நாட்டு விதை யோகநாதன்



“விவசாயி என்னைக்கு விதையைக் காசு கொடுத்து கடையில வாங்கினாரோ, அன்னைக்கே விவசாயம் நம்ம கையை விட்டுப் போயிருச்சு. விதையைக் கைப்பற்றிட்டா, ஒட்டுமொத்த உணவுச் சந்தையையும் கைப்பற்றிடலாம்ங்கிற கம்பெனிகளோட திட்டம் பலிச்சுப் போச்சு. உரம், பூச்சிமருந்து, விதைன்னு விவசாயியை சந்தைக்குள்ள முடக்கி கடன்காரனா மாத்தி மொத்த விவசாயத்தையும் அழிச்சுட்டாங்க. நம்ம விவசாயத்தை மீட்டெடுக்கணும்னா, விதையைக் காப்பாத்தணும். அதுக்கான முன்னடியைத்தான் நான் எடுத்து வச்சிருக்கேன்...’’

- ஆவேசமும் அக்கறையுமாகப் பேசுகிறார் ‘நாட்டுவிதை’ யோகநாதன். முசிறியை அடுத்த திருநெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த யோகநாதன், நம்மாழ்வாரின் சீடர்களில் ஒருவர். நாடெங்கும் சுற்றித் திரிந்து நாட்டுக் காய்கறிகளின் விதைகளைச் சேகரிக்கிறார். அவற்றை தன் வயலில் விளைவித்து விதை பெருக்கி மீண்டும் விவசாயிகளுக்கு வழங்குகிறார். இவ்விதம் 50க்கும் மேற்பட்ட நம் மண்ணுக்கே உரித்தான நாட்டுக் காய்கறிகளின் விதைகளை மீட்டெடுத்திருக்கிறார் இவர்.

ஆப்பிள் மாதிரி செழுமையும் குண்டுமாக இருந்த தக்காளி, ஊதாவும் வெண்மையும் கலந்து கைப்பிடி அளவுக்கு விளைந்த மணப்பாறை கத்தரிக்காய், பாம்பைப் போல நீண்டு சுருள்பிடித்து நிற்கும் ஒலக்கூர் புடலை... இப்படி நம் மண்ணின் மணம் வீசும் ருசி மிகுந்த காய்கறி ரகங்களை எல்லாம் தின்று செரித்து விட்டன ஹைபிரிடு காய்கறிகள். நீளவாக்கில் வரும் பெங்களூர் தக்காளியை கீழே வீசினால், உடையாமல் குதித்து மேலெழும்புகிறது. புளிப்பும் இன்றி இனிப்பும் இன்றி சப்பென்று இருக்கிறது. ‘கும்’மென்று பருத்திருக்கும் கத்தரியில் கசப்பைத் தவிர வேறெந்த சுவையும் இல்லை. புடலை, வெண்டை, பாகை என இன்று சந்தைக்கு வரும் 95 சதவீத காய்கறி ரகங்கள் ஹைபிரிடுகள்.

ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கொண்டு வந்து கொட்டி விவசாயியை கடன்காரனாக நிறுத்திய நிறுவனங்கள், அடுத்து விதைகளின் மீது கண்வைத்து விட்டன. பாரம்பரியமாக விதைகளைச் சேமித்து வைத்துப் பழக்கப்பட்ட விவசாயிகள் இப்போது ஹைபிரிட் விதைகளுக்கு கையேந்தி நிற்கிறார்கள். இந்த ஹைபிரிடு விதைகளில் விளையும் காய்கறிகளிலிருந்து விதைகள் எடுக்க முடியாது. ஒவ்வொரு முறையும் விவசாயி விதையைப் பணம் கொடுத்தே வாங்க வேண்டும். அதுவும், கொள்ளை விலை.

