ஐந்தும் மூன்றும் ஒன்பது...



மர்மத் தொடர் 18

‘‘ ‘அந்த ஆயிரம் பெயர்களில் அப்படியென்ன பெரிய ஒற்றுமையை நீங்கள் உணர்ந்தீர்கள்?’ என்று கேட்டேன். ‘ஈஸ்வரம் என்கிற சப்தம் அந்தப் பெயர்களில் பிரதானமாக இருந்தது. குறிப்பாக முருகேஸ்வரன், பாண்டீஸ்வரி, முனீஸ்வரி, முருகேசன் என்கிற பெயர்களைச் சொல்லலாம்.

நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். இந்தப் பெயர்ப் பட்டியலைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. இனி எதிர்காலத்தில் வரும் விபத்துச் செய்திகளைப் பார்த்துக்கூட இதை உணரலாம். இன்றுகூட ஒரு முருகேஸ்வரி குத்திக் கொல்லப்பட்டிருக்கிறாள்!’ என்றார். என்னால் அவர் கருத்தை மறுக்கவும் முடியவில்லை; ஏற்கவும் முடியவில்லை.

‘என்னடா இது, நியூமராலஜிக்குப் போய்விட்டானே என்று எண்ணாதீர்கள். பெயரின் சப்தத்துக்கும் ஒட்டுமொத்த வாழ்வுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. பொருந்தும் சப்தம், பொருந்தாத சப்தம் என்று அது இரண்டு விதமாக உள்ளது. பொருந்தாத சப்தத்ைத பொருந்தும் சப்தத்துக்கு மாற்றிக்கொள்ளும்போது வாழ்வும் மாறி
விடுகிறது.

என் ஆய்வில் பெரிய வெற்றி கண்ட பிரபலமானவர்களில் 70 சதவீதத்தினர் பெயர் மாற்றம் செய்து கொண்டவர்களே!’  என்று தொடர்ந்தார்.‘அப்படியே ஊர்ப் பெயருக்கும் அங்கு வாழ்கிறவர்களுக்கும்கூட தொடர்பு உள்ளது. எல்லோராலும் எல்லா ஊரிலும் சந்தோஷமாக வாழ்ந்துவிட முடியாது’ என்று சொல்லிக்கொண்டே வந்தவர், ‘இன்னும் 20 வருடங்களுக்குள் தமிழகத்தின் தலைநகர் தகுதியை சென்னை இழந்துவிடும். இயற்கையே இதைச் செய்து தரும். மதுரை தலைநகரமாக மாறியே தீரும்’ - என்று ஜோதிடர் போல பேசத் தொடங்கிவிட்டார்.

ஒரு ஆய்வாளன் நான்! மண்ணைத் தோண்டி பழம்பொருட்களைத் தேடுவது மட்டுமா என் பணி? காலத்தோடு கரைந்துபோன வரலாற்றை உள்ளது உள்ளபடி தெரிந்துகொள்ள முயல்வதும்தானே? கரைந்துபோன காலம் தன் அடையாளங்களை தடயங்களாகத்தான் விட்டுச் சென்றுள்ளது. அந்தத் தடயங்கள் பொன்னாக, பொருளாக, கல்லாக, மண்ணாக மட்டுமே இருக்கும் என்பது குறுகிய பார்வை.

கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செவிவழிக் கதைகள், ஊர்களுக்குள் காலம் காலமாய் நிலவி வரும் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள், ஊருக்கு ஊர் மாறுபடும் பழக்கவழக்கங்கள் என்று சகலத்திற்குள்ளும் வரலாறு புதைந்து கிடக்கிறது. அதை நொறுங்கி விடாதபடி, உண்மை கெடாதபடி தோண்டி எடுப்பதில்தான் வெற்றி உள்ளது. அதற்கான பயணத்தில் சப்த ஆராய்ச்சி செய்யும் இந்த நண்பர் போலவும் சிலர்...  ராமாயணத்தை ‘வான் கணிதம்’ என்று சொன்ன நண்பர் போல சிலர்... சொல் ஆய்வு, பொருள் ஆய்வு என்று செய்வோர் சிலர். இவர்களை எல்லாம் சந்திக்கத்தான் வேண்டியுள்ளது.

