புதுசா நாடு... கொட்டாய போடு!



நம்ம மெரீனா பீச்சில் இருந்து அடையார் வரை இருக்கும் ஏரியாவை தனியொரு நாடாக்கினால் எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட அவ்வளவு சின்ன நாடுதான் லிபர்லேண்ட். உலகின் மிகப் புதிய நாடு. கடந்த ஏப்ரல் 13 அன்றுதான் இதை சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறார்கள்.

கொடி, சின்னம் எல்லாம் ரெடி! சிட்டிசன்கள்தான் இன்னும் ஒன்றிரண்டு டஜனைத் தாண்டவில்லை. எனவே, முதலில் இங்கு குடியேறும் 100 பேருக்கு குடியுரிமை ஃப்ரீ என ஆஃபர் கூடப் போட்டிருக்கிறார்கள்!

‘என்னங்க, ஷாப்பிங் மால்ல கூல் டிரிங்க்ஸ் ஆஃபர் மாதிரி சொல்றீங்க?’ என பேஜார் ஆகிறீர்களா? உலக நாடுகள் எல்லாமே இந்த நியூஸைப் பார்த்து இப்படித்தான் காலரைக் கடித்துக் கொண்டிருக்கின்றன.

 ஒன்றுமில்லை... ஐரோப்பாவில் செர்பியாவுக்கும் குரோஷியாவுக்கும் இடையே யாரும் உரிமை கோராமல் கிடந்த காட்டுப்பகுதிதான் இது. மொத்தம் 7 சதுர கிலோமீட்டர். மனிதர்களே கிடையாது. டானூப் எனும் நதி வழியாக மட்டுமே இந்தப் பகுதியை ரீச் பண்ண முடியும். செக் குடியரசைச் சேர்ந்த சமூக ஆர்வலரான விட் ஜெடிகா என்பவரின் முயற்சியால்தான் இது தனி நாடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸோ, இப்போதைக்கு குடியரசுத் தலைவர் அவர்தான்.

‘‘உலக நாடுகள் எங்கேயும் சமத்துவம் இல்லை. அமைதி இல்லை. அரசியல்வாதிகளால் அவை அழுக்காகிவிட்டன. இனி அதை சரி செய்ய முடியாது. அதனால்தான் நாங்கள் தனியாக ஒரு முன்மாதிரி நாட்டை உருவாக்க ஆரம்பித்துவிட்டோம்!’’ என்கிறார் விட் ஜெடிகா.இங்கே யாரும் குடியேற வரலாம். அவர்கள் கம்யூனிஸ்ட், நாஜி என எந்தக் கொள்கைகளையும் தூக்கி வரக் கூடாது... அவ்வளவு தான் நிபந்தனை. வருபவர்கள் தங்குவதற்கு தற்காலிக டென்ட்டும், உணவும், மதுவும், படுக்கையும் கொண்டு வந்துவிட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

‘வாழு வாழவிடு’ என்ற குறிக்கோளைக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் இன்று குடியேறுகிறவர்கள் நாளை வானளாவிய கட்டடங்களில் சொகுசு வாழ்க்கை வாழலாம் எனக் கனவு காணுகிறார்கள் வருங்கால பிரஜைகள்.இன்னும் இந்த நாட்டை உலக நாடுகள் எதுவும் அங்கீகரிக்கவில்லை.

அங்கீகரிக்கப்பட்டால் உலகின் மிகச் சிறிய நாடுகள் பட்டியலில் இது மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். (வாட்டிகன் சிட்டியும், மொனாகோவும் இதைவிடவும் சிறியவை!) அங்கீகாரம் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை... ‘முதல் நூறு பேருக்கு குடியுரிமை ஃப்ரீ’ என்றதும் அதற்காக 3 லட்சம் பேர் விண்ணப்பித்துவிட்டார்களாம்!
எல்லாரும் நம்மளை மாதிரிதான் போல!

- ரெமோ