செம எனர்ஜி ரஜினிபாலசந்தர் to பா.ரஞ்சித்...


நிஜமாகவே யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. இன்னும் கூடப் பலரால் நம்ப முடியவில்லை. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை இயக்கிய பா.ரஞ்சித், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறாரா? அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் படமெடுக்கும் ரஞ்சித் இம்முறை ரஜினிக்காக மாறுவாரா? அல்லது பெரிய பட்ஜெட்டில் கூட்டணியுடனே களமிறங்கி வந்த ரஜினி இதில் ரஞ்சித்துக்காக மாறுவாரா?

`லிங்கா’ பட விநியோகம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் ஒரு முடிவுக்கு வந்தபிறகு சூப்பர்ஸ்டார் உடனடியாக அடுத்த படம் பண்ணப்போகிறார் என தகவல் பரவியது. கடந்த 20 ஆண்டுகளில் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்த இயக்குநர்கள் தமிழில் ஐந்து பேர்தான். அவர்கள்- சுரேஷ்கிருஷ்ணா, ஷங்கர்,  சுந்தர்.சி, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோர்.

சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமா எத்தனையோ மாற்றங்களைக் கண்டுவிட்டது. அதனால் இம்முறை இந்த வட்டத்தி லிருந்து வெளியே வந்து இன்றைய இளம் இயக்குநர்களுக்கும் அவர்  வாய்ப்புத் தரப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததும் பலரும் கதைகளோடு  அணுகியிருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் சினிமா கேரியரில் ஒரு மைல்கல், `பாட்ஷா’. அதில் அடித்தட்டு மக்களில் ஒருவராக வந்து அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்திருந்தார் ரஜினி. அப்படியொரு கதைதான் இந்த முறை ரஜினி எதிர்பார்த்தது.

 `அட்டகத்தி’, `மெட்ராஸ்’... இந்த  இரண்டிலுமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலையும் அரசியலையும் அற்புதமாகச்  சொன்னவர் ரஞ்சித். அடுத்து அவர் சூர்யாவை இயக்குகிறார் என்றது  கோடம்பாக்கம். ஆனால், ரஜினிக்கு கதை சொல்லச் சொன்னால் கசக்குமா என்ன! தன் ஸ்டைலில் விறுவிறுப்பான அரசியல் கதை ஒன்றை ரெடி செய்து, ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவிடம் அதைச் சொல்லியிருக்கிறார் ரஞ்சித். `‘அப்பா எதிர்பார்க்குறது இப்படி ஒரு சப்ஜெக்ட்தான்’’ என்ற சௌந்தர்யா, ரஜினி - ரஞ்சித் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஒன்லைன் கேட்டதுமே ரஜினி, `வெரிகுட்’ என பச்சைக் கொடி காட்டிவிட்டார். 

ரஞ்சித் கையில் ஏற்கனவே ஃபுல் ஸ்கிரிப்ட்டும் ரெடி என்பதால், ‘‘உடனே ஆரம்பிச்சிடலாம்... தயாரிப்பாளர் தாணுவை போய்ப் பாருங்க...’’ என்றிருக்கிறார் ரஜினி. தமிழ் இயக்குநர்கள் எல்லோருக்குமே ரஜினிக்கு படம் பண்ணுவது பெரிய கனவு. அது நிறைவேறிய சந்தோஷத்தை தன் குருநாதர் வெங்கட்பிரபுவிடம் சொல்லி வாழ்த்து பெற்றிருக்கிறார் ரஞ்சித். தன் நெருங்கிய நண்பர்களுக்கும் பார்ட்டி கொடுத்திருக்கிறார்.

ஆந்திர மக்களின் நாயகனாக வலம்வந்த என்.டி.ராமராவ், அரசியலிலிருந்து முதல்வர் நாற்காலிக்குப் போனவர். இடையில் அரசியலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தபிறகு ‘மேஜர் சந்திரகாந்த்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார் என்.டி.ஆர். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒரு முதிய அதிகாரி, தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் கதை. ரஜினிக்கு என்.டி.ஆரையும் பிடிக்கும்; இந்தப் படத்தையும் பிடிக்கும். இந்தியில் அமிதாப் இப்படித்தான் `சர்க்கார்’ போன்ற படங்களில் தனது வயதுக்கு ஏற்ற கேரக்டர்களில் நடிக்கிறார்.

ரஜினியிடம் ரஞ்சித் சொன்னது இதுபோன்ற ஒரு அழுத்தமான கதைதான். தன் வயதுக்கேற்ற ஒரு மெச்சூரிட்டியான கேரக்டரில் ரஜினி நடிக்கும் படம் இது. சாணக்கியனாக இருந்து ராஜதந்திரத்தின் மூலம் அநீதிகளை வீழ்த்தும் நாயகனாக ரஜினி வருகிறார். படத்தில் அவருக்கு சண்டைக்காட்சிகள் இல்லை. ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் ரொம்பவே கம்மிதான். ஆனாலும் விறுவிறுப்பு குறையாமல், சராசரி ரஜினி ரசிகர்களையும் வசீகரிக்கும்; இணையத்தில் இருந்தபடி இன்டர்வெல் முடிவதற்குள்ளாக படத்துக்கு விமர்சனம் எழுதும் இன்றைய டெக்கிகளையும் ஈர்க்கும்.