இவர்களில் ஒருவர் என்னிடம்  ‘மணிமேகலை வைத்திருந்த
அமுதசுரபி பொய்யா, மெய்யா’ என்று ஒரு கேள்வி எழுப்பினார்!’’
- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

வள்ளுவர் பாய்மீது ஒரு தவசியைப் போல அமர்ந்த நிலையில் தன்னையே மறந்திருந்தார். மணி நான்கைக் கடந்துவிட்ட நொடிகளில் அந்த வீட்டின் அனைவரது கைக்கடிகாரங்களிலும் ஒரு மணி நேரம்  கூடுதலாகவும் காட்டிக்கொண்டிருக்க, ‘‘அங்கிள்’’ என்று வள்ளுவரின் தியானத்தைக் கலைத்தாள் ப்ரியா.
அவர் தியானம் கலையவில்லை.

‘‘அங்கிள்’’ - என்று தோளைத் தொட்டு உசுப்ப வேறு செய்தாள். எல்லோரும் சற்று பயந்தார்கள். வள்ளுவர் சொன்ன மரணப் புள்ளிக்கு இன்னமும் இரண்டு நிமிடங்கள்கூட இல்லை. அவர் சொன்னபடியே சொல்வதானால் 4 மணி 2 நிமிடத்துக்கு மேல் மூன்று நிமிடத்துக்குள் எந்த நொடி வேண்டுமானாலும் அவர் உயிர் பிரியலாம்.அப்படி இருக்க, ப்ரியா தொட்டு அவர் அப்படியே சுருண்டு விழுந்துவிடப் போவதுபோல பத்மாசினி கற்பனை செய்து பார்த்தாள். ஆனால் அப்படியெல்லாம் ஆகவில்லை.

வள்ளுவர் கண் திறந்தார். ப்ரியா அவருக்கு  சுவர்க் கடிகாரத்தைக் காட்டினாள். அதில் மணி மிகச்சரியாக 5 மணி இரண்டு நிமிடம்!‘‘அங்கிள்... நீங்க சாகலை! நீங்க சொன்ன நேரம் கடந்து ஒரு மணி நேரமாகுது. உங்களுக்கு இனியும் எதுவும் ஆகாது’’ என்றாள்.வள்ளுவர் முகத்திலும் ஆச்சரிய சலனம்! ப்ரியாவை மட்டுமல்ல, அங்குள்ள அவ்வளவு பேரையும் ஆச்சரியத்தோடு பார்த்தார்.

‘‘உங்க ஜோசியக் கணக்கு உங்க வரையில பொய்யாகிடுச்சு அங்கிள். நீங்கதான் சொல்லியிருக்கீங்களே... ‘என் ஜோசியம் பலிச்சா 100 சதவீதம் பலிக்குது, இல்லைன்னா சுத்தமா பலிக்க மாட்டேங்குது’ன்னு... உங்க ஜோசியம் உங்க வரைல பலிக்கலைன்னுதான் எடுத்துக்கணும். என் நம்பிக்கை மட்டும் துளியும் வீண் போகலை’’  என்று முகமெல்லாம் ஜொலிக்க எல்லோரையும் பார்த்தாள்.

வள்ளுவரிடம் ஒரு ஆழ்ந்த அமைதி. திரும்ப கடிகாரத்தைப் பார்த்தார். அது, 5.03ஐயும் கடந்துவிட்டிருந்தது. நிஜமாலுமே அவரது மரணப்புள்ளியை அவர் கடந்துவிட்டார். உண்மையில் 4.03 என்ற அவர் கணித்த நேரத்தைக் கடந்து அவர் உயிரோடுதான் இருக்கிறார்.ஆனாலும் பத்மாசினியிடம் பதற்றம் அப்படியேதான் இருந்தது. கணபதி சுப்ரமணியமும் இந்த நேரம் மிகச்சரியான நேரம்தானா என்கிற சந்தேகத்தோடு டி.வியை ஆன் செய்து நியூஸ் சேனல் ஒன்றின் டிஜிட்டல் டைமரைப் பார்க்க, அதில் 4.05 ஆகியிருந்தது.

‘‘தாத்தா... நீங்க இனியும் சந்தேகப்படத் தேவையே இல்லை. இனி அங்கிளுக்கு ஒரு பிரச்னையுமில்லை. கடிகாரத்தை எல்லாம் நாம திருப்பி வைப்போம். அங்கிள் மூன்று மணிக்கே தியானத்துல உக்காந்துட்டதால நாம் ஒரு மணி நேரம் அட்வான்ஸ் பண்ணி வச்சது நமக்கு பெருசா  யூஸ் ஆகலை. இருந்தாலும் அஞ்சு மணி ஆயிடுச்சுனு அவரை நினைக்க வெச்சு, அந்த  மரண நினைப்பில் இருந்தும், அவர் உறுதியா நினைச்ச பொய்யான நம்பிக்கைல இருந்தும் அவரை மீட்டு எடுத்துட்டோம்’’ என்று ப்ரியா தொடர்ந்து உறுதியாகப் பேசினாள்.