‘‘நம்ம உணவுச்சந்தையை குறிவச்சு பல வருடங்களாவே ஒரு சர்வதேச அரசியல் நடந்துக்கிட்டிருக்கு. இன்னைக்கு உலகம் முழுவதுமே நிறுவனங்களின் ஆட்சிதான் நடக்குது. அரசாங்கம் நிறுவனங்களுக்குத் துணை போகுது. நிலங்களை மலடாக்கி, உரம் - பூச்சிக்கொல்லிக்கு அடிமையாக்கினாங்க. விதையையும் அபகரிச்சுட்டா ஒட்டுமொத்த உணவுச்சந்தையும் வசமாகிடும். அதுக்கான வேலைகள் முழுமை அடைஞ்சிடுச்சு. எங்க அப்பா காலத்துல, எந்தச் செடியில காய் சுரப்பா இருக்கோ, அதை நல்லா முத்த விட்டு விதையை எடுத்து, சாணியில புதைச்சோ, வைக்கோல்ல முடிஞ்சோ கோட்டை கட்டி வச்சுக்குவோம். தகுந்த சீசன்ல எடுத்து விளைவிச்சா காய்ச்சுத் தள்ளும்.

குப்பையும் சாணியும்தான் உரம். அதிகம் பூச்சி தீண்டுனா, வேப்பங்கொட்டையை அரைச்சு ஊத்துவோம். மருந்துக்கு மருந்தாவும் ஆயிடும். பூச்சியையையும் விரட்டிரும். நல்லா சாகுபடி பண்ணிக்கிட்டிருந்த விவசாயிகளை சந்திச்சு ‘இன்னும் நீங்க நிறைய சம்பாதிக்கலாம்ன்னு ஆசை காட்டி இந்த ஹைபிரிடு விதைகளை இலவசமா கொடுத்து பரப்பி விட்டாங்க.

வேளாண்மை அதிகாரிகளும் அதுக்கு உடந்தையா இருந்தாங்க. ஹைபிரிடு ரகங்கள் நல்லாக் காய்ச்சவுடனே விவசாயிங்க அதுக்கு அடிமையாகிட்டாங்க. ஆனா, விதை எடுக்க முடியலே. முதல்ல இலவசமாக விதையைக் கொடுத்த நிறுவனங்கள் அதுக்கப்புறம் கொள்ளை விலை வச்சாங்க. உரம், பூச்சிமருந்தை விடவும் இன்னைக்கு விதை பெரிய விலையா மாறிடுச்சு.

தன் நிலத்துல என்ன விதைக்கணும் என விவசாயிதான் தீர்மானிக்கணும். ஆனா நம்ம நாட்டுல கம்பெனிக்காரன் தீர்மானிக்கிறான். அவங்க என்ன கொடுக்கிறாங்களோ, அதைத்தான் போட வேண்டியிருக்கு. எந்த விஷத்தையெல்லாம் கொட்டச் சொல்றாங்களோ, அதையெல்லாம் கொட்ட வேண்டியிருக்கு.

அதைத்தான் நாம திங்குறோம். வரக்கூடாத நோயெல்லாம் வருது. அதிக விளைச்சலுக்கு ஆசைப்பட்டு விவசாயிகளும் கம்பெனிகளோட சூழ்ச்சியில சிக்கிட்டாங்க. இந்திய விவசாயத்தை அழிக்கிற ஆயுதமா விதை மாறிடுச்சு. கம்பெனிக்காரங்க விதையை தர மறுத்தா நாம விவசாயமே செய்ய முடியாது. அந்த நிலையிலதான் இப்போ நிக்குறோம்...’’ - கவலையாகப் பேசுகிறார் யோகநாதன்.

யோகநாதன் இப்போது ஒரு விதை வங்கியைப் பராமரித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முசிறியில் விதைத்திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு நாட்டு விதைகளை வழங்குகிறார். அதில் விதைகளைப் பெறும் விவசாயிகள் அடுத்தாண்டு இன்னொரு மடங்கு சேர்த்து விதைகளைத் தரவேண்டும். ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

இதுதவிர நாடெங்கும் பயணம் செய்து நாட்டுவிதைக் கண்காட்சிகளை நடத்துகிறார். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறார்.
‘‘நிறைய நிலம் வச்சு விவசாயம் செஞ்ச குடும்பம் எங்களோடது. காலப்போக்குல எல்லாத்தையும் வித்துட்டு, ஒத்திக்கு வாங்கி உழுகிற நிலைக்கு வந்துட்டோம். எனக்கு பெரிசா விவசாயத்துல நாட்டமில்லை. பிளஸ் 2 முடிச்சுட்டு ஹோட்டல் வேலைக்குப் போயிட்ேடன். ஒருமுறை நம்மாழ்வார் அய்யாவோட பேச்சைக் கேட்டேன். நம் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிஞ்சு கிடக்குன்னு தெரிஞ்சுச்சு.

