டகால்டி அசால்ட் சூர்யாவெங்கட் பிரபு சொல்லும் சீக்ரெட்ஸ்

வெங்கட் பிரபு டைரக்ட் செய்ய ஆரம்பித்தபோது சினிமா மார்க்கெட்டில் எங்கே பார்த்தாலும் சிரிப்பொலி. எல்லோரிடமும் எழுந்த கேள்வி ‘இந்தப் பார்ட்டி தாக்குப் பிடிப்பாரா?’ இப்போது ‘டாப்’ ஹீரோக்கள் எல்லோருக்கும் சார்தான் டாப் ஃபேவரிட்! ஆச்சரியங்களை நடத்திக் காட்டும் வெங்கட் பிரபு... இந்த முறை இறங்கியிருப்பது சூர்யாவின் ‘மாஸ்’.

‘‘பொதுவா காமெடிதான் நம்ம கோட்டையா இருந்தது. இப்போ ஆக்‌ஷன் முரசையும் சேர்த்து அதிர விட்டிருக்கோம். ஏன்னா, சூர்யா அண்ணா ஹீரோவாச்சே... அதுவும் ‘மாஸ்’ ஹீரோவாச்சே! பார்த்தீங்களா, சூர்யாவுக்குத்தான் அடைமொழியே இல்லை. அஜித் ‘தீனா’ படத்தில் நடிச்சு கிடைச்சது ‘தல’. இப்போ சினிமாவில் ‘தளபதி’ன்னா அது விஜய்தான். அப்படி ஒரு பெயர் சூர்யாவுக்கு வராமலேயே போயிருச்சு. எனக்கெல்லாம் வருத்தம். எதற்கும் குறைஞ்சவர் இல்லை. யதார்த்தமா பின்னுவார். மெட்ராஸ் பையன்னு கொண்டு வந்தா நல்லா இருக்கும்.

எனக்கு நல்ல தலைப்பு புடிச்சா போதும்னு தோணிச்சு. ரெண்டு மூணு தலைப்பு சொன்னா, ‘நீங்க ரெண்டு பேரும் சேர்றதுக்கு இன்னும் பெரிசா, இன்னும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா, இன்னும் ‘மாஸா’ வேணும்’னு சொன்னாங்க. எனக்கு  அந்த ‘மாஸ்’ என்ற வார்த்தையே பிடிச்சது. மளமளன்னு காட்சிகள் விரிந்து, கதைக்களம் மனசிற்குள் வந்தது. மாஸான இடங்கள் கதையில் நிறைய இருந்தது. எனக்கு எப்பவும் என் ஹீரோக்களின் ரசிகர்களைக் குளிர்விக்கணும். ‘நம்ம ஆளை சரியாக பயன்படுத்தியிருக்கார்டா’னு வாய் விட்டுச் சொல்லணும். அது மாதிரி ஒரு முயற்சிதான் அஜித்துக்கு ‘மங்காத்தா’, நம்ம சூர்யா அண்ணாவிற்கு ‘மாஸ்’!’’ - ஃபுல் ஸ்விங்கில் இருக்கிறார் டைரக்டர் வெங்கட் பிரபு.