வள்ளுவரும் அதை ஒப்புக்கொள்வதுபோல ஒரு ஆழ்ந்த பெருமூச்சு விட்டவராக... ‘‘அம்மாடி! நீ சொன்னதுதான் உண்மை. என் ஜோசியம் எனக்குப் பலிக்கலை. என் கணக்குல எங்க தப்பு விட்டேன்னு தெரியலையே..?’’ என்று கையைச் சொடுக்கினார்.‘‘அங்கிள்! உங்க கணக்கை நீங்க அப்புறமா போட்டுக்குங்க. நான் சொல்றேன், உங்களுக்கு நூறு வயசு...’’

‘‘வேண்டாம்மா... நூறு வயசெல்லாம் யாருமே இந்த மண்ணுல வாழ வேண்டாம். உடம்புல தெம்பில்லாம, கண் பார்வை மங்கிப் போய், காதும் செயலிழந்து, ஆயுசோட மட்டும் இருந்து என்ன புண்ணியம்? அதிகபட்சம் 75 வயது வாழ்ந்தா போதும்!’’‘‘சரி... இப்ப அந்தப் பேச்சையும் விடுங்க. இந்தக் காலப் பலகணி மேட்டருக்கு வருவோம். நீங்க என்ன செய்யப்போறீங்க?’’‘‘உன் கேள்வியே எனக்குப் புரியலியேம்மா...’’

‘‘இல்ல... இதன் மேல உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கா?’’‘‘ஓ... என் உயிர் போகலன்னதும், உடனே உனக்கு இதன் மேலயும் சந்தேகம் வந்துடுச்சா?’’
‘‘அப்படியெல்லாம் இல்லை... உங்க உயிர் பிரியும்னு காலப் பலகணி சொல்லலை. நீங்கதான் உங்க ஜோசியப்படி சொன்னீங்க... ஆனா, உங்க கருத்துப்படி இந்தப் பலகணியைத் தேடிக் கண்டுபிடிக்கறவங்கதான் 27 நாள்ல இறந்து போறாங்க.

அதன்படி பார்த்தா இன்னும் இங்க யாரும் அதுக்கு எந்த ஸ்டெப்பும் எடுக்கலை. நீங்ககூட இறந்து போயிடுவேன்னு நம்பினதாலதான் என் தாத்தாகிட்ட இந்தப் பெட்டியை ஒப்படைச்சீங்க. ஆனா, நீங்க இப்ப உயிரோட இருக்கீங்க. இந்த நிலைல, அந்தப் பெட்டியில் உள்ள குறிப்புகள்படி சோழி, காம்பஸ் எல்லாம் பயன்படுத்தி அந்தப் பலகணியைத் தேடப் போறீங்களா? இல்லை, தாத்தாகிட்ட ஒப்படைச்சது ஒப்படைச்சதுதானா?’’

ப்ரியா மிக பாய்ன்ட்டாகவே கேட்டாள். வள்ளுவர் சற்று யோசித்தவராக வாய் திறந்தார். ‘‘இந்த விஷயத்துல நான் அய்யாவோட முடிவுக்குக் கட்டுப்படறேன். அவர் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினா கண்டுபிடிக்கட்டும்... இல்ல, அது ஆத்துலயோ குளத்துலயோ விழட்டும்!’’‘‘இப்படிச் சொன்னா எப்படி?  ஒரு விஞ்ஞானப் புதையல்னு இந்த காலப் பலகணியை வர்ணிச்சுட்டு, ஆத்துல, குளத்துலகூட தூக்கிப் போடலாம்னா எப்படி?’’‘‘அம்மாடி... இது எங்க வீட்ல பல வருஷங்களா இருக்கறதே தெரியாம இருந்தது.

 அப்படி இருந்தவரை ஒரு குழப்பமும் இல்லை. எப்ப பரண் மேல இதைப் பார்த்து நான் வெளிய எடுத்தேனோ, அப்ப ஆரம்பமாச்சு குழப்பம்! அதுக்கு தோதா எனக்கு நானே ஆயுளைப் பரிசோதிச்சு, இன்னிக்கு இறந்துடுவேன்ங்கற கணக்கையும் போட்டேன். ‘சாகப் போற நேரத்துல இது கையில கிடைச்சிருக்கே... இப்ப எதுக்கு இது என் கைல கிடைக்கணும்?’ இப்படி யோசிச்சதாலதான் இதுல இருக்கற குறிப்புகள்படி நடந்தது, நடக்கப் போறதை எல்லாம் நான் வெளியே சொன்னேன். அது டெல்லி வரை தாக்கத்தை  ஏற்படுத்தும்னு சத்தியமா எதிர்பார்க்கலை.