45 நாட்கள் ரஜினி கால்ஷீட் கொடுத்திருக்கிறார். மீதி 45 நாட்களில் ரஜினி இல்லாத போர்ஷன் படமாக்கப்பட்டு, 90 நாட்களுக்குள் படத்தை முடித்துவிடத் தீர்மானித்திருக்கிறார்கள். மலேசியாவில் கதை ஆரம்பிக்கிறது என்பதால், அங்கே விரைவில் துவங்குகிறது ஷூட்டிங். அநேகமாக வரும் தீபாவளியிலேயே படம் ரிலீஸ் ஆகலாம் என்கிறார்கள்.

கிட்டத்தட்ட 25 வருடங்களாக ரஜினியை வைத்து  படம் பண்ணிவிட வேண்டும் என தாணு முயற்சி செய்து வருகிறார்.  புரொட்யூசர்ஸ் கவுன்சில் தலைவராக இருந்து, `லிங்கா’  விநியோகஸ்தர்களுக்கான செட்டில்மென்ட் பிரச்னையை சுமுகமாக  முடித்துக் கொடுத்தது தாணுதான்.

இந்த விவகாரத்தை அவர் அக்கறையோடு கையாண்ட விதத்தைப் பார்த்து ரஜினிக்கு அவர்மீது பெரு மதிப்பு வந்திருக்கிறது. அதற்கு நன்றிக்கடனாக தாணுவுக்கு இந்தப் படத்தை அவர் செய்கிறார். ஈராஸ் நிறுவனத்திற்கான சில கமிட்மென்ட்களுக்காகவே ரஜினி இப்போது படம் பண்ணும் நிலையில் உள்ளார். தவிர, தாணுவின் படம் என்பதால் இதன் ரிலீஸ் சமயத்தில் ‘லிங்கா’ பட பிரச்னைகளை விநியோகஸ்தர்களோ, தியேட்டர் உரிமையாளர்களோ மீண்டும் எழுப்ப மாட்டார்கள் என நம்புகிறார் ரஜினி. 

இந்த இடைப்பட்ட காலத்தில் ரஜினி படத்தை இயக்குவதாக மூன்று இயக்குநர்கள் பற்றி பேச்சு எழுந்தது. அவர்களில் முக்கியமானவர் ராகவா லாரன்ஸ். ‘காஞ்சனா 2’ பார்த்துவிட்டு பேசும்போது, கலகலப்பாக ஒரு படம் பண்ணுவது பற்றி இருவரும் பேசினர். ஆனால் இது ஆரம்ப கட்டத்திலேயே இருக்கிறது. ‘‘ஷங்கருடன் ரஜினி இணைந்து ‘எந்திரன் 2’ செய்கிறார். ஷங்கருக்கு அட்வான்ஸ் கூட கொடுக்கப்பட்டு விட்டது’’ என சிலர் சொல்கிறார்கள். 

`` ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ ரெண்டு படங்களுமே ரஜினியின் இமேஜை லேசாக சரித்துவிட்டன. அவசரமாக ஒரு நல்ல ஹிட் படம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் ரஜினிக்கு இருக்கிறது. ஷங்கர் படம் கொஞ்சம் டைம் எடுக்கும்.

உடனடியாக ரஞ்சித் படத்தை முடித்துவிட்டு, அதன் பிறகு ஷங்கர் படத்தை ஆரம்பிக்கப் போகிறார் அவர்’’ என்கிறார்கள் அவர்கள். இதேபோல சுந்தர்.சிக்கு அவர் ஒரு படம் பண்ணப் போவதும் உறுதி என ஒரு தரப்பு சொல்கிறது. `அரண்மனை 2’ படத்தை உடனடியாக ஆரம்பிக்கும் சூழ்நிலையில் சுந்தர்.சி இருக்கிறார். அதை முடித்ததும் அவரும் ரஜினியும் இணையலாம் என்கிறார்கள்.

இப்படி புது ஹீரோ போல அடுத்தடுத்து மூன்று படங்களை ரஜினி திட்டமிடுவதாக பேச்சுகள் எழுந்தாலும், ‘‘இப்போது ரஜினி நடிக்க இருப்பது ஒரே ஒரு படத்தில்தான். அநேகமாக அதுவே அவரது கடைசி படமாக இருக்கலாம்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ‘‘ரஜினிக்கு இப்போது நடிப்பதில் விருப்பமே இல்லை.

ஆனால் ‘லிங்கா’ படத்தின் கசப்பான நினைவுகளோடு நடிப்புக்கு ‘குட் பை’ சொல்ல அவர் தயாராக இல்லை. அழுத்தமான ஒரு வெற்றியைக் கொடுத்துவிட்டு ஒரு சூப்பர்ஸ்டாராகவே விடைபெற நினைக்கிறார். அதுதான் பா.ரஞ்சித் படம்’’ என்கிறார்கள் அவர்கள்.பாலசந்தரில் ஆரம்பித்து பா.ரஞ்சித்தில் வந்து நிற்கிறார் ரஜினி.

- மை.பாரதிராஜா