நடைவெளிப் பயணம்



மறைந்தவர்கள் மத்தியில்

வருடம் முடியப் போகும் நேரத்தில் பல கடந்த கால நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. முக்கியமாக, இறந்தவர்கள் பற்றி! அப்போது நம் செயல்களின் குறைபாடுகள் வருத்துகின்றன.
உயிரோடு இருக்கும் நாளில் அந்த மனிதரைப் பார்க்கவில்லையே? ‘மழை பெய்து கொண்டிருக்கிறது, நாளை பார்க்கலாம்’ என்று ஒத்திப்போட்டது வருத்தத்தைத் தருகிறது. வெகு எளிதாகச் சொல்லிவிடலாம், இப்போது வருந்தி என்ன பயன். ஆனால் நம் நினைவுகள் எல்லாம் பயனுக்காகத்தான் செயல்படுகின்றனவா?

நோய்வாய்ப்பட்டிருந்த தி.ஜானகிராமனைப் பார்க்க நானும் ராஜரங்கன் என்ற எழுத்தாளரும் ஒருநாள் கிளம்பினோம். உண்மையில் நாங்கள் தனித்தனியாகப் பார்த்திருக்கலாம். ஆனால் ராஜரங்கன் ‘இருவரும் சேர்ந்து போய்ப் பார்க்கலாம்’ என்று உறுதியாகச் சொல்லியிருந்ததால் நான் அவருக்காகக் காத்திருந்தேன். அவர் ஜானகிராமனுக்கு என்னை விட அந்தரங்கமானவர். ஜானகிராமனின் நில விற்பனைக்கு அவர்தான் பொறுப்பேற்றிருந்தார். ராஜரங்கன் அப்போது லயோலா கல்லூரியில் கணிதப் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

 அவருக்கு நில விற்பனை போன்ற விஷயங்களில் பெரிய கெட்டிக்காரத்தனம் இருந்ததாக நான் நினைக்க வில்லை. ஆனால் ஜானகிராமன் நினைத்திருந்தார். அவர் ‘சேர்ந்து போகலாம்’ என்று கூறியிருந்ததால் நான் ஞாயிற்றுக்கிழமைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. என் வீட்டிலிருந்து பேருந்து பிடிக்க அதிக தூரம் நடக்கவேண்டியதில்லை. ஆனால் ஜானகிராமனைச் சேர்த்திருந்த ஆஸ்பத்திரிக்கு நான் அதுவரை போனதில்லை. அதற்கு நேராகப் பேருந்து கிடைக்காது, நிறைய நடக்கவேண்டும் என்று மட்டும் தெரிந்து வைத்திருந்தேன்.

அன்று ராஜரங்கன் பகல் ஒரு மணிக்கு வந்தார். நான் உடனே கிளம்பத் தயாராக இருந்தேன். அவர் என் மனைவி, மகனுடன் பேச ஆரம்பித்தார். அப்புறம் டீ. நாங்கள் கிளம்பும்போது கிட்டத்தட்ட இரண்டு மணி. 5பி பேருந்து உடனே கிடைத்து விட்டது. ஐ.ஐ.டி நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். அன்று கடுமையான வெயில்.

நாங்கள் போகும் சாலை கிழக்கு - மேற்கு. ஆதலால் வெயில் முழுதையும் நாங்கள் கட்டாயம் தாங்கியாக வேண்டும். எனக்குக் கண் கூசியது. ராஜரங்கன் என்னைவிடப் பெரியவர். உடலும் பெரிது. அவர் மிகவும் சிரமப்பட்டார். அந்த நாளில் ஆட்டோ அமர்த்திக்கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றாது. ஆனால் ராஜரங்கனுக்குத் தோன்றியிருக்கலாம்.அவர் திடீரென்று, ‘‘நாளை பார்த்துக்கொள்வோமே’’ என்றார்.

‘‘உங்களுக்கு கிளாஸ் இல்லையா?’’
‘‘அரை நாள் லீவு போட்டு வரலாம்.’’