‘‘ ‘காரணமில்லாம காரியமில்லை’ங்கறது ஒரு நல்ல சொலவடைம்மா... அதன்படி பார்த்தா, இந்த நொடி உங்க வீட்ல உக்காந்துக்கிட்டு இதைப் பத்தி எல்லாம் சிந்திச்சுப் பேசற வரை நான் வந்துட்டேன். அப்ப இதுக்கெல்லாமும் ஒரு சரியான காரணம் இருக்கணும்தானே?’’‘‘என் கேள்விக்கு இதுவா பதில்... எங்கெங்கேயோ போயிட்டீங்களே அங்கிள்!’’‘‘எங்கேயும் போகலம்மா... தெளிவாத்தான் பேசிக்கிட்டு இருக்கேன். நான் என் ஆயுள் பற்றி ஒரு தப்புக்கணக்கு போடணும். அப்படி போட்டாதான் உங்க தாத்தாவான இவர்கிட்ட வரமுடியும். அப்படி ஒரு தப்புக்கணக்கை போட வச்சதும் விதிதான்.

அதுதான் உங்களை எல்லாம் காட்டி என்னைப் பேச வச்சிக்கிட்டிருக்கு. தெரிஞ்சோ தெரியாமலோ, இந்தக் காலப் பலகணி பற்றி உங்களுக்கும் தெரிஞ்சு போச்சு. வெளிய ஒரு கூட்டத்துக்கும் இதைப்பற்றி தெரியும். ஆக மொத்தத்துல விரல் விட்டு எண்ண முடிஞ்ச நபர்களுக்குத்தான் இப்ப இது தெரியும்.

மற்றபடி இதைப் பத்தி துளிகூட இந்த உலகத்துக்குத் தெரியாது. தெரிய வந்தா நிச்சயம் பெரிய அளவுல விபரீதம் உருவாயிடும். ஆளுக்கு ஆள் இதைக் குறி வச்சா அவ்வளவுதான்! ஆகையால இப்ப நாம எடுக்கப்போற முடிவு சரியானதா, தெளிவானதா இருக்கணும்!’’ - வள்ளுவர் ஒரு வழியாக தன் கருத்தைச் சொல்லி முடித்தார்.

‘‘போதும்... எங்க நீங்க செத்துப் போய் இந்த வீட்ல பிணம் விழுந்துடுமோன்னு நான் பயந்துகிட்டே இருந்தேன். நல்லவேளை... தப்பிச்சோம்! இந்தப் பலகணி, தலகாணின்னு எந்த கருமாந்தரமும் வேண்டாம்.



இதை எடுத்துக்கிட்டு கிளம்புங்க. இதைத் தூக்கிப் போடறதும் போடாததும் உங்க விருப்பம். எங்கள இதுல கூட்டு சேர்த்துக்க வேண்டாம். நல்ல நேரத்துல புறப்படுங்க!’’ - அதுவரை மௌனமாக இருந்த பத்மாசினி, ஒரே போடாகப் போட்டாள். கிட்டத்தட்ட  அனந்தகிருஷ்ணன் எண்ணமும் அதேதான். எனவே, மனைவியை ஒப்புதலோடு பார்த்தார்.

வள்ளுவர் அதைக் கேட்டு கோபப்படாமல் சிரித்தார். ஆனால் கணபதி சுப்ரமணியனையே பார்த்தபடி இருந்தாள் ப்ரியா. அவரும் ஒரு முடிவோடு அவளைத்தான் பார்த்தார்.‘‘என்ன தாத்ஸ்... அம்மா புலம்பியதைக் கேட்டீங்களா... என்ன செய்யப் போறீங்க?’’‘‘உங்கம்மா கிடக்கறாம்மா... எனக்கு இது அபூர்வமான வாய்ப்பு - என்ன சொல்றே?’’‘‘நான் நினைச்சதை சொல்லிட்டீங்க...’’

‘‘என்ன நினைச்சதை சொல்லிட்டீங்க? இதைக் கண்டுபிடிக்கறவங்க 27 நாள்ல செத்துடுவாங்கன்னும் சொல்லியிருக்கார். உன் தாத்தாவை சாகச் சொல்றியா?’’ - பத்மாசினி விடுவதாயில்லை.‘‘அம்மாடி மருமகளே! முதல்ல அந்தப் பலகணி கிடைக்குதான்னு பார்ப்போம். அப்புறம் என் சாவைப் பற்றி யோசிக்கலாம். அர்த்தமில்லாம நூறு வருஷம் வாழறதைவிட அர்த்தத்தோட நூறு மணி நேரம் வாழறது போதுமானது!’’- என்றார் தீர்க்கமாக.