‘‘எப்படி சிக்கினார் சூர்யா?’’‘‘எப்பப் பார்த்தாலும் எங்கே பார்த்தாலும் ‘என்னடா தம்பி, ஸ்கிரிப்ட் ஒண்ணும் கிடைக்கலையா?’ன்னு தோளைத் தட்டி சிரிச்சிட்டுப் போவார். எனக்கு ‘சுருக்’னு இருக்கும். ‘மாஸ்’ ஸ்கிரிப்ட் சொன்னதும் அவருக்குப் பிடிச்சது. ஆனால், கொஞ்சம் தயக்கம். ‘ரொம்ப நல்லவன்னு போட்டு வச்சிருக்கிற இமேஜுக்கு கொஞ்சம் இடையூறா இருக்கும்’னார். ‘அட, வெளியே வாங்கண்ணே’ன்னு கூட்டிட்டு வந்தேன். இதுக்கு முன்னாடி இருந்த அவர் படங்களோட ஸ்டைலை ஒதுக்கி வச்சு நடை, உடை, பாடி லாங்வேஜ்னு ஆல்ட்டர் பண்ணிட்டோம். ‘எல்லாத்தையும் மறந்திட்டு வாங்க, ஆடிப் பார்க்கலாம்’னு கூட்டிட்டு வந்துட்டேன். ‘எதுவும் தயாரிச்சிட்டு வரவேண்டாம், எதுக்கும் தயாரா வாங்க’ன்னு சொன்னோம். இப்போ நம்ம ‘மாஸ்’ சூர்யா டகால்டி, ஏமாத்துற, கலீஜ் பண்ற, கலாய்க்கிற, காசு பறிக்கிற, அசால்ட் சூர்யா... எப்பூடி?’’

‘‘என்னங்க, இப்படி மாத்திட்டீங்க சூர்யாவை?’’
‘‘செய்தோம்ல. ‘பிரியாணி’யிலயே சூர்யா நடிச்சா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். இந்த அழகுக்கு பொண்ணுங்களை உஷார் பண்ற மாதிரி இருந்தா எப்படி இருந்திருக்கும்! ஆனால், அவர் அப்படியெல்லாம் நடிப்பாரா? பேசாம நம்ம தம்பி கார்த்திகிட்ட போயிட்டேன். இந்தப் படத்தில், ‘புகை பிடித்தல் உடம்புக்கு தீங்கு விளைவிக்கும்’னு ஒரு காட்சியிலும் வராது. அயிட்டம் பாட்டு கெடையாது. குறைந்த உடைகளில் பெண்கள் நடமாட மாட்டாங்க. பார்ல கிளாஸ்கள் மோதிக்காது. பொண்ணுங்களை திட்டியோ, கேலி பண்ணியோ ஒரு வார்த்தை இருக்காது. குழந்தைகள் கூட பார்க்கலாம். ஆனால், சுவாரஸ்யத்திற்குக் குறைவே இருக்காது. அங்கேதான் இருக்கு... விசேஷம்!’’

‘‘நயன்தாரா, பிரணிதான்னு இரண்டு பேர்...’’
‘‘இரண்டு பேரும் சூர்யாவுக்கு எப்படி, எந்த விதத்தில் வர்றாங்கன்னு பார்த்தால் ஆச்சரியமா இருக்கும். இந்தக் கேரக்டருக்கு நயன் சரியாக இருப்பாங்கனு பட்டதும் அவர்கிட்ட சொன்னேன். உடனே ‘சரி’ன்னு வந்துட்டு, அருமையா நடிச்சுக் கொடுத்தாங்க. பிரணிதாவும் அப்படித்தான். இந்த பார்த்திபன் சார் மேல நமக்கு எப்பவும் ஒரு கண். அவரை சரியா பிடிச்சுப் போட்டால் நினைச்சதுக்கு மேலேயே கொடுப்பார். அப்புறம் என்னை இயக்கிய சமுத்திரக்கனியை நான் இயக்குறேன். கொஞ்சம் வயசும் கம்பீரமும் கூடுதலான வேஷம். சரியா அந்த மேட்டரைப் புடிச்சுக்கிட்டு மேலேறி வந்தார். நம்ம பையன் ப்ரேம்ஜி. அவனுக்கும் இதில் கூடுதல் பெயர் உத்தரவாதம்! ஆர்.டி.ராஜசேகர் கேமரா. வேற இடத்திற்கு படத்தை கொண்டு போய்விட்டார்!’’