அந்த நாளில் லயோலா கல்லூரியில் அப்படியெல்லாம் லீவு போட முடியாது. சென்னைக் கல்லூரிகளில் மிகவும் கண்டிப்பு (Slaves of Loyola) என்பார்கள். கல்லூரி ஆசிரியர்கள் பலருக்கும் வசிப்பதற்காக கல்லூரியே வீடுகள் கொடுத்திருந்தது. ராஜரங்கனுக்கு விசேஷமான வீடு. ஊரெல்லாம் சொட்டுத் தண்ணீருக்குத் தவித்துக் கொண்டிருந்தபோது, லயோலா வீடுகளில் இருந்தவர்கள் தினம் வீட்டைக் கழுவி விடுவார்கள். தோட்டம் வைத்திருப்பார்கள். கார் இருந்தால் அதையும் தினம் தண்ணீர் விட்டுக் குளிப்பாட்டி விடுவார்கள். அந்தச் சூழ்நிலையில் ராஜரங்கன் போன்றவர்கள் அவ்வளவு எளிதாக விடுப்பு எடுக்க முடியுமா?

இரண்டு மூன்று தினங்கள் காத்திருந்துவிட்டு நானே அந்த ஆஸ்பத்திரிக்குப் போனேன். ‘‘சீக்கிரம் அவர் வீட்டுக்குப் போங்கள். உடலையாவது பார்க்கலாம்’’ என்றார்கள். வீட்டு வசதி வாரியம் ஜானகிராமனுக்கு திருவான்மியூரில் வீடு கொடுத்திருந்தது என்று மட்டும் தெரியும். ஆனால் எந்த மாதிரி வீடு, எங்கே இருக்கும் என்று தெரியாது.

 அன்று கைபேசிகள் கிடையாது. ராஜரங்கன் வீட்டில் தொலைபேசி உண்டு என்று தெரியும், ஆனால் எண் தெரியாது. நான் பேருந்தில் திருவான்மியூர் சென்று விசாரித்தேன். பயனில்லை. ஒரு தகவல் ஞாபகத்துக்கு வந்தது. ‘‘எழுத்தாளர் என்றாலும் அவர் ஆல் இண்டியா ரேடியோவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்’’ என்று விசாரித்தேன்.

ஒருவர், ‘‘நீங்கள் அந்த வீட்டு மாடியில் போய் விசாரியுங்கள்’’ என்றார். அதுதான் ஜானகிராமன் வீடு.எனக்கு அப்போது ‘ஃபிளாட்’ பற்றி அதிகம் பரிச்சயம் கிடையாது. ஜானகிராமனின் உடலைத் தரையில் கிடத்தியிருந்தார்கள். அப்போது குளிர்சாதனப் பிரேதப்பெட்டி கிடையாது. ஐஸ் கட்டிகள் வைத்திருப்பார்கள். அவை உருகித் தரையெல்லாம் ஈரப்படுத்திவிடும்.

எனக்கு மிகவும் துக்கமாக இருந்தது. அங்கே யாரையாவது துக்கம் விசாரிக்கக்கூட நகர முடியாமல் நெரிசல். நான்கைந்து பேர் கூட நிற்க இடமில்லை. தரையெல்லாம் தண்ணீர். அவர் மயிலாப்பூர் ராக்கியப்ப முதலித் தெருவில் இருந்தபோது நான் நூறு முறை அவர் வீட்டுக்குப் போயிருப்பேன். அவர் டெல்லி சென்ற பிறகு ஐந்தாறு முறை அவர் வீட்டுக்குப் போயிருப்பேன். விசாலமாக இருக்கும். இப்போது அவருடைய சொந்த வீட்டில் அவரை நான்கு பேர் சரியாக முகம் பார்க்க முடியாத நிலை.

பிறகு அவருடைய நண்பரும் நலம் விரும்பியுமான சிட்டி அவர்களைப் பார்த்தேன். கடைசி நாட்களில் ஜானகிராமன் சற்று அதிகப்படியாகவே சிரமப்பட்டிருக்கிறார். அவருடைய பெண் அவருடைய சம்மதமில்லாமல் மணம்புரிந்து கொண்டாள் என்று அவர் மிகவும் அதிர்ந்து போயிருந்தார். இது பல குடும்பங்களில் நடப்பதுதான். அவருடைய மனைவி யதார்த்தத்தை உணர்ந்து கொண்டிருந்தார். ‘அம்மா வந்தாள்’ போன்ற நாவல்கள் எழுதிய மனிதனுக்கு அது சாத்தியமில்லாமல் போய் விட்டது.