‘‘அப்ப நான் புறப்படறேன். என் உதவி இந்த விஷயத்துல எப்ப தேவைப்பட்டாலும் சொல்லுங்க... முடிஞ்சதை செய்யறேன். ஒரு விஷயத்தை மட்டும் அழுத்தமா சொல்லிக்கறேன். இது மாயமோ, மந்திரமோ இல்லை. உலகம் உருண்டைன்னு கண்டுபிடிச்ச மாதிரி, வருஷத்துக்கு 365 நாள்தான்னு வகுத்த மாதிரி, மாசம், வாரம், நாள், கிழமை, மணி, நிமிஷம் நொடின்னு காலத்துக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிய மாதிரி, இதுவும் ஒரு விஞ்ஞான விஷயம்தான்.

நம் ஒவ்வொருவர் மேலயும் ஒரு காலக்கணக்கு இருக்கு. பிறக்க ஒரு நேரம் மாதிரி, இறக்கவும் ஒரு நேரம்! ஆனா, அது எப்போ எனத் தெரியாது. தெரியாததை தெரிஞ்சுக்க நிச்சயம் ஒரு வழிமுறை இருந்தே தீரணும். நமக்கு அது தெரியலைங்கறதால, அதை ‘இல்லவே இல்லாத ஒண்ணு’ன்னு சொல்லிட முடியுமா? இப்படிப்பட்ட கேள்விகள்தான் விடையை நோக்கிப் பயணிக்க வைக்குது.

ஒவ்வொரு விஞ்ஞானியும் இப்படிக் கேட்டுக் கேட்டுத்தான் தங்களோட இலக்கை அடைஞ்சாங்க. இந்தக் காலப் பலகணியை ஒரு கணக்குப் பெட்டகமா கருதி தேடிக் கண்டுபிடிங்க. வரலாறுல நம்ம பெயர் மட்டுமில்ல... நம்ம முன்னோர்கள் பெயரும் பதிவாகட்டும். நம்ம நாட்டை ஞான பூமின்னு சொல்றதை நாம இந்த காலப் பலகணி கொண்டு நிரூபிப்போம்!’’ என்று ஒரு சொற்பொழிவே நிகழ்த்திய வள்ளுவர் புறப்பட்டார்.

‘‘அய்யா, உங்கள உங்க வீட்ல நானே கொண்டுபோய் விடறேன்’’ எனும்போது வர்ஷன் வந்து நின்றான். ஆச்சரியம், அதிர்வு என்று இரண்டும் கலந்த கலவையாகப் பார்த்தான்.‘‘என்னடா பாக்கறே... என் நம்பிக்கை வீண் போகல. உடனே ‘எல்லாமே பொய்’ங்கற மாதிரி நினைக்காதே. வள்ளுவர் ஜோசியம் அவருக்குப் பலிக்கலை. தப்புக் கணக்கு போட்டுட்டார்!’’ என்றாள் ப்ரியா.

‘‘இது தப்புக்கணக்கு இல்ல ப்ரியா. இதுதான் சரியான கணக்கு!’’ - என்று கவிதையாகத் திருத்தினான்.‘‘சரி, வா! இவரை இவர் வீட்ல கொண்டுபோய் விட்டுட்டு வருவோம்!’’ - என்று புறப்பட்டாள்.வாசல் நோக்கிச் செல்லும்போது வேலைக்காரி முத்தழகு ஒரு தினுசாகப் பார்த்தாள். அவளுக்கும் அவர் செத்துவிடுவார் என்பது தெரிந்திருந்தது.

 சாகாமல் சிரித்தபடி இவர் செல்வது எப்படி என்று தெரியவில்லை. இதைப் பற்றி பேசினால் ‘ஒட்டுக் கேட்கறியா?’ என்று கோபிக்கலாம். எனவே, மௌனமாக வெறித்தாள். கார் வெளியேற, ‘இரண்டு நாளா இந்தக் கிழவன் இந்த வீட்டை ஒரு மாதிரி ஆக்கிட்டான்’ என்று வாட்ச்மேன் தங்கவேலு முணுமுணுத்துக்கொள்ள, முத்தழகுவிற்கு ஒரு போன் வந்தது.

- தொடரும்...

இந்திரா சௌந்தர்ராஜன்
ஓவியம்: ஸ்யாம்