ய ஆட்டினால் முடியுமா?’’
‘‘முடியும். ஓநாய் நமக்குத் துணையிருக்கிறது...’’

‘‘ஓநாயா?’’அதுவரை அமைதியாக இருந்த யவன ராணி வாய் திறந்தாள்.
‘‘ஆம். ஓநாய் குலச் சின்னமாகத் திகழும் சீன சக்கரவர்த்தி!’’
‘‘தோழர்... தோழர்...’’

வாசலில் குரல் கேட்டதும் கதிர் உஷாரானான். தமிழரசனும், ரங்கராஜனும், தேன்மொழியும் சட்டென்று உள் அறைக்கு நகர்ந்தார்கள்.
கண் பார்வையில் இருந்து அவர்கள் மறைந்ததும் மடித்துக் கட்டிய தன் லுங்கியைத் தளர்த்தினான். கொடியில் தொங்கிக் கொண்டிருந்த துண்டை எடுத்து வெற்று மார்பில் போர்த்திக் கொண்டான்.
‘‘யாரு?’’‘‘நான்தான் தோழர்... வள்ளியப்பன்...’’

‘‘ஏன் வெளிலயே நிக்கறீங்க? உள்ள வர வேண்டியதுதானே?’’ என்றபடி கதிர் வாசலுக்குச் சென்றான்.
‘‘அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை தோழர்...’’ வள்ளியப்பனின் குரலில் பதற்றம் தெரிந்தது.
‘‘என்ன விஷயம் தோழர்?’’

‘‘இளவரசனையும், திவ்யாவையும் கொன்னுட்டாங்க...’’‘‘என்னது?’’ கதிரின் குரலில் வெளிப்பட்ட அதிர்ச்சி, உள்ளறையில் இருந்த மற்ற மூவரின் முகத்திலும் எதிரொலித்தது.
‘‘ஆமா தோழர். யாரோ அவங்க ரெண்டு பேரையும் கண்டம் துண்டமா வெட்டி ரயில்வே டிராக்குல வீசியிருக்காங்க...’’ வள்ளியப்பனின் குரல் நடுங்கியது.
‘‘இருங்க சட்டையை மாட்டிட்டு வரேன்...’’

விரைந்து உள்ளே வந்தவனின் கைகளில் தமிழரசன் சட்டையைத் திணித்தார். ‘‘நீங்க முன்னாடி போங்க. நாங்க மூணு பேரும் பின்னாடியே வர்றோம்...’’
‘‘சரி தோழர்...’’ என்றபடி கதிர் வெளியேறிய அதே நேரம் -‘‘யானைத் தந்தங்களை இப்படி புடிச்சிட்டீங்களே...’’ என தங்கப்பன் காட்டில் முணுமுணுத்தான்.

‘‘வந்ததுக்கு ஏதாவது கணக்கு காட்ட வேண்டாமா? இல்லைன்னா கவர்மெண்ட்டுக்கு யார் பதில் சொல்றது?’’ ஸ்காட் வில்லியம்ஸின் தோளில் கை போட்டபடி வால்டர் ஏகாம்பரம் கேட்டார்.
‘‘அதுக்கு? இதனோட மதிப்பு என்னன்னு தெரியுமா?’’‘‘விடு, இதுவரை நீ சம்பாதிச்சதுல இது ஒரு துளிதானே?’’

‘‘சும்மா மத்தவங்க மாதிரியே நீங்களும் சொல்லாதீங்க... தந்தம் மூலமா சம்பாதிக்கறது நானில்லை...’’‘‘ம்ஹும். இதுக்கு மேல நாங்க இங்க இருந்தா நீ எல்லாரையும் போட்டுக் கொடுத்துடுவ... நாங்க கிளம்பறோம்... மினிஸ்டர் கிட்ட நான் சொல்லிக்கறேன். சார், நீங்க வாங்க... நாம போகலாம்...’’
‘‘தேங்க்ஸ் தங்கப்பன்...’’ ஸ்காட் வில்லியம்ஸ் கை குலுக்கினான்.

‘‘ம்... ம்...’’ பதிலுக்கு கை குலுக்கிய தங்கப்பன் காட்டுக்குள் மறைந்தான். அவன் மனதில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வே அந்த நேரத்தில் படமாக விரிந்தது. என்றேனும் ஒரு நாள் தனக்கும் அது போன்ற இறப்புத்தான் நிகழும் என்பதை நினைக்கும்போதே அவன் உடல் நடுங்கியது.‘எதிரிகளைக் கூட நம்பிடலாம்... கூட்டாளிகளைத்தான் எப்பவும் நம்பக் கூடாது...’
சற்றுத் தொலைவில் நின்றிருந்த - முழங்கை அளவுக்கு கொம்புகளைக் கொண்ட - ஆடு, அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.

‘‘24 மணி நேரக் கண்காணிப்புக்குப்
பிறகுதான் அட்மிட் ஆகறதைப் பத்தி
யோசிக்க முடியும்னு அந்த பேஷன்ட் சொல்றார், டாக்டர்!’’
‘‘யாரைக் கண்காணிக்கணுமாம்?’’
‘‘நர்ஸ்களை!’’

‘‘ராப்பிச்சை நான் போட்டதை சாப்பிட்டுட்டு ‘தெய்வம்’னு சொல்லிட்டுப் போறானே... என்னையா பாராட்டுறான்?’’
‘‘ம்ஹும்! உன் சமையலை தினமும் சாப்பிட்டுக்கிட்டு இருக்கற என்னைச் சொல்றான்!’’

‘‘என் அரசியல் எதிரிகளுக்குக் கூட இப்படி ஒரு நிலைமை வேணாம்னு தலைவர் தினமும் காலையில புலம்பறாரே... எதுக்கு?’’
‘‘அவர் மனைவி கொடுக்கற காபியைப் பற்றித்தான் சொல்றார்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

(தொடரும்)

கே.என்.சிவராமன்