எல்லாத்துக்கும் தீர்வு, நல்ல உணவை உற்பத்தி பண்றதுதான்னு முடிவுக்கு வந்தேன். திரும்பவும் விவசாயத்துக்கு வந்துட்டேன். அய்யா கூடவே சுத்த ஆரம்பிச்சேன். மேலக்கொண்டை சுப்பிரமணி யன்னு ஒருத்தரை நம்மாழ்வார் அய்யா அறிமுகம் செஞ்சார். ‘இவர்கிட்ட நாட்டுக் காய்கறி விதைகள் இருக்கு. இதை வச்சு விதைகளைப் பெருக்கு... விவசாயிகளுக்குக் கொடு...’ன்னு அவர்தான் இந்தப் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்.

இப்போ இது ஒரு இயக்கமா வளர்ந்து நிக்குது. ஒலக்கூர் புடலை, மணப்பாறை கத்தரி, சிந்தம்பட்டி பொன்னிக்கத்தரி, பொய்யூர் கத்தரின்னு நம்ம மண்ணுக்குரிய நிறைய பாரம்பரிய ரகங்களை மீட்டுக் கொடுத்திருக்கோம். முதல்ல இலவசமாத்தான் கொடுத்தேன். இப்போ சிறு விலை வச்சுக் கொடுக்கிறேன். ஹைபிரிட் புடலை விதை கிலோ 8 ஆயிரத்துல இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை விக்கிறாங்க.

நான் நம் நாட்டு ரகத்தை 800 ரூபாய்க்குக் கொடுக்கிறேன். ஹைபிரிட் வெண்டை விதை 2500 ரூபாய். நான் 200 ரூபாய்க்குத் தர்றேன். 60 கோடிப் பேருக்கும் மேல விவசாயத்தை நம்பியிருக்கிற நம்ம நாட்டுல தரமான பப்பாளியை உருவாக்க முடியலைன்னு சொல்றாங்க. தம்மாத்துண்டு தைவான் நாட்டுல இருந்து விதையைக் கொண்டு வர்றாங்க. கிலோ 1 லட்சம்ங்கிறாங்க.

 நாங்க தரமான நாட்டுப் பப்பாளி விதையை 400 ரூபாய்க்குத் தர்றோம். விலைங்கிறது பொருளோட மரியாதைக்காக! என் நோக்கம் பணமில்லை. விவசாயிகளோட மனநிலை மாறிப்போச்சு. இலவசமா கொடுக்கிற பொருள் தரமில்லைன்னு நினைக்கத் தொடங்கிட்டாங்க. அதுக்காகத்தான் விலை. எல்லா நிலத்துலயும் நம் நாட்டுக்காய்கள் விளையணும்.

மண்ணுக்கு மட்டுமில்லாம மனுஷங்களுக்கும் அதுதான் நல்லது. நூற்றுக்கணக்கான காய்கறி விதைகளை இன்னும் சேகரிக்க வேண்டியிருக்கு. அடுத்த தலைமுறைக்கான பெரும் சொத்து அதுதான்...’’ விதை மூட்டையைச் சுமந்துகொண்டு வயல் நோக்கி நடந்தபடியே சொல்கிறார் யோகநாதன். 60 கோடிப் பேருக்கும் மேல விவசாயத்தை  நம்பியிருக்கிறநம்ம நாட்டுல தரமான பப்பாளியை உருவாக்கமுடியலைன்னு  சொல்றாங்க. தம்மாத்துண்டு தைவான்
நாட்டுல இருந்து விதையைக் கொண்டு  வர்றாங்க.

- வெ.நீலகண்டன்
படங்கள்: சுந்தர்