ரகசியம்



வாசுதேவன் தன் ஹோட்டல் பக்கம் வந்து ரொம்ப நாளாகிறது. எல்லாம் அவர் மகன் ராஜா பார்த்துக்கொள்கிறான். அவரை விட லாபகரமாகவே தொழில் நடத்துகிறான். ஒருநாள் மதியம் சும்மா பொழுது போகாமல் ஹோட்டல் பக்கம் வந்தார் வாசுதேவன்.

சப்ளையர்கள், மாஸ்டர்கள் என பணியாளர்கள் எல்லோரும் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். முதலாளியைக் கண்டதும் அவர்கள் முகத்தில் கலவரம். காரணம், வியாபாரத்திற்கு முன்கூட்டியே சாப்பிடுவது அவருக்குப் பிடிக்காது. கடைசியாக 3 மணிக்குத்தான் எல்லோரும் சாப்பிட வேண்டும்.

வாசுதேவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அடக்கிக்கொண்டவர், மகன் ராஜாவின் அறைக்குப் போனார். அவனும் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ‘‘ஏண்டா, மணி ஒண்ணு கூட ஆகல, இன்னும் ஒரு வியாபாரம் கூட நடந்திருக்காது. அதுக்குள்ள நீங்க எல்லாம் உட்கார்ந்து தின்னுக்கிட்டு  இருக்கீங்க..?’’ என்றார் கோபத்தோடு!

‘‘அப்பா! வேலைக்காரன் அருமையா, பொறுமையா வேலை செய்யணும்னா அவன் வயிறு நெறஞ்சி இருக்கணும். வீட்டுல இருந்து வர்ற சாப்பாட்டை நிறுத்திட்டு, நானும் இவங்க கூட சாப்பிடுறதால, மாஸ்டர்ங்க தனி கவனத்தோட சமைக்கிறாங்க. ஏதாவது தப்பு இருந்தாலும் வியாபாரத்துக்கு முன்னாடி திருத்திக்கறோம்!’’ என்றான் ராஜா.மகனின் சக்ஸஸ் ரகசியம் வாசுதேவனுக்குப் புரிந்தது.   

வி.அங்கப்பன்