‘‘திடீர்னு நல்லவராகிட்டீங்க... பார்ட்டி, ஹோட்டல், டிஸ்கொதேனு இருந்தவரு, சத்தமில்லாமல் அந்த ஏரியாவுக்கு ‘நோ’ சொல்லிட்டீங்க போல..?’’
‘‘17 வயசுலயே படிக்க லண்டன் போயிட்டேன். அங்கே லெக்சர் முடிஞ்சதும் நாங்களும் எங்க வாத்தியாரும் கிடைக்கிற 45 நிமிஷ ப்ரேக்கில் பியர் போட்டுட்டு வந்து மறுபடியும் கிளாஸைத் தொடர்வோம்.

அப்படியிருந்து வளர்ந்த பையன். மெட்ராஸ் வந்த பிறகும் அதைப் பெரிய தவறா நினைக்கலை. இங்கே அதுக்கெல்லாம் அவ்வளவு மரியாதை இல்லைன்னு காலப்போக்கில தெரிஞ்சது. செய்கிற படங்கள், ஹீரோக்கள் நமக்கு கொடுக்கிற மரியாதை, வச்சிருக்கிற நம்பிக்கை, வளர்கிற குழந்தைகள்... இதுக்கெல்லாம் கொஞ்சம் டிஸிப்ளின் தேவையாயிருக்கு. நம்ம குழந்தைகள் கேலி பண்ணுகிற ஒரு மாடலாக நாம ஆகிடக் கூடாது. முழிச்சிக்கிட்டேன். அதனால்தான் இந்த மாற்றம். தம்பி பிரேம்ஜி இன்னும் கல்யாணம் ஆகாததால கொஞ்சம் ஃப்ரீயா திரியிறான். இப்ப அவனும் ‘பிஸி’தான். அதனால் வெளியே புழக்கம் குறைஞ்சி போச்சு. எல்லாத்தையும் பார்த்து கடந்தாச்சு!’’‘‘எல்லா ஹீரோக்களுக்கும் தோஸ்தா இருக்கீங்களே... எப்படி?’’

‘‘ரொம்ப வருஷமா இந்தப் பக்கம்தானே திரியிறோம்? அஜித் ரொம்ப நாளா தெரியும். என் வீட்டை வாஸ்துபடி கட்டிக்க ஏற்பாடு செய்ததுகூட அஜித்தான். ‘ஜி’ படம் பண்ணும்போது ரெண்டு வருஷம் அவர் கூடவே திரிஞ்சேன். எனக்கு பேட்மின்டன் பழகக்கூட அவர்தான் சொல்லிக்கொடுத்தார். என்னை என் வீடு வரைக்கும் பைக்கில் வந்து விட்டுட்டுப் போகிற மனசு கூட அவருக்கு உண்டு. ‘சென்னை-28’ ரிலீஸ் சமயத்துல அவரோட பிறந்தநாளை எங்களுக்காகக் கொண்டாடினார். விஜய் சார் அம்மா, எங்க அப்பா ட்ரூப்பில் பாடியிருக்காங்க.

அந்தச் சமயத்தில் இருந்தே அண்ணன் எனக்குப் பழக்கம். ‘மங்காத்தா’ பார்த்துட்டு வீட்டிற்குக் கூப்பிட்டுப் போய் மனைவியை சமைக்கச் சொல்லி  டின்னர் கொடுத்தார். அந்த மனசெல்லாம் வருமா? அதே மாதிரி சூர்யா அண்ணா, கார்த்தி, ஆர்யா, சிம்பு, தனுஷ் எல்லாருமே நெருக்கம். ஜெயம் ரவி போனை எடுத்தாலே ‘மச்சான்’னு அலறுவான். விஷாலுக்கு போன் செய்தால் பொண்ணு மாதிரி என்னை ‘செல்லமே, டார்லிங்’னு கொஞ்சுவான். இந்த நெருக்கம் இருக்கறதுனாலதான் எனக்கும் அவங்களுக்கும் செட் ஆகிடுது. அதனால்தான் படங்கள் ஸ்பெஷலா வருதோ என்னவோ!’’

- நா.கதிர்வேலன்