ராஜரங்கன் ஜானகிராமனை உயிரோடு இருக்கும்போது பார்த்தாரா என்று தெரியவில்லை. லயோலா பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓராண்டோ, இரண்டு ஆண்டுகளோ அவர் பிரிட்டிஷ் கயானாவுக்கு கலாசாரத் தூதராகப் போனார். திரும்பி வந்தவுடன் அவர் அந்த ஊரைப் பற்றி விவரித்தபோது சிரிப்பாகவும் இருந்தது, பயமாகவும் இருந்தது. பகல் இரண்டு மணிக்கு மேல் வெளியே தலையைக் காட்ட முடியாது. ஊர் அவ்வளவு பாதுகாப்பானது.

இன்று ராஜரங்கனும் போய் விட்டார். அவர் ஒரு குரு மாதிரி கருதிய தி.ஜ.ரங்கநாதனும் போய் விட்டார். நான் பல விஷயங்களுக்கு ராஜரங்கனுக்குக் கடமைப்பட்டவன். பள்ளிப்படிப்பு அதிகமில்லாவிட்டாலும் தி.ஜ.ர. ஓர் உயர் கணிதமேதை என்று எனக்குத் தெரியாது போயிருக்கும். சதுரங்க ஆட்டத்திலும் அவர் ஒரு மேதை. சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் உலகப்புகழ் பெற்றிருப்பார்.

ராஜரங்கனும் பரீக்ஷா குழுவில் ஓர் அங்கத்தினர். இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘போர்வை போர்த்திய உடல்கள்’ நாடகத்தில் அவர் ஒரு உடல். அவரை நானும் இன்னொருவரும் அகற்ற வேண்டும். சிரமப்பட்டு விட்டேன். ராஜரங்கன் பற்றி எனக்குப் பல மகிழ்ச்சி கரமான நினைவுகள் உண்டு. ஆனால் ஜானகிராமன் விஷயத்தில் மட்டும் ஆறாத வருத்தம்.இவ்வளவு எழுதியதற்குக் காரணம், சுவரில் தொங்கும் ஒரு நாட்காட்டி.

அதில் பதினைந்து எழுத்தாளர்கள் - ஜானகிராமன் உட்பட -  இருக்கிறார்கள். பதினைந்தில் பதின்மூன்று பேர் எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள். காலம் தாழ்த்தாமல் நான் அவர்கள் பற்றி எழுதிவிட வேண்டும். ஜானகிராமனின் உடலைத் தரையில் கிடத்தியிருந்தார்கள். அப்போது குளிர்சாதனப் பிரேதப்பெட்டி கிடையாது. ஐஸ் கட்டிகள் வைத்திருப்பார்கள். அவை உருகித் தரையெல்லாம் ஈரப்படுத்தி விடும்.

படிக்க

ஒரு காலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் அது வங்காளப் படைப்பாகவே இருக்கும். இந்தியிலிருந்து ப்ரேம்சந்த் மட்டும். இன்று நிறுவன வாய்ப்புகள் பெருகியிருப்பதால் நிறைய மொழிபெயர்ப்புகள் வெளிவருகின்றன.

குறிஞ்சிவேலன் ‘திசை எட்டும்’ என்று மொழிபெயர்ப்புகளே கொண்ட பத்திரிகை நடத்தி வருகிறார். இந்தியாவின் இருபத்தோரு மொழிகளில் பெண் எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை மொழிபெயர்த்து (அநேகமாக அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து) ‘சல்வடார் டாலி’ என்றொரு சிறுகதைத் தொகுப்பை அம்ருதா பதிப்பகம் சார்பில் திலகவதி வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

மிகச் சிறந்த தேர்வு. பல கதாசிரியர்கள் உலகப்புகழ் பெற்றவர்கள். எழுத்தாளர் திலகவதிக்குப் பெருமை சேர்க்கும் நூல். (சல்வடார் டாலி, விலை: ரூ.120/-, வெளியீடு: அம்ருதா பதிப்பகம், 1, கோவிந்த ராயல் நெஸ்ட், 12, மூன்றாவது பிரதான சாலை, சி.ஐ.டி. நகர் கிழக்கு, நந்தனம், சென்னை-600035. பேச: 94440 70000).

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்